Aran Sei

குஜராத் – பிரான்ஸ் அதிபரின் ஸ்டிக்கர்களை ஒட்டியவர்கள் மீது வழக்கு

Image Credits: DNA India

ஸ்லாமிய குடியிருப்புப் பகுதியான அகமதாபாத்தின் ஜுஹாபுராவில், பிரெஞ்சு அதிபர்  இம்மானுவேல் மக்ரோனைச் சித்திரிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக ஒரு காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில், முகமது நபியின் கேலிச்சித்திரங்களைக் காட்டிய சர்ச்சை தொடர்பாக இம்மானுவேல் மக்ரோன் பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்புகளை எதிர்கொண்டுள்ளார்.

இஸ்லாம் குறித்து சர்ச்சை கருத்து – பிரான்ஸ் அதிபருக்கு வலுக்கும் எதிர்ப்பு

இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி), தொற்று நோய்கள் சட்டம் மற்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் பல்வேறு பிரிவுகளின் கீழ் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 7 பேரில், ஜுஹாபுராவுக்கு அருகில் உள்ள, அகமதாபாத் மாநகராட்சியின், மக்தாம்புரா வார்டைச் சேர்ந்த, காங்கிரஸ் கவுன்சிலர் ஹாஜி மிர்சாவும் ஒருவர். நவம்பர் 1-ம் தேதி, அவர்கள் ஒரு ரோட்டின் மீது ஸ்டிக்கர்களை ஒட்டும் செயலில் ஈடுபட்டதாகக் காவலர்கள் கூறியுள்ளனர்.

“காங்கிரஸ் கவுன்சிலர் ஹாஜி மிர்சாவும், முன்னதாகப் பிடிபட்ட மூவர் உட்பட 6 பேரும், பிரெஞ்சு அதிபரைச் சித்திரிக்கும் ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் ஈடுபட்டனர். அவர்கள் சுமார் 150 ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்” என்று வேஜல்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டிருந்த மூன்று பேரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

“செவ்வாய்க்கிழமை இரவு, ஐபிசி பிரிவு 188 (பொது ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட கட்டளைக்குக் கீழ்ப்படியாமை), 269 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள அலட்சியச் செயலில் ஈடுபடுதல்), 270 (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ள தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபடுதல்), அத்துடன் தொற்று நோய்கள் சட்டம் மற்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

“அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை” என்று கூறிய ஆய்வாளர் “விசாரணை நடந்துவருகிறது. மேலும் இந்தச் செயலில் தொடர்புடைய அனைத்து நபர்களும் கைது செய்யப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்