Aran Sei

40 ராணுவ வீரர்களின் மரணத்தை கொண்டாடும் ’தேசியவாதி’ – அர்னாப்பை கிண்டல் செய்த சசி தரூர்

credits : the indian express

டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோசாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடல் இணைக்கப்பட்டுள்ளது.

சுமார் 1000 பக்கங்களுக்கு நீண்டுள்ள இந்த உரையாடல், தற்போது கைது செய்யப்பட்டுள்ள, பார்க் அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதோ தாஸ் குப்தாவுக்கும், அர்னாப் கோசமிக்கும் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. காவல்துறை சார்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்த உரையாடல்களின் முக்கிய பகுதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால் டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது.

அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழிநுட்ப பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கௌரவ் பந்தி (@GauravPandhi) தனது டிவிட்டர் பக்கத்தில், அர்னாப் கோசமிக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் நடந்து உரையாடலின் ஒரு பகுதியை பகிர்ந்துள்ளார்.

ராணுவ ரகசியங்களை முன் கூட்டியே அறிந்திருந்தாரா அர்னாப்? – டிஆர்பி முறைகேட்டில் வெளிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரம்

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடந்துள்ள அந்த உரையாடலில், அர்னாப் கோசாமி ஒரு மிகப்பெரிய விஷயம் நடைபெறவுள்ளது என்று கூறுகிறார். அதற்கு தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் பதில் அளிக்கிறார்.

அர்னாப் கோசாமியின் முறைகேடு அம்பலம் – டிஆர்பி வழக்கில் சிக்கும் தமிழ் செய்தி சேனல்?

அதற்கு பிரதோ தாஸ், இந்தத் தேர்தல் சமயத்தில் அந்தப் பெரிய மனிதருக்கு (நரேந்திர மோடிக்கு) இது சாதகமாக இருக்கும் என்றும், அவர் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார் என்றும் கூறுகிறார்.

அதன் பிறகு, இது வெறும் தாக்குதலா? அல்லது அதை விடப் பெரியதா? என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும் காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட, என்று பதில் அளிக்கிறார். அத்துடன், பாகிஸ்தானைப் பொறுத்தவரை, மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தாக்குதல் அமையும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அர்னாப் கூறுகின்றார்.

ராணுவ ரகசியங்களை முன் கூட்டியே அறிந்திருந்தாரா அர்னாப்? – டிஆர்பி முறைகேட்டில் வெளிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரம்

அர்னாபுக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்று மூன்று நாள் கழித்து, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள், இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

டிஆர்பி முறைகேடு : அர்னாப் கோஸ்வாமியின் பாதுகாப்பை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதற்கு முன்னர் பிப்ரவரி 14ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 46 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பே இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறிய இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் தாக்குதலை நடத்தியதாக கூறியது. இந்த தாக்குதலின் போதுதான் தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

அர்னாப் கோசாமி மீது தேசவிரோத குற்றச்சாட்டு – பாகிஸ்தானின் சதி என்று கூறுகிறது ரிபப்ளிக் தொலைகாட்சி

இந்நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், ”அர்னாப் கோசாமியின் வாட்ஸ் அப் உரையாடல் தொடர்பாக மூன்று முக்கியமான விஷயங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரியுய்ள்ளார்.

அதில், 1.ஒரு தொலைகாட்சி நிறுவனத்தின் வணிக நோக்கத்திற்காக ராணுவ ரகசியங்களை தெரிவித்தது.

2. சிஆர்பிஎஃப் வீரர்கள் 40  பேர் மரணமடைந்த தாக்குதலை மிகப்பெரிய வெற்றி என ”தேசியவாதி” கொண்டாடியிருப்பது.

3. தவறாக மற்றும் போலியாக சித்தரிக்கபடும் தொலைகாட்சி மதிப்பீட்டுப் புள்ளிகள் (டிஆர்பி) ஆகியவை விசாரிக்கப்பட வேண்டும்” என அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசின் ரகசியம் அர்னாபுக்கு தெரிந்தது எப்படி? – ராஜ்நாத் சிங்கிடம் கேள்வி எழுப்பிய ப.சிதம்பரம்

மேலும், ”இந்தக் கோணத்தில் அரசாங்கம் இந்த விவகாரத்தை விசாரிக்காவிட்டால்  (துரோகங்கள் வெளிவந்து விடும் என்பதால் அரசாங்கம் கண்டிப்பாக விசாரணையை மேற்கொள்ளாது) யார் தான் விசாரிப்பது?  அல்லது இதை வழக்கம் போல மற்றொரு நிகழ்வாக எடுத்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்யலாமா?”  என்று நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சமீபத்தில் அன்வே நாயக் எனும் நபரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் மகாராஷ்ட்ரா அரசாங்கத்தால் அர்னாப் கோசாமி கைது செய்யப்பட்டபோது கடும் கண்டனத்தை பதிவு செய்த பல பாஜக தலைவர்களும் தற்போது கள்ள  மௌனம் காத்து வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுத்துள்ள ரிபப்ளிக் டிவியும் அர்னாப் கோசாமியும், இதில் பாகிஸ்தான் சதி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்