Aran Sei

பாஜகவை எதிர்கொள்ள மூன்றாவது அணி – சந்திரசேகர ராவ் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு

பாஜகவிற்கு எதிரான மூன்றாவது அணியை ஒன்றிணைத்து, தலைமை ஏற்று நடத்துவதற்கான முழு திறன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவிற்கு உள்ளது என்று சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

நேற்று (பிப்பிரவரி 20), மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரேவை அவரது மும்பை இல்லத்தில் சந்தித்த தெலுங்கு ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ், அவருடன் மதிய உணவு அருந்தியுள்ளார். அப்போது, பாஜகவிற்கு எதிராக மூன்றாவது அணியை ஒன்றிணைப்பது தொடர்பாக பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு எதிரான மூன்றாவது அணி: மஹாராஷ்டிர முதலமைச்சரை நேரில் சந்தித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ்

இந்நிலையில், இச்சந்திப்பு குறித்து பேசியுள்ள சஞ்சய் ராவத், “மாற்றம் காலத்தின் தேவை என்பதை நானும் மகாராஷ்டிர முதலமைச்சரும் ஒப்புக்கொண்டோம். சந்திரசேகர் ராவ் மிகவும் கடினமாக உழைக்க கூடிய தலைவர். அவர் தனது அரசியல் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். அனைவரையும் ஒன்றிணைத்து வழிநடத்தும் திறன் அவருக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.

“இச்சந்திப்பின் போது, ​​தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ்வும் சிவசேனா தலைவர்  உத்தவ் தாக்கரேவும் நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இரண்டு முதலமைச்சர்களும் அரசியல் தலைவர்களை விரைவில் சந்திப்பார்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களை மம்தா பானர்ஜி மார்ச் மாதம் சந்திக்கவுள்ளார்’- திரிணாமூல் காங்கிரஸ்

தற்போது நடைபெற்று வரும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இடையில், பாஜக அரசியல் எதிரிகளை குறிவைத்து செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் ராவத், “அதுதான் அவர்களின் வழக்கம். தோல்வி நெருங்கும் தருவாயில், ​​இதுபோன்ற செயல்களை செய்வார்கள். உத்தரப் பிரதேசத்தில் பாஜக தோல்வியடைந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்