Aran Sei

நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் மூலக்கூறுகள் : புதிய அறிவிப்பு

நிலவில் தண்ணீர்

நிலவின் மேற்பரப்பில் முன்பு தெரிந்ததை விட பரந்து விரிந்த இடங்களில் தண்ணீர் தென்படுவதாகவும்.  ஆனால் அந்த தண்ணீரில் பூமியில் இருப்பது போன்ற நீர்நிலைகளாக இல்லை எனவும்  நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவின் மேற்பரப்பில் இருக்கும் கனிமவளங்கள் தண்ணீரின் மூலக்கூறுகளை உறிந்து கொள்வதாகவும், மேலும் தண்ணீர் பனிக் கட்டிகளாக உறைந்து நிழல் போன்ற பகுதிகளில் காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளதாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிலவில் 4G செல்போன் நெட்வொர்க் – நோக்கியா, நாசா திட்டம்

11 ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஆய்வுகளில் நிலவில் மிகக்  குறைந்த அளவில் தண்ணீர் காணப்பட்டதாக கூறப்பட்டது. இப்போது வந்த ஆய்வுகளின் முடிவுப்படி நிலவில் தண்ணீரின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்திருக்கின்றனர். இதே வேளையில் மற்றோரு குழு நிலவில் 40,000 சதுர கிலோமீட்டர்களுக்கு  நிரந்தர நிழல் பகுதிகள் நிலவில் இருப்பதாகவும் அந்தப் பகுதிகளில் தண்ணீர் பனிக்கட்டி வடிவில் இருக்கலாம் என்றும் தெரிவித்திருந்ததனர்.

நிலவின் பெரும் பகுதியில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது ஒரு ”முக்கியமான” கண்டுபிடிப்பு என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.  விண்வெளி வீரர்கள் மற்றும் ரோபாட்டிக் கருவிகளின் மூலம், வரும் காலங்களில் அந்த நீரை எடுப்பதற்கும் அதை குடிநீராகவோ அல்லது எரிபொருளாகவோ பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேரிலேண்டில் இருக்கும் நாசாவின் கோடார்ட் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடைய கசே ஹானிபால் தலைமையிலான குழு நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு முந்தைய ஆராய்ச்சிகளில் இது தண்ணீரா அல்லது ஹைட்ராக்சில் அயனியா என்ற சந்தேகம் இருந்தது. தொடர்ந்து ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள், ஒரு புதிய வழிமுறையை பின்பற்றி இந்த தெளிவான முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சூரிய ஒளி வீசும் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் தொடர்ந்து இருக்க முடிவதற்கான காரணம் அவை கனிம வளங்களுடன் பிணைந்து இருந்ததால் தான். அதன் மூலம்,  அந்த கடினமான சூழலில் ஆவியாகி விடாமல் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.  இதை காற்றில் மிதக்கக் கூடிய சொஃபியா எனப்படும் மிதக்கும் விமான ஆய்வகம் தந்த தரவுகளின் அடிப்படையில் கண்டுபிடிப்பிடித்தாக அறிவித்துள்ளனர்.

”பலர், கண்டுபிடித்திருப்பது பனிக்கட்டி என்று நினைக்கிறார்கள், அது தவறு, நாங்கள் கண்டுபிடித்து இருப்பது தண்ணீரின் மூலக்கூறுகள் தான். அவை பரந்து விரிந்து இடத்தில் ஒன்றுடன் ஒன்று எதிர்வினை செய்யாமல் இருப்பதால் தண்ணீராகவோ அல்லது பனிக்கட்டியாகவோ உருகாவில்லை” என்று தெரிவித்துள்ளார் விஞ்ஞானி ஹானிபால்.

இயற்கை அறிவியல் ஆய்விதழில் (nature science journal) வெளிவந்த இவர்களுடைய இரண்டாவது ஆய்வு முழுவதும் நிலவில் இருக்கும் குளிர்ந்த பகுதிகளை நோக்கியே செய்யப்பட்டிருந்தது. நிலவின் ஒரு பகுதியில் நிரந்தர  இருளாக (சூரிய ஒளி படாமல்) இருப்பதாகவும் அதனுடைய வெப்ப நிலை -260 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு குறைவாக இருந்ததாகவும் கூறப்‘பட்டிருக்கிறது. அந்த குளிர்ந்த நிலையில் தண்ணீரை பல நூறு கோடி ஆண்டுகளுக்ககுக் கூட நிலையான தன்மையில் வைத்திருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

நிலவு கண்காணிப்பு ஆர்பிட்டர் விண்கலம் தந்த தரவுகளின் அடிப்படையில் கொலராடோ பல்கலை கழகத்தின் விஞ்ஞானி பால் ஹெய்ன் தலைமையிலான குழு சிறிய நாணயங்களின் அளவைக் கூட தாண்டாத பல ஆயிரம் கோடி சிறிய நிழல்கள் நிலவின் துருவப் பகுதிகளில் இருப்பதாக கண்டறிந்துள்ளார்.

இந்த ஆராய்ச்சிகளின் மூலம் நிலவில் நாம் அறியாத பல பகுதிகளில் தண்ணீர் பனிக்கட்டிகளாக சேமித்து வைத்திருக்கக் கூடும். நாம் எண்ணியதை விட பரந்து விரிந்த அளவில் நிலவின் துருவப் பகுதிகளில் தண்ணீர் இருக்கிறது.  அதை நாம் எளிதாக பெற்று, நிலவில் இருந்து எடுத்து, பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் இருப்பை உறுதி செய்வதற்கு நாசா நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டு வருகிறது. வரும் காலங்களில் விண்வெளி வீரர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இருக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவில் இருக்கும் தண்ணீரை உறுதி செய்தால் அது வீரர்களின் செவ்வாய் கிரக பயணத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பதனால் இந்த முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

மேலும்  துருவப் பகுதிகளில் மட்டுமில்லாமல், நாம் நினைத்ததை விட நிலவின் பெரும் பகுதியில்  தண்ணீர் பரவியிருப்பதாக ஹானிபல் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதில் மறைந்திருக்கும் மர்மமான விஷயம் எங்கிருந்து தண்ணீர் தண்ணீர் உருவானது என்பதாகும்

தண்ணீரின் மூலம் எது என்பதை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம் என்று ஹெய்ன் கூறியுள்ளார். மேலும் தற்போது நமது முன்னிருக்கும் விடைகள் விண்கற்கள் , விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் தூசிகள் , வால்நட்சத்திரங்கள்,  சூரிய காற்று ஆகியவை. நிலவிலிருந்தே கூட எரிமலைகளிலிருந்து வெளியாகும் வாயுக்களிலிருந்து தண்ணீர் வந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் ஹானிபல்.

”பூமி ஒரு ஈரமான பிரதேசம் , அகண்ட பெருங்கடல்களும் , பெரிய நன்னீர் ஏரிகளும், பனிமூடிய மலைகளும் நமக்கு நீர்தேக்கங்களாக பயன்படுகின்றன.

நம்முடைய நெருங்கிய கோளான நிலவில் எவ்வாறு நீர் உருவானது என்பதை கண்டுபிடித்தால் விண்வெளி ஆராய்ச்சியின் நீண்டநாள் கேள்வியான பூமியில் தண்ணீர் எவ்வாறு உருவானது என்பற்கும் விடையை கண்டறியலாம்” என்று தெரிவித்துள்ளார் ஹானிபல்.

The Reuters தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்