Aran Sei

கறுப்புச் சட்டத்தில் நடக்கும் வேட்டை – லவ் ஜிகாத் என்ற பெயரில் 7 பேர் கைது

Image Credits: Deccan Herald

த்தரபிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்துக்கு எதிராக இயற்றப்பட்ட புதிய சட்டத்தின் கீழ் பரேலியை சேர்ந்த 21 வயது இளைஞர் டிசம்பர் 2-ம் தேதி கைதானார். மாவு மற்றும் முசாபர்நகர் பகுதிகளிலும் சிலர் மீது வழக்கு பதிவானது. தற்போது, இந்த சட்டத்தின் கீழ் சீதாபூர் மாவட்டத்தில் ஏழு பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இஸ்லாமிய இளைஞர்கள் இந்து பெண்களை திருமணம் செய்துகொள்வதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் இந்துத்துவ வலது சாரிகள் அதை ‘லவ் ஜிகாத்’ என்று அழைக்கிறார்கள். திருமணத்தின் மூலம் மதம் மாறுவது குற்றம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

`லவ் ஜிகாத் தடைச் சட்டம் நீதியை மீறும் செயல்’ – முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி

இதன்படி, திருமணத்திற்காகவோ அல்லது பலவந்தமாகவோ மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரபிரதேச அரசு சட்டம் இயற்றியது.

இச்சட்டத்தின் கீழ் சீதாபூரின், தம்போர் காவல் நிலையத்தில் எட்டு பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“நவம்பர் 24-ம் தேதி ஒரு சிறுமி கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்தனர். ஒரு இளைஞர் வீட்டை விட்டு வெளியேற அச்சிறுமியை தூண்டியதாக கூறப்பட்டது. இதன் பெயரில் அந்த இளைஞர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று வட சீதாப்பூர் பகுதியின் காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் டிக்ஷித் கூறியுள்ளார்.

“நவம்பர் 27ஆம் தேதி, கட்டாய மதமாற்று தடை சட்டத்தின் 2020 பிரிவுகளும் முன்னரே பதிவான வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது” என்று ராஜீவ் டிக்ஷித் தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். சிறுமியுடன் சென்ற இளைஞரின் உறவினர்களும் கைதாகியுள்ளதாக இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இளைஞரை கைது செய்து அந்த பெண்ணை மீட்க முயற்சிகள் நடப்பதாக ராஜீவ் டிக்ஷித் தெரிவித்துள்ளார். இருவரையும் தேட உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முசாஃபர்நகரில், ஒரு திருமணமான இந்து பெண்ணை மதம் மாற கட்டாயப்படுத்த முயன்றதாக இரண்டு இஸ்லாமிய ஆண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிலும் புதிய சட்டத்தின் கீழ் உள்ள பிரிவிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய தண்டனைச் சட்டத்தின் 504 (மிரட்டல் குற்றம்), 506 மற்றும் 120 பி (சதி குற்றம்) ஆகிய பிரிவுகளின் கீழும் இவர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

மாவு மாவட்டத்திலும் ஒருவர் மீது சட்டவிரோத மதமற்று தடை சட்டத்தின் 3 மற்றும் 5 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. சிராயகோட் காவல் நிலையத்தில், முக்கிய தங்க வியாபாரி ஒருவர், திருமணத்திற்கு முன் தனது மகளை ஒருவர் கடத்திச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் பெயரில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உபி : லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டத்தின் கீழ் முதல் கைது

பரேலியில் 21 வயதான உவைஷ் அகமது என்பவர் மீது சட்டவிரோத மதமாற்று தடை சட்டம் முதல்முறையாக பதிவானது. அவர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்