Aran Sei

‘மக்கள் என்ன அதானியின் அடிமையா?’ – அதானி விமான நிலையம் எனும் பெயர் பலகைக்கு சிவசேனா கண்டனம்

மும்பை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் சிலை அருகே, ‘அதானி விமான நிலையம்’ என்று எழுதப்பட்ட பெயர் பலகையை எதிர்த்து சிவசேனா தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை விமான நிலையத்திற்கு சத்திரபதி சிவாஜி மகாராஜாவின் பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், அதானி விமான நிலையம் என்று பெயர் பலகை வைக்கப்பட்டதற்கு எதிராக முழக்கங்களை சிவசேனா தொண்டர்கள் எழுப்பியுள்ளனர்.

அக்கட்சியை சேர்ந்த சிலர் அருகில் அமைந்துள்ள கிழக்கு அதிவிரைவு நெடுஞ்சாலைக்கு வந்து முழக்கங்களை எழுப்பியதால், வடக்கு-தெற்கு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று மகாராஷ்ட்ர காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விவசாய பெண்களின் நாடாளுமன்றம் : எங்களின் உணவை ஏன் அம்பானிக்கும் அதானிக்கும் விற்கிறீர்களென ஒன்றிய அரசிற்கு கேள்வி

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் கடம், “அதானி குழுமம் மும்பை விமான நிலையத்தை நிர்வகிக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விமான நிலையத்தின் பெயரில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. இது மகாராஷ்டிரா மக்களை அவமதிக்கும் செயல். இதை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இப்போராட்டம் குறித்து  பேசிய மும்பை தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சவந்து, “அவர்கள் நாட்டையே விலைக்கு வாங்கியுள்ளார்களா? நாட்டு மக்கள் எல்லோரும் அவர்களின் அடிமையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை சர்வதேச விமான நிலையமானது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து ஆகிய இரண்டிலும் நாட்டில் உள்ள இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும்.

மும்பை சர்வதேச விமானநிலையத்தின் நிர்வாகத்தை ஜிவிகே குழுமத்திடம் இருந்து, தாங்கள் கைப்பற்றிவிட்டதாக, கடந்த மாதம் அதானி குழுமம் அறிவித்தது.

இதன் வழியாக, இந்தியாவின் சரக்கு விமான போக்குவரத்தில் 33 சதவீதத்தை கட்டுப்படுத்தும் நிறுவனமாக அதானி குழுமம்  உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

Source; pti, deccanherald.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்