ஜூன் 03 அன்று கலைஞர் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளை தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக சிறைச்சாலைகளில் 10 ஆண்டுகளைக் கடந்து நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்துவரும் முஸ்லிம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்திட வேண்டும் எனவும், தமிழக அரசின் இந்த நடவடிக்கையில் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் அனைத்து தரப்பு கைதிகளையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளும் தமிழக அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன.” என்று அவர் நினைவூட்டியுள்ளார்.
அடித்துக் கொலை செய்யப்பட்ட இஸ்லாமிய இளைஞர் – கண்டனம் தெரிவித்து டிவீட் செய்தவர் மீது வழக்கு
“கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக சிறைக்கைதிகளை பரோலில் விடுவிக்கவும், நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சிறைக்கைதிகளை கருணை அடிப்படையில் விடுவிப்பது தொடர்பாகவும் மாநில அரசுகள் பரிசீலிக்கலாம் என்று கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வெளியான உச்ச நீதிமன்றத்தின் யோசனையின் அடிப்படையிலும் தமிழக அரசு கருணை அடிப்படையில் பரிசீலித்து, இந்தப் பேரிடர் காலத்தில் கருணை அடிப்படையில் பாரபட்சம் பாராமல் முஸ்லிம் சிறைக்கைதிகள் உள்பட அனைத்து தரப்பு கைதிகளையும் மனிதாபிமான நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றது.” என்று நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
“சிறைச்சாலைகளில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு உயர்மட்டக்குழு அமைத்தும் முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு பரோல் வழங்கப்படவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை யாருக்கும் பரோல் வழங்கப்படவில்லை. இப்போது சிறைச்சாலையில் உள்ள ஜாகீர் உசேன் மற்றும் உமர் பாரூக் ஆகிய இரண்டு முஸ்லிம் சிறைவாசிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இவர்களில் உமர் பாரூக் விசயத்தில் அவரை விடுவிக்க தமிழக அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆகவே, தாமதமின்றி பரிசீலித்து, அவர்களுக்கு நல்ல சிகிச்சை கிடைக்கும் வகையில் உடனடியாக அவர்கள் இருவருக்கும் மருத்துவ விடுப்பு வழங்குவதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு செய்வதோடு, அவர்களுக்குக் கருணை அடிப்படையிலான பலன்கள் கிடைத்திடவும் வழிவகை செய்ய வேண்டும்.” என்று தனது அறிக்கையில் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.
“இந்நிலையில், எதிர்வரும் ஜூன் 03 அன்று முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக சிறைச்சாலைகளில் உள்ள 10 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளைத் தமிழக அரசு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் ஏறத்தாழ 38 முஸ்லிம் சிறைக்கைதிகள் உள்ளனர். 22 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை தண்டனை காலத்தை கழித்துள்ளார்கள். இவர்களில் சிலர் சிறையில் இருந்தபடியே பட்டப்படிப்புகளும், முதுநிலை படிப்புகளும் படித்துள்ளார்கள். இவர்களின் விடுதலையை எதிர்பார்த்து, பெற்றோர்களும், மனைவி மக்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர்.” என்று அவர் கூறியுள்ளார்.
தங்களது சிறு வயது பிள்ளைகளைப் பிரிந்து சிறைக்கு வந்தவர்கள், இன்றைக்கு அந்த பிள்ளைகளின் திருமணம் முடிந்த பின்னரும் தொடர்ந்து சிறைச்சாலையில் உடல் ரீதியான பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றனர் என்றும் விடுதலையை எதிர்பார்த்த பல முஸ்லிம் சிறைக் கைதிகள் சிறைக்குள்ளேயே இறந்து பிணமாகவே வெளிவந்துள்ளனர் என்று நெல்லை முபாரக் குறிப்பிட்டுள்ளார்.
“சிறை தண்டனையைப் பொறுத்தவரை குற்றவாளிகளுக்கு 7 வருட சிறைத் தண்டனையே அவர்கள் திருந்துவதற்கு போதுமானது என காந்தியடிகள் கூறியுள்ளார். ஆனால் முஸ்லிம் கைதிகள் 28 ஆண்டுகளை கடந்தும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அண்டை மாநிலமான கேரளா, ஆந்திராவில் 7 ஆண்டு சிறைத் தண்டனை முடித்தவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் தாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையிலும், அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் குடுமத்தினர் என அனைவரும் ஒவ்வொரு வருடமும் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அதற்கான அறிவிப்பை ஆவலோடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
’இஸ்லாமியர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு; சரிவர நடைமுறைப்படுத்தவில்லை ’ – எம்.ஹெச்.ஜவாஹிருல்லா
“முஸ்லிம் சிறைவாசிகள் அரசு நிர்ணயித்த விடுதலைக்கான அத்தனை தகுதிகளையும் கொண்டவர்கள். இவர்களின் விடுதலை கோரிக்கை என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பல்லாண்டு கோரிக்கையாகும். இந்த விவகாரத்தில் மிகவும் கனிவுடன் கருணைப் பார்வையுடன் முஸ்லிம் சிறைவாசிகளுக்கு விடுதலையை சாத்தியமாக்க வேண்டும்.” என்று தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.