Aran Sei

‘வருண்காந்திக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் தீர்மானம் இயற்ற வேண்டும்’ – சிவசேனா வலியுறுத்தல்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்திக்கு ஆதரவாக, அனைத்து விவசாயிகள் சங்கங்களும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரியுள்ளது.

இதுதொடர்பாக, இன்று(அக்டோபர் 11), சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தலையங்கம் வெளியாகி உள்ளது. அதில், “நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்ட உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நடந்த கொடூரமான சம்பவத்தைப் பார்த்த பிறகும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கோபம் எழவில்லையா?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

“நாட்டில் பகைமையை பரப்புவதற்கான முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது. வருண் காந்தி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரனும் சஞ்சய் காந்தியின் மகனுமாவார். லக்கிம்பூர் கொடூரத்தைப் பார்த்த பிறகு, அவரது இரத்தம் கொதித்தது. அதனால், அவர் தனது கருத்தைத் தெரிவித்தார். அதன் பொருட்டு தனக்கு வரும் விளைவுகளைக் குறித்து யோசிக்காமல், அரசியல் தைரியத்தை வருண் காந்தி காட்டினார். விவசாயிகள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார்” என்று தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுங்கள் – உத்தரப்பிரதேச முதலமைச்சருக்கு வருண் காந்தி கடிதம்

மேலும், அனைத்து விவசாயிகள் சங்கங்களும் வருண் காந்தியைப் பாராட்டி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சாம்னாவின் தலையங்கத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில், பாஜக தேசிய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்ட வருண் காந்தி, லக்கிம்பூர் கேரியில் நடந்த நீதிக்கான போராட்டத்தில் திமிர்பிடித்த அதிகாரம் செலுத்தும் நபர்களால் ஏழை விவசாயிகளின் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் இதற்கு எந்த மத சாயமும் பூசத் தேவை இல்லை என்றும் கூறியிருந்தார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்