ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை தமிழ்நாடு அரசின் அரசாணை கேள்விக்குள்ளாக்குகிறது என்றும் திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இஸ்லாமிய சமூகத்தை தொடர் ஏமாற்றத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பிறந்தநாளை (செப்.15) முன்னிட்டு 700 ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்யும், அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதல்வர் அறிவிப்பு செய்தார். இந்த அறிவிப்பு நீண்டநாள் சிறைவாசிகள் குறிப்பாக இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பை, நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் சிறைவாசிகள் விடுதலை தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியாகியுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த வழிகாட்டல் அரசாணைப் பிரகாரம் பார்த்தால், 7 தமிழர்கள் மற்றும் நீண்டநாள் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை என்பது தமிழக அரசின் தற்போதைய விடுதலை நடவடிக்கையில் சாத்தியமில்லாத ஒன்றாகவே தெரியவருகிறது. அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது.
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இஸ்லாமிய சிறைக்கைதிகள் 10 ஆண்டுகளை கடந்தும் 28 ஆண்டுகள் வரை சிறைகளில் பல்வேறு அவஸ்தைகளுடன் தங்களின் விடுதலையை எதிர்பார்த்தவர்களாக உள்ளனர். விடுதலையை எதிர்பார்த்த பல இஸ்லாமிய சிறைக் கைதிகள் சிறைக்குள்ளேயே இறந்து பிணமாகவே வெளிவந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் தாங்கள் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கையிலும் அவர்களின் பெற்றோர்கள், மனைவி, குழந்தைகள் மற்றும் உறவுகள் என அனைவரும் ஒவ்வொரு வருடமும் அரசு நமக்கு கருணை காட்டும் என்ற எதிர்பார்ப்புடனும் அதற்கான அறிவிப்பை ஆவலோடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால், ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய ஆயுள் சிறைக் கைதிகள் விவகாரத்தில் தமிழகத்தை ஆளும் அரசுகள் தொடர் பாரபட்சத்தையும், ஏமாற்றத்தையும் மட்டுமே இஸ்லாமிய சமூகத்துக்கு அளித்து வந்திருக்கின்றன. எனினும் தற்போதைய திமுக அரசு இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளை மதித்து இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும் என்று ஒட்டுமொத்த சமூகமும் எதிர்பார்த்தது. ஆனால், அந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ள அரசாணை மூலம் தவிடு பொடியாகியுள்ளது.
அதேபோல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைச்சாலையில் அடைபட்டுள்ளனர். அவர்களும், அவர்களின் குடும்பத்தினர் உட்பட ஒட்டுமொத்த தமிழகமும் விடுதலையை எதிர்பார்த்த வண்ணமுள்ளனர். ஆனால், அந்த எதிர்பார்ப்பையும் தமிழக அரசின் அரசாணை ஏமாற்றியுள்ளது.
அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றம் வழங்கிய பல்வேறு தீர்ப்புகளின் அம்சங்கள், தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை குறித்த வழிகாட்டல் அரசாணையில் கணக்கில் கொள்ளப்படவில்லை.
7 தமிழர்கள் மற்றும் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலையைப் பொறுத்தவரை தற்போது சட்டத்தின் தடையோ அல்லது நீதிமன்றத்தின் தடையோ எதுவும் இல்லாத சூழலில், முழுக்க முழுக்க அது தமிழக அரசின் கைகளின் மட்டுமே உள்ள விஷயமாகும். தமிழக அரசு மனம் வைத்தால் பாரபட்சமின்றி அனைவருக்கும் விடுதலையை சாத்தியமாக்க முடியும். ஆனால், கடந்த ஆட்சியில் வெளியிடப்பட்ட அதே வகையிலான அரசாணையே தற்போதும் வெளியிடப்பட்டுள்ளது. சிறைவாசிகள் விவகாரத்தில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையே காணப்படுகின்றது.
சிறைக்கைதிகள் விடுதலையை பொறுத்தவரையில் அவர்களின் குற்றத்தை பார்க்காமல் குற்றவாளிகளின், அவர்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில்கொண்டு விடுதலை செய்ய வேண்டும் என்பதே பொது நியதி.
ஆகவே, கடந்த காலங்களைப் போலல்லாமல், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்யப்பட வேண்டும். மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளுக்கும், 7 தமிழர்களுக்கும் விடுதலையை தமிழக அரசு சாத்தியமாக்க வேண்டும். அதன்படி வெளியிடப்பட்ட அரசாணையை திரும்பப்பெற்று புதிய அரசாணையை வெளியிட்டு, சிறைவாசிகளை தமிழக அரசு விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள இஸ்லாமிய சமூகத்தை தொடர் ஏமாற்றத்திற்கு ஆளாக்கிவிடக் கூடாது எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்வதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.