Aran Sei

தமிழக இளைஞர்களின் உயிரைப் பறிக்கும் ஆன்லைன் விளையாட்டுகள்

கோவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால், ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாவட்டம் சீர நாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார் (28). இவர் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஆன்லைன்  சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். ஆரம்ப கட்டத்தில் அதில் பணம் நிறைய சம்பாதித்ததால் சூதாட்டங்களில் அவருக்கு அதிக மோகம் ஏற்பட்டுள்ளது. ஆனால், நாளுக்கு நாள் ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் விளையாடி பணத்தை இழக்கத் தொடங்கியுள்ளார்.

இழந்த பணத்தை மீண்டும் பிடிப்பதற்காக நண்பர்கள் உட்பட பலரிடம் கடன் வாங்கி விளையாடியுள்ளார். அந்தக் கடன் பணத்தையும் விளையாட்டில் தோற்றுள்ளார். இதனால் மதன்குமார் மன விரக்தி அடைந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, மது பழக்கத்திற்கு உள்ளாகி மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்குச் சென்ற அவர் நேற்று (அக்டோபர் 30) தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக ஆர்எஸ் புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தினால் இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் கோயம்புத்தூர் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 10 நாட்களில் மட்டும் புதுச்சேரி, மதுரை மேலூர், சென்னை செம்பியம் ஆகிய இடங்களில் மூவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்போது நான்காவது தற்கொலை நிகழ்ந்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டம் என்ற தீமையை உடனடியாகத் தடுக்காவிட்டால் தற்கொலைகளும், அதனால் நடுத்தெருவுக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து விடும்.” என்று எச்சரித்துள்ளார்.

https://www.facebook.com/DrRamadoss/posts/1669829863181293

மேலும், “பொது இடங்களிலோ, மன்றங்களிலோ பணம் வைத்துச் சூதாடினால் அது குற்றம் ஆகும். ஆனால், ஆன்லைன் சூதாட்டங்கள் இன்னும் குற்றமாக்கப்படவில்லை. சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களே வலியுறுத்தியும் ஆன்லைன் சூதாட்டம் இன்னும் குற்றமாக்கப்படவில்லை; தடை செய்யப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதை வலியுறுத்தி மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்