Aran Sei

சென்னை பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை அரசு கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

seeman11_0703chn_1.jpg

சென்னை பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும்  திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர்  சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் மக்களின்  வீடுகளை அதிகாரத்தின் துணைகொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேற்றும் ஆளும் திமுக அரசின் கொடுஞ்செயல் அதிர்ச்சியளிக்கிறது. மண்ணின் மக்களை‌ ஒட்டுமொத்தமாகப் பூர்வீக நிலத்தைவிட்டு வற்புறுத்தி வெளியேற்றி, அப்புறப்படுத்தும் இக்கொடுங்கோன்மை  வன்மையான கண்டனத்திற்குரியது.” என்று தெரிவித்துள்ளது.

அழுகுரலின் நெடுங்கதை – கொரோனா காலமும் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர்களும்

மேலும், “அரை நூற்றாண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகரத்தை நிர்மாணிக்க உழைத்த ஆதிக்குடிகளை மண்ணைவிட்டே முற்றாக வெளியேற்றி, அந்நியர்களை ஆக்கிரமிக்கவிட்டதன் விளைவாக, தமிழகத்தின் தலைநகரே வந்து குடியேறியவர்களின் வேட்டைக்காடாக மாறி நிற்கிறது என்பது வரலாற்றுப் பெருந்துயரமாகும்” என்றும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது,”ஆட்சி, அதிகாரத்தைச் சேர்ந்தவர்களும், மேல்தட்டு வர்க்கத்தினரும் சென்னையின் நூற்றுக்கணக்கான நீர்நிலைகளையும், புறம்போக்கு நிலங்களையும் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட வசிப்பிடங்களில் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படாமலும், எவ்வித அதிகார அச்சுறுத்தல்களுக்கு ஆளாகாமலும் நிலைத்து வாழ முடிகிற நிலையில், எதிர்த்துக் கேள்விகேட்க அறியாத பாமரர்களாகிய குடிசைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை  மட்டும் எளிதாக விரட்டியடிப்பதும், அவர்களின் பூர்வீக இடத்திலிருந்து வெகுதூரத்தில், நகரத்திற்கு வெளியே துரத்தியடித்து வாழ்வாதாரத்தை அழித்தொழிப்பதென்பது அரச கொடுங்கோன்மையின் உச்சமாகும்” என்றும்  கூறப்பட்டுள்ளது.

பொருளாதரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது – திருமாவளவன்

மேலும், காலங்காலமாக வாழ்ந்து வருகிற மக்களை, ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ எனக்கூறி அப்புறப்படுத்த முனையும் அரசு.   அதே போல பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்களையும் அப்புறப்படுத்தி அந்நிலங்களை மீட்டெடுத்து உரியவர்களிடம் ஒப்படைக்க முயலுமா?  எனவும் சீமான் தனது அறிக்கையில்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா. அவையின் வரையறையின்படி, 50 ஆண்டுகளுக்கு மேலாக ஓரிடத்திலேயே மக்கள் நீடித்து நிலைத்து வசித்து வந்தால் அவர்களது குடியிருப்புகளுக்கு மாற்றாக, புதிய குடியிருப்புகள் கட்டப்படுகிறபோது ஒவ்வொருவருக்கும் தலா 450 சதுர கிலோமீட்டர் வீதம் ஒதுக்க வேண்டும் என்கிற விதி உள்ளதாகவும், ஆனால், இங்கு அதற்கு நேர்மாறாக, 250 சதுரகிலோ மீட்டரை அதுவும் அவர்களது வாழ்விடத்திற்குத் தொடர்பற்ற இடத்தில் கொடுக்கிறது அரசு. இது ஐ.நா.அவையின் விதிகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும் அந்த அறிக்கையில்  கூறப்பட்டடுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கெதிராக போராடிய விவசாயிகள் உயிரிழந்ததை விசாரிக்க வேண்டும் – எதிர்க் கட்சியினர் மக்களவை சபாநாயகருக்கு கடிதம்

அதுமட்டுமின்றி, மாற்றுக்குடியிருப்புகளையும், வாழ்வாதாரத்திற்கான பொருளாதார வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தராது நிலத்தைவிட்டு அம்மக்களைக் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்துவது அப்பட்டமான மக்கள் விரோதமாகும் என்றும்  அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், “ஆக்கிரமிப்பென்றால், ஆட்சியாளர்களுக்குக் குடிசைகள் மட்டுமே நினைவுக்கு வருவதேன்? பெரிய வணிக வளாகங்கள், உயர்ந்த கட்டிடங்கள், நட்சத்திர விடுதிகள் போன்றவையெல்லாம் சென்னை மாநகருக்குள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறதே, அதன் மீதெல்லாம் இதேபோல முனைப்போடு நடவடிக்கை எடுப்பார்களா? ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா? ஆக்கிரமிப்பு எனும் பெயரில், மக்களின் குடியிருப்புகளை அகற்றும் இவர்கள் அந்தப் பகுதியை என்ன செய்யப்போகிறார்கள்? நீர்வழித்தடமா அமைக்கப் போகிறார்கள்? அங்கு இன்னொரு கட்டிடம்தானே கட்டப்போகிறார்கள்” என்று சீமான் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

இந்நிலையில், ஆட்சியாளர்கள் தாங்கள் செய்தத் தவறினை மறைக்க, அப்பாவி மக்களை வெளியேற்றித் தண்டிப்பதென்பது வாக்களித்து ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்று அந்த அறிக்கையில்  கூறியுள்ளார்.

ஆகவே, சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் மண்ணின் மக்களைச்  சொந்த நிலத்தை விட்டு வெளியேற்றும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட்டு,  அவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே பாதுகாப்பான, நிரந்தர வசிப்பிடங்களை உருவாக்கித் தரவேண்டுமென  நாம் தமிழர் கட்சி தமிழ்நாடு அரசுக்கு  வேண்டுகோள்  விடுத்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்