Aran Sei

எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்ஜென் – நோபல் தொகையை ஆய்வுக்கு அர்ப்பணித்த, காப்புரிமையை எதிர்த்த மக்கள் விஞ்ஞானி

யற்பியலுக்கான முதல் நோபல் பெற்ற மக்களின் விஞ்ஞானி ராண்ட்ஜென் மறைந்த தினம் – பிப் 10:

ராண்ட்ஜென் வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென் ( 27 மார்ச் 1845 -10 பிப்ரவரி 1923 ) மக்களின் விஞ்ஞானி. மக்களுக்கான விஞ்ஞானி. அதனால்தான் அவருக்கு அளிக்கப்பட்ட நோபல் பரிசின் தொகையை, மேலும் மேலும் நடைபெற உள்ள ஆய்வுக்களுக்குப் பயன்படுத்துமாறு கூறி அதற்கே அர்ப்பணித்ததார்.

மேலும் கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தனைகள் கருத்துகள் ஆகியவைகளுக்கு காப்புரிமை பெறக் கூடாது, அவை யாவும் மக்கள் பயன்பட்டுக்கே விடப்பட வேண்டும், மக்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட வேண்டும் என்ற சமூக நலக் கருத்து கொண்ட சமூக விஞ்ஞானி ராண்ட்ஜென். கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுவதற்கான எதிர் எண்ணம் கொண்டவர் ராண்ட்ஜேன்.

ஜெர்மனியில் உள்ள லென்னெப் என்ற ஊரில் 1845-ம் ஆண்டு பிறந்தார் வில்ஹம் ராண்ட்ஜென். இவரது தந்தை துணி வியாபாரி. கல்வியில் சிறந்து விளங்கிய இவர் பள்ளிப்படிப்புக்குப் பின், பெடரல் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் படித்தார். இவர் 1869-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

ராண்ட்ஜென் 1874-ம் ஆண்டு பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக பணிபுரிந்தார். இவர் மேலும் பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக பணியாற்றினார். 1900-ம் ஆண்டில் முனிச் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறைத் தலைவராகவும் பணிபுரிந்தார்.

அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகத்திற்கு பேராசிரியர் பணி செய்ய டிக்கெட் எல்லாம் எடுத்து கிளம்பும் பொழுது உலகப்போர் வந்து விட்டதால் ஜெர்மனியிலேயே இருந்துவிட்டார்.

பியரி கியூரியை போலவே தன் கண்டுபிடிப்புகளை அவர் காப்புரிமை செய்யவில்லை. மனித குலத்துக்கே அவை பயன்படட்டும் என உறுதியாக இருந்தார். உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியில் உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டு அவரும் பசியால் பல நாட்கள் வாட நேர்ந்தது. அவரின் நிலையறிந்து வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் நிறைய வெண்ணெய் கட்டிகளை அனுப்பிவைத்தார். அதை உடனிருந்த எண்ணற்ற சகாக்கள் மற்றும் ஏழைகளுக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டே இவர் நிறைவடைந்தார். அவரின் பெயரில் தனிம அட்டவணையின் 111 வது தனிமம் வழங்கப்படுகிறது.

1895 நவம்பர் 8 அன்று அவர் தனது ஆய்வகத்தில், கேதோடு ரே குழாயிலிருந்து எப்படி ஒளி உமிழப்படுகிறது என்ற ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கேதோடு ரே குழாயிலிருந்து தூரத்தில் உள்ள ஒளிரும் திரையில் ஒரு பளபளப்பு தோன்றியது. அதற்குக் காரணம் கேதோடு கதிர் குழாயிலிருந்து வெளியேறும் ஏதோ ஒரு கதிர் என்று உணர்ந்தார். அதனால் ராண்ட்ஜென் ஆச்சரியத்தில் அப்படியே உறைந்து விட்டார்.

ஒளிரும் திரையில் பளபளப்பை உருவாக்கும் அந்தக் கண்ணுக்குத் தெரியாத கதிர் எது என்பதைக் கண்டறியும் ஆவலில் பல வாரங்களாக அவர் ஆய்வகத்தை விட்டு வெளியே வரவில்லை. இறுதியில் அதன் காரணம் எக்ஸ்ரே கதிர்களே என்பதைக் கண்டறிந்தார். அவற்றுக்கு அசாதாரணமான ஊடுருவும் தன்மை இருப்பதையும் அந்தக் கதிர்களை போட்டோஎலக்ட்ரிக் தகடுகளில் பதிவுசெய்ய முடியும் என்பதையும் கண்டுபிடித்தார்.

அறியாத எண்ணை எக்ஸ் எனக் குறிப்பிடும் வழக்கம் கணிதத்தில் இருந்தது. எனவே அந்தக் கதிரை எக்ஸ் கதிர் என அவர் அழைத்தார்.அவரின் பெயரையே அதற்கு சூட்டவேண்டும் என்று பிறர் சொன்ன பொழுது, ”எத்தனையோ பேர் கடந்து வந்த பாதையை பின்பற்றி இந்த கதிர்களை கண்டிருக்கிறேன் நான். அதற்கு என் பெயரை வைப்பது சரியல்ல !” என்று அழுத்தமாக மறுத்தார்.

இதற்கிடையில் இன்னும் சில கூத்துகளும் நடந்தன. எக்ஸ் கதிர்கள் உதவியால், ஒருவர் சிகரெட் குடிப்பது போல, வயலின் வாசிப்பது போல, உணவு சாப்பிடத் துவங்குவதிலிருந்து கடைசி வரை எப்படிப் போகிறது, என்ன ஆகிறது என்பதை எல்லாம் தொடர்ந்து படம் எடுத்தனர்.

ஆனால் இதற்கெல்லாம் நிறைய நேரம் கதிர்கள் முன்னே நிற்க வேண்டியிருக்கும். அதன்பின் எக்ஸ் கதிர்கள் மூலம் உடலுக்கு ஏற்படும் தீங்கை எண்ணி இந்தக் கேளிக்கைகள் நிறுத்தப்பட்டன.

எக்ஸ்கதிரில் பணிபுரியும் பணியாளர்கள் கதிர்வீச்சுக் கருவியை அணிந்திருக்கின்றனர். இதன் மூலம் அவர் எவ்வளவு கதிர்வீச்சுகளைச் சந்திக்கிறார் என்பதும் அளக்கப்படும். அதிக அளவென்றால், அவர் கதிர்வீச்சுக் களத்திலிருந்து தள்ளி வைக்கப்படுகிறார். கதிர்வீச்சை அளக்கப் பயன்படும் அளவை ராண்ட்ஜெனின் பெயராலேயே, ராண்ட்ஜென் யூனிட் என்றே அழைக்கப்படுகிறது. இன்று எக்ஸ் கதிர்கள் பயன்பாடு எண்ணிறந்தவை.

எக்ஸ் கதிர்கள் என்பதும், மின்காந்த அலை, ரேடியோ அலை, நுண்ணலை மற்றும் பார்க்கும் ஒளி போன்றதுதான். ஆனால் இதற்கு தனியாக அலை நீளம் உண்டு. எக்ஸ் கதிர்களுக்கு பார்க்கும் ஒளியைவிட குறைவான அலை நீளமும், அதிக ஆற்றலும் உண்டு. ஆனால் அவற்றை கண்ணால் காண முடியாது.

அவை வளிமண்டலம் வழியே ஊடுருவி வராததால், விண்வெளி தொலை நோக்கி மூலம்தான் இதனைக் காண முடியும். இவை விண்மீன்களிலிருந்தும் அண்டங்களிலிருந்தும் தான் வருகின்றன.

ஒவ்வொரு தசையிலும் வேறு வேறு விதமாய் செயல்படுகின்றன எக்ஸ் கதிர்கள்.

  • எக்ஸ் கதிர்கள் பல்மருத்துவத்தில் பல நோய்களைஅறிய பயன்படுகிறது. உடலில் துப்பாக்கிகுண்டு, ஊசி, போன்ற அயல் பொருட்கள் இருப்பதை அறிய உதவுகிறது. மேலும் சிறுநீரகக் கல்லையும் புற்றுநோயையும் அறியவும் குணப்படுத்தவும் பயன்படுகிறது . இதன் மூலம் CT ஸ்கேன் எடுப்பதும், மார்பகத்தை ஊடுருவி படம் பல வியாதிகளுக்காக எடுப்பதும் நடை பெறுகிறது. 2010 ம் ஆண்டு மட்டும் சுமார் 5,000,000,000 மருத்துவ இமேஜிங் படங்கள் எடுக்க்ப்பட்டிருக்கின்றன.
  • எக்ஸ் கதிர்கள் வியாபாரத்தில் பதப்படுத்தப் பட்ட உணவுவகைகளின் தன்மையை அறியப் பயன்படுகிறது. சரியாக மூடப்படாவிடில் கண்டுபிடிக்கிறது. சில வியாபார பொருட்களின் தரத்தை அறிய உதவுகிறது.
  • மேலும் விமான நிலையத்தில் ஒரு பெட்டியின் உள்ளே என்ன என்ன பொருட்கள் உள்ளன என்று அதனைத் திறக்காமலேயே அறிய மிகவும் உதவுகிறது.
  • அறிவியலில் ஒருபடிகத்தில் அணுக்கள் எவ்வாறு அடுக்கப்பட்டுள்ளன என்பதையும், அதன் தொலைவையும் இணைப்பையும் அறிய பயன்படுகிறது
  • வானவியலில் தொலைவில் உள்ள வானியல் பொருட்களை அறிய பயன்படுகிறது.
  • தடயவியல் துறையில் பெரிதும் உதவுகிறது. அரசின் பாதுகாப்பு மற்றும் கஸ்டம்ஸ் அலுவலகத்திலும் எக்ஸ் கதிர்கள் மூலம்தான் சோதனைகள் நடைபெறுகின்றன

முதல் நோபல் பரிசு பெற்றவர் இவரே

1895-ம் ஆண்டு முதல் 1897-ம் ஆண்டு வரை ‘எக்ஸ் கதிர்கள்’ பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை ராண்ட்ஜென் வெளியிட்டார். இப்போது ஏராளமான மருத்துவ பரிசோதனைகளுக்கு எக்ஸ்கதிர்கள் பெரும் உதவி புரிகிறது. இதனால் ராண்ட்ஜென் கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை என போற்றப்படுகிறார்.

இயற்கை அறிவியலின் அடிப்படையான துறை இயற்பியல். அதில் அணு, மூலக்கூறு ஆகிய அடிப்படையான விஷயங்கள் அலசப்படுகின்றன. எல்லாப் பொருள்களுக்கும் அடிப்படை அணுவே. அணுவின்றி எதுவும் இல்லை. ஆகவே அந்த அணுவின் அடிப்படைகளை அலசும் அறிவியல் பிரிவுக்கு நோபல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டது அதிசயம் அல்ல.

யாருக்கு இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசை வழங்கலாம் என்று ஆலோசித்தபோது நோபல் குழுவினருடைய மனதில் வந்த பெயர் 1895-ல் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்த வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென். 1901-ம் ஆண்டில் டிசம்பர் 10 அன்று அவர் நோபல் விருதை பெற்றுக்கொண்டார். அப்போது அவர் முனிச் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ராண்ட்ஜென் கதிர்கள் என அழைக்கப்படும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்து அவர் இயற்பியல் துறைக்கு ஆற்றிய சேவையைக் கவுரவிக்கும் விதமாக அவருக்கு இயற்பியல் துறையின் முதல் நோபல் விருது அளிக்கப்பட்டது

மறைவு

இவர் 1923-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.

Wilhelm Conrad Röntgen was a German physicist, who, on 8 November 1895, produced and detected electromagnetic radiation in a wavelength range known as X-rays or Röntgen rays, an achievement that earned him the first Nobel Prize in Physics in 1901.
Born: March 27, 1845, Remscheid, Germany
Died: February 10, 1923, Munich, Germany
Books: Röntgen Rays: Memoirs by Röntgen, Stokes, and J. J. Thomson

– புதுவை அறிவியல் மன்றம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்