Aran Sei

‘தப்லீக் ஜமாத்தினரை குற்றம் சுமத்தும் போலி சுற்றறிக்கை’ – உண்மைத்தன்மையை அறிந்து செய்தி வெளியிட ஊடகங்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

கொரோனா பரவல் தொடர்பாக தப்லீக் ஜமாத்தினரை மீண்டும் குற்றப்படுத்தும் நோக்கில் போலி சுற்றறிக்கை பரவி வரும் சூழலில் ஊடகங்கள் உண்மைத் தன்மையை அறிந்து செய்தி வெளியிட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

‘குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எதுவும் இல்லை’ – தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் 2வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில் அரசின் திட்டமிடல் இல்லாத காரணத்தால் நாடு முழுவதும் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அனைத்து தரப்பு மக்களும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.

மேலும், ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவில் நிலவிவரும் அபாயகரமான சூழல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்ற நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.அதுமட்டுமல்லாது அனைத்து சமூக மக்களும் இந்த அவலம் நீங்கப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தப்ளிக் ஜமாத் உறுப்பினர்கள் 18 பேர் விடுதலை – சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

இந்நிலையில், கடந்த ஆண்டைப் போல மீண்டும் தப்லீக் ஜமாத்தினரை குற்றம் சுமத்தும் நோக்கில் காவல்துறை சுற்றறிக்கை என்கிற பெயரில் சில போலியான அறிக்கைகளும், செய்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. சில ஊடகங்களும் அதனை அடிப்படையாகக் கொண்டு செய்திகளைப் பிரசுரித்துள்ளன.

இந்தச் சுற்றறிக்கை தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, அது போன்ற எந்தச் சுற்றறிக்கையையோ, செய்தியையோ காவல்துறை தரப்பில் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளதாக நிஜாம் முகைதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தப்லிகி ஜமாத் மீதான வெறுப்பு அரசியல் – பாஜகவும் இனவாத ஊடகங்களும்

“ஊடகங்கள் தப்லீக் ஜமாத்தினரை குற்றம் சுமத்தும்  போலி அறிக்கைகளுக்கு இடம் தராமல், நாடு பேரழிவை எதிர்கொண்டு இருக்கும் சூழலில், சமூக வலைதளங்களில் மத ரீதியில் வெளியாகும் போலியான அறிக்கைகளின் உண்மை தன்மையை அறிந்து செய்திகளை வெளியிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று நிஜாம் முகைதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடர்பாக தப்லீக் ஜமாத்தினரை குறிவைத்து போலியான செய்திகளை வெளியிட்ட ஊடகங்களை உச்ச நீதிமன்றமும், மும்பை உயர் நீதிமன்றமும் கண்டித்த நிகழ்வுகளை மனதிற்கொண்டு, இது போன்ற போலியான செய்திகளுக்கு இடமளித்து மாபெரும் பிழை இழைத்துவிடக் கூடாது என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

source; எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்