Aran Sei

பணியிடத்தில் பாலியல் வன்கொடுமை – பாலியல் தொழிலாளருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தொழில் உரிமையாளர் ஒருவருக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் வழக்கைப் பதிவு செய்திருந்த பாலியல் தொழிலாளர் வழக்கை வென்று, ஆறு இலக்கத் தொகையை நஷ்ட ஈடாகப் பெறுகிறார் என பிபிசி தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தைச் சேர்ந்த பாலியல் தொழிலாளர் ஒருவர், ஒரு தொழில் உரிமையாளருக்கு எதிராகப் பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்திருந்தார். நியூசிலாந்தின் மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்ட பிறகு, மனித உரிமை நடவடிக்கைகளுக்கான அலுவலகம் பாதிக்கப்பட்டவர் சார்பாக வாதாடியது. வழக்கு விசாரணைக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவருக்கு உண்டான உளவியல் பாதிப்பு மற்றும் வருவாய் இழப்பை ஈடு செய்ய, ஆறு இலக்கத் தொகையை அளிக்க வேண்டும் என ஆணையிட்டிருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் மனித உரிமை நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தின் இயக்குநர் மைக்கேல் டிம்மின்ஸ், “இந்த நஷ்ட ஈடு, யார் என்ன துறையில் வேலை செய்தாலும், அவர்கள் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகப்படக் கூடாது என்பதை நினைவுபடுத்தும். தொழிலாளர்களின் இந்த உரிமைகளை நிறுவனங்களின் உரிமையாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று ஸ்டஃப் எனும் இணையதளத்திற்குத் தெரிவித்திருக்கிறார். இவ்வழக்கில் தொடர்புடையவர்களின் பெயர்கள், அடையாளங்கள், பாதுகாப்பு கருதி வெளியிடப்படவில்லை.

இதற்கு முன் அந்நாட்டின் மனித உரிமைகள் தீர்ப்பாயம், பாலியல் தொழிலாளர்களும் நியூசிலாந்தின் மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது. மேலும், “பாலியல் தொழில் நடக்கும் இடங்களில், பாலியல் தொனியிலான பேச்சுக்கள், நடத்தைகள் ஒடுக்குமுறை, துன்புறுத்தல் நோக்கில் பயன்படுத்தப்படுவதுண்டு. இப்படியான பேச்சுகள், நடத்தைகள் குற்றமெனத் தவறானவை என்று கருதப்படவில்லை என்றால், நாம் பாலியல் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை மறுத்ததாக ஆகிவிடும்” என்றும் தெரிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டில் நியூசிலாந்து, பாலியல் தொழிலுக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்