Aran Sei

சென்னை ஐஐடி மாணவி மரணம்: தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை அமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திஃப் மரணத்தில் இரண்டரை ஆண்டுகளாக விசாரணை தாமதமாகிறது என்றும் தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை அமைத்து மரணத்திற்கான நீதியை பெற்றுத்தர வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த 2019ம் ஆண்டு சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த எம்.ஏ. முதலாமாண்டு மாணவி பாத்திமா லத்திஃப் மரணம் தொடர்பாக புதிய விசாரணைக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவி பாத்திமா லத்திஃப் தனது மரணத்திற்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என குறிப்பெழுதியுள்ள நிலையிலும், பேராசிரியர் மீது இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை. இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், சிபிஐ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. எனினும் தற்போது வரை வழக்கின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

கடந்த காலங்களில் விரைவான மற்றும் நேர்மையான விசாரணைக்காகவே சிபிஐ விசாரணை கோரப்பட்ட நிலையில், சமீப காலங்களாக அதன் விசாரணை முறையானது பல்வேறு ஐயப்பாடுகளை எழுப்புகிறது. தாமதமான விசாரணையின் மூலம் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிக்கப்படுகின்றனரோ என்ற கேள்வி எழுகிறது.

இரண்டரை ஆண்டுகளை கடந்தும் தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் மாணவி பாத்திமா லத்திஃபின் பெற்றோர்கள் நீதிக்காக ஏங்கி வருகின்றனர். இதுதொடர்பாக கேரள முதல்வர் பிரணாயி விஜயனிடம் முறையிட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள கல்வி நிலையங்களில் மதவெறிச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலையில், தமிழ்நாடு தான் பாதுகாப்பாக இருக்கும் என நம்பி சென்னை ஐ.ஐ.டி.யில் தனது மகள் பாத்திமா லத்திஃபை படிக்க வைத்துள்ளனர். ஆனால், துரதிஷ்ட வசமாக சாதி, மதவெறி தலைக்கேறிய, வக்கிர எண்ணங்கொண்ட சில பேராசிரியர்களின் நடவடிக்கையால் தனது மகள் பாத்திமா லத்திஃபை இழந்துள்ளனர் அந்த கேரள பெற்றோர்கள். பாத்திமா லத்திஃப் உயிரோடு இருக்கும் போது அவருக்கு பாதுகாப்பு கிடைக்காத போதும், அவர் மரணத்திற்கான நீதியாவது தமிழகத்தில் இருந்து கிடைக்கும் என்ற பாத்திமாவின் பெற்றோர்களின் நம்பிக்கையை தமிழக அரசு காப்பாற்ற முன்வர வேண்டும்.

ஆகவே, தமிழக அரசு மாணவி பாத்திமா லத்திஃபின் மரணம் தொடர்பாக புதிய விசாரணைக் குழுவை அமைத்து, மாணவி குறிப்பிட்ட பேராசிரியர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், விசாரணைக்கு காலவரையறையும் நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்