தாமஸ் ஆல்வா எடிசன் (பிப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் இவர். ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் அவர் ஒருவர்.
1880-ல் எடிசன் அறிவியல் சார்ந்த இதழ் ஒன்றைத் தொடங்கியவர். இது 1900-ஆம் ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) இதழானது.
தனது பெயரில் சாதனை அளவான 1093 கண்டுபிடிப்புகளின் காப்புரிமைகளைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ட்டார்.
அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சி கனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க் கப்பட்டார்.
ஆசிரியர் திட்டியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் 10 சென்ட் அளித்து உற்சாகப்படுத்தினார்.
பார்க்கும் எதையும் சோதித்து அறியும் ஆர்வம் சிறு வயதில் இருந்தே அவருக்கு உண்டு. கோழி அடைகாத்து குஞ்சு பொரிப்பதைப் பார்த்த சிறுவன் எடிசன் தானும் முட்டைகள் மேல் அமர்ந்து சோதனை செய்து பார்த்திருக்கிறான்.
ரிச்சர்ட் பார்க்கர், தாமஸ் பைன், சர் ஐசக் நியூட்டன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட ஏராளமான புத்தகங்களை 11 வயதுக்குள் கற்றுத் தேர்ந்தார் எடிசன்.
ரயில் நிலையத்தில் தந்தி இயக்குபவராகப் பணியாற்றிய போது, ரயில் பெட்டியையே அச்சகமாக மாற்றி ‘வீக்லி ஹெரால்டு’ வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அங்கு சோதனைக் கூடம் அமைத்து கண்டுபிடிப்புகளைத் தொடங்கினார்.
ஒருமுறை அங்கு அவர் வைத்திருந்த பாஸ்பரஸ் எரிந்து ரயில் பெட்டியில் தீப்பற்றியது. ரயில்வே அதிகாரி ஆத்திரமடைந்து அறைந்ததில் அவரது ஒரு பக்கக் காது கேட்காமல் போனது.
இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல.
மென்லோ பார்க் பகுதியில் 1876-ல் ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். மின்சார பல்பு, எலக்ட்ரிக் ஜெனரேட்டர், டெலிகிராப் சிஸ்டம், எலக்ட்ரிக் ஃபேன், ரேடியோ வால்வ், மெகா போன், மோட்டார், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி ஸ்பீக்கர், ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி கேமரா, ராணுவ சாதனங்கள் ஆகியவை இவரது கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்கவை.
ஒரு சாதனையை நிகழ்த்திய பிறகு, அதற்கான பாராட்டுகளைப் பெற அவர் அங்கே இருக்கமாட்டார். அடுத்த கண்டுபிடிப்புக்காக ஆராய்ச்சிக் கூடத்துக்குள் போயிருப்பார். இதுபற்றி கேட்டால், ‘நேற்றைய கண்டு பிடிப்பு பற்றி பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை’ என்பார்.
ஆக்க மேதை எடிசன் தன் 84-ம் வயதில், 1931 அக்டோபர் 18-ம் தேதி நியூஜெர்சியில் உள்ள வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார்.
அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21-ம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கமானது. அக்டோபர் 21-ம் தேதி மாலை நியூ யார்க்கில் ‘சுதந்திர தேவி சிலையின்'(Statue of Liberty) கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள், வீதியில் பயணப் போக்கு விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் ஒளியிழந்தன. சிகாகோ, டென்வர் போன்ற முக்கியமான இடங்களிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன.
– புதுவை அறிவியல் மன்றம்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.