Aran Sei

பிறநாட்டு உள்விவகாரங்களை நாம் பேசியதில்லையா? – இங்கிலாந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசை சாடிய சசி தாரூர்

ங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தியது சரிதான் என்றும் ஜனநாயக நாடுகளின் பிரதிநிதிகள் இது போன்ற மற்ற நாடுகளின் பிரச்சனைகளுக்குக் கருத்து தெரிவிக்க உரிமையுண்டு என்றும் காங்கிரஸ் மூத்த தலைவரும் வெளியுறவத் துறை முன்னாள் இணையமைச்சருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்ற விதிகளின்படி, 1 லட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துக்களை பெற்ற மனுக்கள் மீதான விவாதம் நடத்தப்படும். அதன்படி, தாராளவாத கட்சி உறுப்பினர் குர்ச் சிங் உருவாக்கிய, “விவசாயிகளின் பாதுகாப்பையும் பத்திரிகை சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும்படி இந்திய அரசை வலியுறுத்தவும்” என்ற மனு 1.15 லட்சம் கையெழுத்துகளை பெற்றதைத் தொடர்ந்து, மார்ச் 8 ஆம் தேதி இந்த விவாதம் நடைபெற்றது.

விவசாயிகள் போராட்டம் பற்றிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் – ஒரு சார்பானது என்று இந்தியா கண்டனம்

இந்த விவாதத்தைத் தொடர்ந்து உடனடியாக லண்டனில் உள்ள இந்திய தூதரகம், “இந்த விவாதம் ஒரு சார்பாக நடந்ததாகவும், உண்மைகளை அடிப்படையாக கொண்டிராத பொய் கூற்றுகள் சொல்லப்பட்டதாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் மீதும் அதன் நிறுவனங்களின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும்” விவாதத்திற்குக் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பாக, நேற்று (மார்ச் 10) ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய சசி தரூர், “இந்திய நாடாளுமன்றத்தில் நாம் பாலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சனைகளைப் பேசியுள்ளோம். அதுபோல், பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களைப் பற்றி நாம் பேசியதே இல்லையா? அதே உரிமை பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கும் உண்டு தானே.” என்று தெரிவித்துள்ளார்.

விவசாயச் சட்டங்கள் பற்றிய பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் – உள்விவகாரங்களில் தலையிடுவதாக இந்தியா கண்டனம்

மேலும், “இங்கிலாந்து அரசானது தனது பணியைச் செய்திருக்கிறது. அதை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால் மற்றொரு கண்ணோட்டத்தையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். ஜனநாயக நாடுகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு, இது போன்ற மற்ற நாடுகளின் பிரச்சனைகள் குறித்து தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தச் சுதந்திரம் உண்டு.” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்