Aran Sei

‘கொரோனா ஒழிப்பு பணியில் உள்ள காசநோய் தடுப்பு பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

காசநோய் தடுப்பு பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படாததன் காரணமாக அரசின் முன்களப் பணியாளர்களுக்கான முன்னுரிமைகள், சலுகைகள், திட்டங்கள், நிவாரண உதவிகள் போன்றவை இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கான நிவாரணங்களை கிடைக்கச் செய்திட வேண்டும் என்றும் தமிழக அரசை எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, இன்று (மே 27) எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 2001ம் வருடத்தில் இருந்து காசநோய் தடுப்பு திட்டமானது, செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையில் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிப்பது, பரிசோதனை மேற்கொள்வது, சமூகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதென, பல்வேறு பணிகளில் காசநோய் தடுப்பு திட்டப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் மூலம் பரவும் காசநோய் தொற்றை கூட பொருட்படுத்தாமல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் இவர்கள் தற்போது கொரோனா தொற்று ஒழிப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றார்கள்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘முதல்வரின் காப்பீடு திட்டத்தில் பயன்பெற அலைக்கழிக்கப்படும் கொரோனா நோயாளிகள்’ – விதிகளை எளிமையாக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

“கொரோனா முதல் அலை வீசிய காலம் முதல் தற்போது வரை அவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். எனினும் காசநோய் தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வரும் பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படவில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் இந்த பணிகளின் மூலமாக 150க்கும் மேற்பட்டோர் காசநோயாலும், 75க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று முன்தினம் (மே 26) ஒருங்கிணைந்த விழுப்புரம்-கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியூர் காசநோய் அலகு முதுநிலை மேற்பார்வையாளர் வாசுதேவன் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.” என்று நெல்லை முபாரக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

காசநோய் தடுப்பு பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படாததன் காரணமாக அரசின் முன்களப் பணியாளர்களுக்கான முன்னுரிமைகள், சலுகைகள், திட்டங்கள், நிவாரண உதவிகள் போன்றவை இவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளா அவர், தமிழக அரசு காசநோய் தடுப்பு பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, முன்களப் பணியாளர்களுக்கான நிவாரணங்களை கிடைக்கச் செய்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘தமிழக அரசின் அனுமதியின்றி ஆக்ஸிஜனை பிற மாநிலத்திற்கு வழங்கிய மத்திய அரசு’ – எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

மேலும், “அவர்களின் கோரிக்கையான, கொரோனா தொற்று ஒழிப்பில் ஈடுபடும் காசநோய் தடுப்பு பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள், சிறப்பு ஊதியம், பயணப்படி ஆகியவை மாவட்ட காசநோய் தடுப்புப் பிரிவு துணை இயக்குநர்கள் மூலமாக கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டு தொற்றால் உயிரிழக்கும் காசநோய் தடுப்பு பணியாளர்களுக்குத் தமிழக அரசு நிவாரண உதவி அளிப்பதோடு, அனைத்து காசநோய் பணியாளர்களுக்கும் அரசு அல்லது தனியார் நிறுவனத்தின் மூலம் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.” என்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்