Aran Sei

விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் பதவியை ராஜினாமா செய்த விவசாயத்துறை அமைச்சர் – மாறுபட்ட வடிவத்தில் போராட்டம்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் நாடாளுமன்றத்தின் இரண்டாம் நாளில் விவசாய அமைச்சராக ஒருவர் நடித்து காட்டியுள்ளார். பின்னர் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் ராஜினாமா செய்துள்ளார்.

கடந்த ஆண்டு இயற்றப்பட்ட மூன்று விவசாய சட்டங்களையும் நீக்கக் கோரி ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், தினமும் 200 பேர் கொண்ட விவசாயிகளின் குழு, ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த டெல்லி காவல்துறை அனுமதி தந்திருந்தது.

ஜூலை 22 தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதிவரை, காலை 11 மணி தொடங்கி மாலை 5 மணிவரை, ஜந்தர் மந்தர் மைதானத்தில் ‘விவசாயிகள் நாடாளுமன்றம்’ நடத்த விவசாயிகளை அனுமதிக்க டெல்லி அரசும் காவல்துறையும் சம்மதித்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் (ஜூலை 22) முதல் விவசாயிகள் நாடாளுமன்றம் நடைபெற்று வருகிறது.

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய விவசாயிகளின் நாடாளுமன்றம்: நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும்வரை நடத்த திட்டம்

இந்நிலையில், இன்று (ஜூலை 24), பஞ்சாபின் முக்த்சரைச் சேர்ந்த எம்பிஏ பட்டம் பெற்ற ரவ்னீத் சிங் பிரார், விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் ஒரு நாள்  ‘விவசாயத்துறை அமைச்சர்’ வேடத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளரான இவர், டெல்லி சிங்கு எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து, தீவிரமாக பங்கேற்று வருகிறார்.

இந்த நாடகத்தில் விவசாயத்துறை அமைச்சர் ரவ்னீத் சிங் பிராருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு முறையும் அவர் விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பதிலை அளிக்கத் தவறியபோதும் வெட்டப்படும்படி நடித்துக்காட்டப்பட்டுள்ளது.

இந்நாடகம் குறித்து பேசிய ரவ்னீத் சிங் பிரார், “ஒரு விவசாய அமைச்சராக, நான் விவசாயிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன். ஆனால், அவர்கள் ஒரு நியாயமான கேள்வியை முன்வைத்தார்கள். அதற்கு என்னிடம் பதில்கள் இல்லை என்று உணர்ந்தபோது, ​​அதைப் புறக்கணிப்பதற்கான தந்திரங்களை நான் கையாண்டேன். மேலும், மற்ற விஷயங்களை கூறி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்தை திசை திருப்பினேன். விவசாயிகளின் வலியை அவர்களின் கண்களில் கண்டுணர்ந்தேன். அவர்களின் பிரச்சினைக்கு நான் தீர்வு காணத் தவறிவிட்டேன். கிசான் ஏக்தா ஜிந்தாபாத் என்று கூறி, எனது ராஜினாமாவை அறிவித்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

மேலும், “விவசாய சட்டங்களில் உள்ள பிரச்சனைகள் என்னவென்று என்னிடம் கேட்கப்பட்டது? அவற்றுள் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குத் தெரியும். அவர்களின் கேள்விகளுக்கு என்னிடம் ஒருபோதும் பதில்கள் இல்லை. விவசாயிகள் தற்கொலைகளைப் பற்றிப் பேசும்போது, நான் ஆக்ஸிஜனைப் பற்றியும், நாங்கள் எவ்வாறு வேலைவாய்ப்பை உருவாக்கினோம் என்பது பற்றிம், டெல்லி பகுதியில் விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக எவ்வாறு கொரோனா தொற்று பரவுகிறது என்பதை பற்றியும் பேசினேன்.” என்று விவசாயிகளின் நாடாளுமன்றத்தில் விவசாயத்துறை அமைச்சராக நடித்த ரவ்னீத் சிங் பிரார் கூறியுள்ளார்.

source; pti

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்