Aran Sei

“மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகிறோம்” – சிவசேனா அதிரடி அறிவிப்பு

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி போட்டியிடும் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவசேனாவின் நிலைபாட்டை, அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சை ராவத், மும்பையில் பத்திரிகையாளர்களிடம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, சஞ்சை ராவத் தனது டிவிட்டர் பக்கத்தில் “கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரேவுடன் நடந்த ஆலோசனைகளுக்குப் பிறகு, மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் சிவசேனா போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் விரைவில் கொல்கத்தாவை அடையவுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

சுமார் 30 ஆண்டுகள், இடதுசாரிகளின் கோட்டையாக திகழ்ந்த மேற்கு வங்காளத்தை, 2011ஆம் ஆண்டு மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. அதைத்தொடர்ந்து, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 42 இடங்களில், இடதுசாரிகளால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியாத நிலையில், காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கு அடுத்தபடியாக பாஜக 18 இடங்களை கைப்பற்றியது.

பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளும், காங்கிரசும் மம்தா பின் அணிதிரள வேண்டும் – திரிணாமுல் காங்கிரஸ் அழைப்பு

அடுத்த சில மாதங்களில், மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையிலேயே கடும்போட்டி நிலவிவருகிறது. மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் இணைந்து களம் காண்கிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை இந்துக்களுக்கு எதிரான கட்சியாகவும், தாங்களே இந்துக்களுக்கு ஆதரவான கட்சியாகவும் பாஜக அடையாளம் காட்டி வந்த நிலையில், இந்துத்துவத்தை ஆதரிக்கும் சிவசேனா, மேற்கு வங்கத்தில் களம் இறங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்