‘சீரம் இந்தியா’வின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கோவாக்ஸின் மருந்து தண்ணீரைப் போன்றது என்று தெரிவித்துள்ளார். இதனை பாரத் பயோடெக் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எலா கண்டித்துள்ளார். பிறகு, இந்தியாவிற்கும் உலகிற்கும் சீராக தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்று கூறி இவ்விரு நிறுவனங்களும் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
‘முதல் கொரோனா தடுப்பூசியை பிரதமர் எடுத்துக்கொள்ள வேண்டும்’ – காங்கிரஸ் அறிவுரை
அதேபோல், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து கோவாக்ஸின் என்ற கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி முற்றிலும் உள்நாட்டு தயாரிப்பு ஆகும்.
தங்களுக்கு முன்னால் மிக முக்கியமான பணி உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றுவதாகும் என்று இந்நிறுவனங்கள் கூறியுள்ளன.
’10 நாட்களில் கொரோனா தடுப்பூசி புதுச்சேரி வரும்’ – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
“தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்துக்கு நன்மை ஏற்படுத்தும். அவை உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தை இயல்புநிலைக்கு விரைவாகக் கொண்டுவருவதற்கும் உதவும். தற்போது இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளுக்கும் அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் உயர் தரமான, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளை விநியோகிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் இரு நிறுவனங்களும் இந்தச் செயலில் முழுமையாக ஈடுபட்டுள்ளோம். மேலும் தடுப்பூசிகளை சீராக விநியோகிப்பதை உறுதிசெய்வது தேசத்துக்கும் உலகத்துக்கும் எங்களது கடமையாகக் கருதுகிறோம். எங்களது இரு நிறுவனங்களும் தடுப்பூசிகளின் மேம்பாட்டு நடவடிக்கைகளைத் திட்டமிட்டபடி தொடர்கின்றன” என்று அந்தக் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாகக் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பான சர்ச்சை குறித்து இரு நிறுவனங்களும் கூட்டு தெளிவுபடுத்தப் போவதாக ஆதார் பூனவல்லா ட்வீட் செய்தார்.
கூட்டு அறிக்கை வெளியிடப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, பாரத் பயோடெக் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து இதே அறிக்கையை ட்வீட் செய்துள்ளது.
ஜனவரி 3-ம் தேதி கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் பயன்பாட்டிற்கு கொண்டுவர மத்திய அரசு அனுமதி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.