Aran Sei

‘கல்வி,வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்த வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சிறுபான்மை இஸ்லாமியர்களின் ஜீவாதார கோரிக்கையான 3.5விழுக்காடு இடஒதுக்கீட்டை 5 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு எஸ்டிபிஐ. கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பாக, எஸ்டிபிஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்டமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டு முதல் 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று தற்போதைய திமுக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற வன்னியர் சமூகத்தின் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கியுள்ள தமிழக அரசு, தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி உள்ள சிறுபான்மை இஸ்லாமியர்களின் ஜீவாதார கோரிக்கையான 3.5விழுக்காடு இடஒதுக்கீட்டை 5 விழுக்காடாக உயர்த்தித்தர முன்வர வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “நடைமுறையில் உள்ள இஸ்லாமியர்களுக்கான 3.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு தொடர்பிலான வெள்ளை அறிக்கை மூலம் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் தமிழக அரசு வெளியிட வேண்டும். தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கி உள்ள சிறுபான்மை இஸ்லாமியர்களுக்குக் கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் 3.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. எனினும் இஸ்லாமியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப அதனை 5 விழுக்காடாக உயர்த்தித் தர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தும் இந்துத்துவ கும்பல்: பெண்கள் அமைப்புகள் கண்டனம்

“தமிழகம் உள்பட இந்தியாவில் வாழும் சிறுபான்மை இஸ்லாமிய சமூக மக்களின் வாழ்கை சூழல், வாழ்வாதரங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சச்சார் கமிட்டியின் அறிக்கைக்குப் பிறகுதான் இஸ்லாமியர்களின் சமூக பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு விவாத பொருளானது. சச்சார் அறிக்கைக்குப் பிறகும் இஸ்லாமியர்களுக்கான நெருக்கடிகள் அப்படியே இருக்கின்றன. இஸ்லாமியர்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் கல்வி தகுதிகள் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருப்பதாக சச்சார் அறிக்கை சுட்டிக் காட்டிய பிறகும் அதனைச் சரிசெய்வதற்கான மத்திய, மாநில அரசுகளின் தலையீடுகள் தேவையான அளவு இல்லை என்று பேராசிரியர் அமிதாப் குண்டு தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டியின் அறிக்கை சுட்டிக்காட்டியது.” என்று நெல்லை முபாரக் கூறியுள்ளார்.

மேலும், “அரசு வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது என்றும், கடும் முயற்சிகளுக்குப் பின்னரும் கூட, அரசு வேலை வாய்ப்பில் அவர்களின் மொத்த மக்கள் தொகையின் விகிதத்தில் பாதி பங்கை காட்டிலும் குறைவு எனவும் சுட்டிக்காட்டிய குண்டு கமிட்டி அறிக்கையானது, இஸ்லாமியர்களுக்கு சமூக-பொருளாதார வளர்ச்சியின் அனைத்து துறைகளிலும் சமவாய்ப்பையும், சம பங்கீட்டையும் மேம்படுத்தும் வகையில், முறையான இடஒதுக்கீடு வழங்கிக் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை சரி செய்யலாம் என்ற பரிந்துரையையும் அரசுக்கு முன்வைத்தது. இடஒதுக்கீடு என்பது ஒரு சமூகத்தில் பெரிய அளவில் இருக்கும் திட்டமிட்ட பாரபட்சத்தை களைவதற்கான பல்வேறு கருவிகளில் ஒன்று என்றும் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் இந்துத்துவா – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

நீதிபதி சச்சார் கமிஷன் மற்றும் பேராசிரியர் அமிதாப் கமிஷன் அறிக்கைகளை கொண்டு பார்க்கும்போது இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டில் முக்கிய பங்களிக்க வேண்டும் என்பது தெளிவாகின்ற காரணத்தினால், இடஒதுக்கீடின் மீது இடஒதுக்கீடு கொள்கையை நிலைநிறுத்தக் கூடிய சமூக நீதி பாரம்பரியத்தில் வந்த தமிழக முதல்வர் அவர்கள், சிறுபான்மை இஸ்லாமியர்களின் ஜீவாதார கோரிக்கையான 3.5விழுக்காடு இடஒதுக்கீட்டை 5 விழுக்காடாக உயர்த்தித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நெல்லை முபாரக் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்