Aran Sei

‘ஆணவத்தை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு உரிமைகளை வழங்குங்கள்’ – ராகுல் காந்தி

Image Credits: National Herald

ணவத்தை விட்டுவிட்டு போராடிவரும் விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கிய பேரணி) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் போராட்டம் இன்று 6 வது நாளாக நீடிக்கிறது.

டெல்லிக் காவல்துறை அதிகாரிகள் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி விஞ்ஞான் பவனில் இன்று மாலை 3 மணிக்குப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்ந்து 6 நாட்களாக நடந்துவரும் போராட்டத்தைக் குறித்து ஆலோசனை நடத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இல்லத்திற்கு மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நரேந்திர சிங் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் சென்றுள்ளதாக ‘லைவ் மின்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், விவசாயிகளின் கடின உழைப்பிற்காக அனைவரும் கடன்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நீதி வழங்குவதன் மூலம் மட்டுமே இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “உணவை உற்பத்தி செய்பவர்கள் சாலைகள் மற்றும் வயல்களில் அமர்ந்து போராடி வருகிறார்கள், டிவியில் உரைகள் வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் கடின உழைப்புக்கு நாம் அனைவரும் கடன்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு நீதி மற்றும் உரிமைகளை வழங்குவதன் மூலம் மட்டுமே இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். அவர்களை தவறாக நடத்துவதன் மூலமோ, தடியடிகளால் அடிப்பதன் மூலமோ அல்லது அவர்களுக்கு எதிராகக் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசுவதின் மூலமோ இதனை சாதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

“பதவி நாற்காலியின் ஆணவத்திலிருந்து கீழே இறங்கி விவசாயிகளுக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதை குறித்து சிந்தியுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்