Aran Sei

சரத் பவார் தலைமையில் இன்று தேசிய தலைவர்கள் கூட்டம்: பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி உருவாகிறதா?

Image Credits: DNA India

தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான கூட்டணியை ஒருங்கிணைப்பது தொடர்பான கூட்டம்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தலைமையில், இன்று (ஜூன் 22) அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

ஜூன் 12 ஆம் தேதி, செய்தியாளர்களை சந்தித்து பேசிய நவாப் மாலிக், “அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிராக உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரு பரந்தப்பட்ட கூட்டணியை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த தேசிய அளவிலான கூட்டணியின் அவசியம் குறித்தும், அதற்குப் பாஜகவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான பணி குறித்தும்  தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பேசியிருக்கிறார்.” என்று நினைவூட்டியிருந்தார்.

வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி – இந்திய அளவில் ஒருக்கிணைக்கும் தேசியவாத காங்கிரஸ்

மேலும், சரத் பவார் இல்லத்தில் அவரும் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரும் சந்தித்தது குறித்து பேசுகையில்,  “பிரசாந்த் கிஷோர் தரவுகள் மற்றும் புள்ளிவிவரங்களை குறித்து நன்கு அறிந்தவர். இருவரிடையே நடந்த மூன்று மணி நேர விவாதத்தின் போது, ​​இது நிச்சயமாக கருத்தில் கொள்ளப்பட்டு, பேசப்பட்டிருக்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டின் முக்கிய தலைவர்களுடனான கூட்டம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், “22 ஜூன் 2021 செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு, எங்கள் கட்சித் தலைவர் சரத் பவார் சாஹேப் புது தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளார். பின்வரும் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தில், நம் நாட்டின் தற்போதைய நிலைகுறித்து விவாதிப்பட உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

யஷ்வந்த் சின்ஹா, பவன் வர்மா, சஞ்சய் சிங், டி ராஜா, பாரூக் அப்துல்லா, நீதிபதி ஏ.பி.சிங், ஜாவேத் அக்தர், கே.டி.எஸ் துளசி, கரண் தாப்பர், அசுதோஷ், அட்வா. மஜீத் மேமன், வந்தனா சவான் எம்.பி., எஸ்.ஒய் குரேஷி முன்னாள் சி.இ.சி, கே.சி.சிங், சஞ்சய் ஜா, சுதீந்திர குல்கர்னி, கொலின் கோன்சால்வ்ஸ், பொருளாதார நிபுணர் அருண்குமார், கன்ஷ்யம் திவாரி மற்றும் பிரிதிஷ் நந்தி ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

பாஜகவிற்கு எதிராக கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள இந்நேரத்தில் சரத் பவாரின் இந்த முன்னெடுப்பு கவனம் பெற்றுள்ளது.

இதுகுறித்து, அண்மையில் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த யஷ்வந்த் சின்ஹா ​​தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தற்போது முக்கியமானது. அதுவாக நடக்கும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது. யார் தயாராக இருக்கிறோமோ அவர்களோடு இதை தொடங்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  விருப்பமுள்ளவர்களை இணைத்துக் கூட்டணியமைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்