Aran Sei

அப்பல்லோ திட்டங்கள் : அறிவியலை விட அரசியலே தூண்டுதலாக இருந்தது

Image Credit : thewire.in

1960-களில் தொலைக்காட்சியில் அப்பல்லோ பயணிகளை பார்த்துக் கொண்டிருந்த பெரும்பாலான அமெரிக்காவின் இலட்சியவாத குழந்தைகள், அமைதியான அறிவியல் ஆய்வுகளின் ஒரு சிறப்பான புதிய யுகம் தொடங்குகிறது என்று நம்பினர். விரைவில் நிலவில் வாழ்வோம், பின் செவ்வாய்க்கும் அதையும் தாண்டிச் செல்வோம் என்று நினைத்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பூமியை சுற்றிய பாதையில் 15 நிமிட மகிழ்ச்சி சவாரிக்கு மனிதர்களை அனுப்புவதில் தொடங்கி 10 ஆண்டுகளுக்குள், நிலவின் அமைதிக்கடல் பகுதியில் மனிதர்களை இறக்குவது வரை நம் வளர்ந்து விடவில்லையா?

நிச்சயமாக, நிகழ்வுகள் அப்படி நடக்கவில்லை. அப்பல்லோ 11 வெற்றிக்குப் பின், மூன்று அப்பல்லோ பயணங்கள் ரத்து செய்யப்பட்டதுடன் நாசாவுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது. ஜான் எஃப் கென்னடியின் “நிலவில் மனிதனை இறக்கி பாதுகாப்பாக மீண்டும் பூமிக்கு கொண்டு வருவது” என்ற குறிக்கோள் நிறைவேறியது. அதை நிரூபித்தாகி விட்டது. ஆனால், வியட்நாம் போர் போன்ற பிற தேவைகளுக்கு பணம் ஒதுக்கப்பட வேண்டியிருந்தது.

ஆனால், “ஸ்மித்சோனியன் அப்பல்லோ”-வின் வரலாற்றாசிரியர் டீசல் மியூர்-ஹார்மனி தனது புதிய புத்தகமான “ஒளிரும் நிலவு திட்டம் : அப்பல்லோ திட்டத்தின் ஒரு அரசியல் வரலாறு” என்ற நூலில் (Operation Moonglow: A Political History of Project Apollo), அறிவியலும், ஆய்வும் ஒரு போதும் நாசாவின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் நோக்கமாக இருந்ததில்லை என்கிறார்.

“உள்ளார்ந்த மனித தாகமான அறிவியல் அல்லது பொருளாதார தூண்டுதல் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு ஊக்கம் வழங்கவில்லை; மாறாக, இது அரசியல் அல்லது இன்னும் துல்லியமாக கூறுவதானால் குறிப்பிட்ட புவிசார் அரசியல் தருணத்தில், உலகளாவிய வல்லரசுகள் தமது தொழில்நுட்ப மேன்மையை நிரூபித்துக் காட்டுவதன் மூலம் உலகத் தலைமைக்கு நடத்திய போட்டியின் விளைவாக இருந்தது” என்று அவர் எழுதுகிறார்.

இது 1957-ல் அக்டோபரில் ஸ்புட்னிக்கில் ஆரம்பித்தது. ஒவ்வொரு ஒன்றரை மணி நேரமும் அமெரிக்காவின் மீது அந்த பந்து போன்ற செயற்கைக்கோள் ‘பீப்’ ஒலியுடன் வலம் வருவது அரசியல் தலைவர்களையும், பொதுமக்களையும் பயமுறுத்தியிருக்கலாம். ஆனால், பெரும்பாலான அறிவியல் அறிஞர்கள் வியப்பின்றி அமைதியாகவே இருந்தனர்.

அப்போதைய “சர்வதேச புவிஇயற்பியல் ஆண்டு திட்ட”த்தின் ஒரு பகுதியாக புவி செயற்கைக்கோளை செலுத்துவதற்கானத் திட்டங்களை அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் ஏற்கனவே வெளிப்படையாக அறிவித்திருந்தன, சோவியத் ஒன்றியம் அதை முதலில் செய்தது என்ற உண்மை அறிவியலைப் பொறுத்தவரை எந்த விதத்திலும் முக்கியமானதில்லை.

இருப்பினும், அமெரிக்கா, சோவியத் யூனியன் என்ற இரு தரப்பினரும் இதை ஒரு அறிவியல் முன்னேற்றமாக பொதுவில் கொண்டாடினாலும் அதன் மிக ஆழமான விளைவுகள் அரசியல் மற்றும் இராணுவத் தளங்களில் இருந்தன. ஸ்புட்னிக் 1-ம் அதைத் தொடர்ந்து அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு செலுத்தப்பட்ட அதை விட அதிக எடையுள்ள ஸ்புட்னிக் 2 கலமும் சோவியத் ஒன்றியத்தின் தொழில்நுட்ப வலிமையின் – குறிப்பாக அப்போதிருந்த முக்கிய ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் –  தெளிவான நிரூபணங்களாக விளங்கின.

அமெரிக்கா பின்தங்கி இருந்தது. அது ஏற்றுக் கொண்ட உலக ஆதிக்கத்துக்கு சவாலாக விளங்கிய இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டி இருந்தது. அமெரிக்கர்களை விட சோவியத்துகள் வலிமையானவை, அமெரிக்காவை விட முன்னேறியவை என்ற கருத்தை எப்படியாவது முறியடிக்க வேண்டி வந்தது.

இதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவில்லைதான். அமெரிக்க அதிபர் ஐசன்ஹோவர் பீதியடையாதவர்களில் ஒருவர். ஆனால் அவருக்குப் பின் வந்த கென்னடிக்கு வேறு முன்னுரிமைகள் இருந்தன. “1960 ம் ஆண்டின் இறுதியில் அதிபர் பதவிக் காலம் முடிந்து வெளியேறவிருந்த ஐசன்ஹோவரும் சரி அல்லது அடுத்து அதிபர் பதவியை ஏற்றுக் கொள்ளவிருந்த கென்னடியும் சரி, மனித விண்வெளிப் பயணத்தை தேசிய முன்னுரிமையாக கருதவில்லை.” என்று எழுதுகிறார் முயர்- ஹார்மனி.

1961, ஏப்ரல் 12 அன்று சோவியத் மாலுமி யூரி காகரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதராக ஆனார். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் கியூபாவுக்கு எதிராக “பன்றிகள் வளைகுடா” குளறுபடியில் இறங்கியதற்கு சற்று முன்பு அது நிகழ்ந்தது. கென்னடி விண்வெளியின் முக்கியத்துவம் பற்றிய தனது எண்ணத்தை மாற்றிக் கொள்ளத் தொடங்கினார். “நம்மால் வெல்லக் கூடிய வியத்தகு வெற்றியை உறுதி செய்யும்” ஏதாவது ஒன்றை செய்யும்படி தனது ஆலோசகர்களைக் கேட்டுக் கொண்டார்.

விண்வெளி வல்லரசு போட்டிக்கான முக்கிய அரங்காக மாறியது. “காகரினின் பயணம் சோவியத் பெருமையை உயர்த்தியது, கியூபா மீதான படையெடுப்பின் காரணமாக (Bay of Pigs) அமெரிக்காவின் பெருமை இழப்பு என்ற இரண்டு அடுத்தடுத்த அடிகள் அப்பல்லோ திட்டங்களுக்கான தயாரிப்புகளுக்கு அடித்தளமிட்டது.” என்கிறார் முயர்.

“அதைத் தொடர்ந்து கென்னடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை நிலவில் தரையிறங்குவதற்கான இலக்கை முன் வைத்ததற்கான முக்கியமான தருணமாக இருந்தாலும், அத்தகைய பொருள் கூறுதல் அந்த இலக்கின் முழு பின்னணியையும் அதனை முன்னிறுத்துவதற்கான அதிபரின் நோக்கங்களையும் புறக்கணிக்கிறது” என்கிறார் முயர்.

1961 மே 25 ம் நாள் கென்னடி நிகழ்த்திய உரை, “ஒன்றியத்தின் நிலைமை பற்றிய இரண்டாவது உரையாக” அதிகாரபூர்வமாக கருதப்பட்டது. அது “நாட்டின் அவசரமான தேவைகளை” முன்னிறுத்தி, சர்வதேச அரங்கில் “சுதந்திரத்துக்கான நோக்கங்களின் தலைவர்” என்ற அமெரிக்காவின் நிலையை மீண்டும் உறுதிபடுத்துவதில் கவனம் செலுத்தியது” என்று எழுதுகிறார் முயர். ஒரு அமெரிக்கரை நிலவில் இறக்குவது என்பது சாராம்சத்தில் அமைதியானதும் ஆனால் அமெரிக்காவின் வலிமையைத் தெளிவாகக் காட்டுவதை நோக்கமாகக் கொண்டதும் ஆகும்.

“நிலவுக்கு பயணிப்பது அமெரிக்காவின் புவிசார் அரசியல் அந்தஸ்தை மீட்டெடுக்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ளது என்பதை அமெரிக்க அதிபர் கண்டு கொண்டார்” என முயர் கூறுகிறார்.

அமெரிக்கா இதை எப்படிச் செய்து முடித்தது என முயரின் புத்தகம் காட்டுகிறது. விண்வெளி திட்டத்தின் சாதனைகளை அரசியல், கலாச்சார தூண்டுதலின் “மென்மையான அதிகாரத்தின்” மூலம் உலகெங்கிலும் அமெரிக்க மதிப்பீடுகளையும் விழுமியங்களையும் பரப்புவதற்கான அடிப்படையாக பயன்படுத்தியது என்கிறது முயர்-ஹார்மனியின் நூல்.

சோவியத் பரப்புரையை தனது சொந்த வகையிலான பரப்புரையாலும் உளவியல் போராலும் எதிர்கொள்வதற்காக ஐசன்ஹோவரால் உருவாக்கப்பட்ட வெளியுறவுத் துறை நிறுவனமான அமெரிக்கத் தகவல் முகமைக்கு (USAI) நாசாவின் விண்வெளி சாதனைகள் புதிய அரச தந்திர கருவிகளாக பயன்பட்டன.

1962, பிப்ரவரியில் நடைபெற்ற ஜான் க்ளென்னின் “சுற்றுப்பாதை 7 பயண”த்துக்குக் (“Orbital 7 mission”) கிடைத்த மிகப்பெரிய சர்வதேச வரவேற்பு USAI-ன் “விண்வெளி அரச தந்திரத்திற்கான” முதல் வாய்ப்பைக் கொடுத்தது. அந்தந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப கவனமாக வடிவமைக்கப்பட்டு கண்ணுக்கு விருந்தாக அமைந்த 20-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்பட்ட காட்சி நிகழ்வுகளுக்கு க்ளென் மெர்க்குரி விண்கலத்தை பன்னாட்டுச் சுற்றுப்பயணமாக அந்த நிறுவனம் அனுப்பியது‌.

க்ளென் இயக்கி விண்கலம் பயணித்த புவியின் மூன்று சுற்றுவட்டப் பாதைகளை குறிப்பிடும் வண்ணம் இந்த நட்பு -7 சுற்றுப்பயணம் “நான்காவது சுற்றுப் பாதை” என அழைக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் விண்கலத்தைக் காணவும், தொட்டுப் பார்க்கவும் அதை நீண்ட வரிசையில் காத்திருந்தது ஒரு அபாரமான வெற்றியாக இருந்தது.

நாசாவின் இரண்டாவது மனித விண்வெளிப்பயணத்திட்டங்களான “ஜெமினி திட்டங்களையும்”, குறிப்பாக 1968 டிசம்பரில் செயல்படுத்திய அப்பல்லோ 8 திட்டத்தையும் உள்ளடக்கிய நாசா வெற்றிகளை அமெரிக்கத் தகவல் முகமை எவ்வாறு கவனமாக பட்டைத் தீட்டி ,தனது செயல் தந்திரங்களை உருவாக்கி, செயல்படுத்தியது என்பதை முயர் காட்டுகிறார். அப்பல்லோ 8 திட்டம் போர், படுகொலைகள், அரசியல் எழுச்சிகள் நிரம்பியிருந்த ஆண்டில் அமெரிக்காவுக்கும், உலகிற்கும் ஒரு உற்சாகமான சின்னமாக இருந்தது.

அனைத்து அனுபவங்களும் அப்பல்லோ 11 நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பிரபலப்படுத்துவதற்கான கூர்மையான திட்டமிடலை நோக்கிச் சென்றன. நாசாவும், அமெரிக்க வெளியுறவுத் துறையும் இந்தத் திட்டம் அமெரிக்க மேலாதிக்கத்திற்கான மேலும் ஒரு நிரூபணமாக மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தபடாமல், நிலவில் இறங்கிய கலத்தில் பொருத்தியிருந்த தகடு அறிவித்தபடி “ஒட்டு மொத்த மனிதகுலத்துக்கும்” உண்மையிலேயே பகிரப்பட வேண்டிய சாதனையாக இருக்க வேண்டும் என்று கருதின.

“பொது கருத்து கணிப்புகளும் வெளிநாட்டு தூதரகங்களில் இருந்து கிடைத்த தகவல்களும் அமெரிக்காவின் பெருமையையும் தொழில்நுட்ப வலிமையையும் பறையாற்றும் முயற்சிகளுக்கு சாதகமான எதிர்வினை கிடைக்கவில்லை என்பதைக் காட்டின. எனவே இந்த வகையான செய்தி பரப்பலை குறைத்துக் கொண்டு உலக ஒற்றுமை, பன்னாட்டு பங்கெடுப்பு ஆகியவற்றை வலியுறுத்துவதாக பரப்புரை மாற்றி அமைக்கப்பட்டது.” என்று முயர் கூறுகிறார்.

இறுதியில் இந்த இலக்கை அடைவதைக் காண கென்னடி உயிரோடு இல்லாத போதும் அவருக்குப் பின் வந்தவர்கள் விண்வெளித் திட்டத்தின் அரசியல் பயனை அறுவடை செய்யத் தயங்கவில்லை என்று கூறும் அவர், “லிண்டன் பி‌ ஜான்சனைப் பொறுத்தவரை விண்வெளி மேலும் பன்முகப்பட்ட அரசியல் கருவியாக மாறியது, அவரது தாராளவாத சமூக திட்டங்களுக்கு அது ஒரு மாதிரியை வழங்கியது.” என்று எழுதுகிறார். “நம்மால் நிலவுக்கு ஒரு மனிதனை அனுப்ப முடியுமென்றால் நமது குடிமக்களுக்கு உணவும், பாதுகாப்பும் தரவும் முடியும்” என அவர் கூறினார்.

ரிச்சர்ட் எம்‌ நிக்சனுக்கு, அப்பல்லோ, சரியான நேரத்தில் வசதியாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பாக இருந்தது. “இது அவரது கடுமையான அரசியல் எதிரியான ஜான் எஃப் கென்னடி முன்மொழிந்த திட்டமாக இருந்தாலும் நிக்சன் தனது வெளியுறவு நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பல்லோவை திறமையாக பயன்படுத்திக் கொண்டார்.” என்கிறார் முயர்.

நிக்சன் தனது முதல் சர்வதேச சுற்றுப் பயணத்தை, அப்பல்லோ 8 ன் தளபதி ஃப்ராங்க் போர்மேன் ஐரோப்பாவில் பயணித்த பிறகு உடனடியாக மேற்கொண்டார். அதன் மூலம் விண்வெளி வீரரின் பயணம் உருவாக்கிய நல்லெண்ண உணர்வுகளை தனது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

1969 கோடைக் காலத்தில் அப்பல்லோ 11 விண்வெளி வீரர்களை புவிக்கு வரவேற்ற கையுடன் முக்கிய ஆசிய, ஐரோப்பிய பயணத்தை மேற்கொண்டார் நிக்சன். அண்மையில் நிலவில் தரையிறங்கும் சாதனையை நிகழ்த்திய நாட்டின் அதிபர் என்ற வகையில் நிக்சன் உலக நாடுகளில் பயணம் செய்கிறார் என்பதை உறுதியாக தெரிவிக்கும் விதமாக அந்தப் பயணத்துக்கு “ஒளிரும் நிலவு நடவடிக்கை (Opration Moonglow)” என்று பெயரிடப்பட்டது.

நாசாவும் தேசிய தகவல் முகமையும் துவக்கத்திலிருந்தே புரிந்து கொண்டிருந்தது போல அமெரிக்க விண்வெளி திட்டங்களின் முகமாக இருந்த விண்வெளி வீரர்கள் ஊடகங்களின் முயற்சிகளிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகவே இருந்தனர். சில வீரர்கள் தங்கள் மக்கள் தொடர்பு கடமைகளை ஒதுக்கித் தள்ளினார்கள்.

ஆனால் க்ளென், ஃப்ராங்க் போர்மேன், நீல் ஆம்ஸ்ட்ராங் போன்ற மற்றவர்கள், பொது வாழ்வு பிரபலங்களாகவும், தூதரக அதிகாரிகளாகவும் மாறினர். மேலும் சிலர், தங்கள் பிற்கால வாழ்க்கையில் மேலவை உறுப்பினர்களாகவும் (செனட்டர்கள்), அயல்நாட்டு தூதர்களாகவும் ஆகினர் குறிப்பிட்ட அளவு கவர்ச்சி, அரசியல் ஆர்வம், மேடை பேச்சுத் திறமை ஆகியவை நாசாவில் பணியாற்றிய போது அவர்களது தொழில்முறை நிலையை உயர்த்தி இருக்கலாம்.

ஆம்ஸ்ட்ராங்கின் வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் ஹான்சனை பொறுத்தவரை, 1966-ல் தென் அமெரிக்க சுற்றுப்பயணத்தில் அவரது செயல்பாடுகள் “நிலாவிற்கு செல்லும் முதல் விண்வெளி வீரராக அவரைத் தேர்ந்தெடுப்பதில் செல்வாக்கு செலுத்தி இருக்கலாம்” என்று கூறுவதாக முயர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

முயர் ஹார்மனியின் புத்தகம் அப்பல்லோவின் அரசியல் வெளிப்பாடுகளை மையமாகக் கொண்ட முதல் படைப்பு அல்ல; வால்டர் ஏ. மெக்டோகலின் “1985… சொர்க்கமும் புவியும்: விண்வெளி யுகத்தின் அரசியல் வரலாறு” என்ற நூல், பொதுவாக இந்த விஷயம் பற்றிய மிக விரிவான நூலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதன் பிறகு புதிய ஆநாரங்களைப் பயன்படுத்தி மேலும் பல நூல்கள் வந்துள்ளன.

“ஆப்பரேஷன் மூன்குளோ” வெறும் விண்வெளி வரலாறு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமின்றி, மென்மையான அதிகாரத்தை (அல்லது பரப்புரை என கூறலாம்), பயன்தரும் அரச தந்திரத்திரத்திற்கும், பன்னாட்டு உறவுகளுக்கும் மிகக் கவனமாக வடித்தெடுப்பதை விரிவாக பரிசீலனை செய்கிறது என்கிற வகையில் இது தொடர்பான ஆய்வு படைப்புகளில் ஒரு குறிப்பிடத்தக்க சேர்ப்பாக கருதப்படலாம்.

ஸ்மித்சோனியன் தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தின் அப்பல்லோ சேகரிப்பின் நூலகராக/ கண்காணிப்பாளராக உள்ள முயர் ஹார்மனி, வெளியுறவுத் துறை, நாசா, யுஎஸ்ஐஏ ஆவண காப்பகங்கள் ஆகியவற்றுடன் அப்பல்லோ விண்வெளி வீரர்களுடனான நேர்காணல்கள்  அனைத்தையும் சேர்த்து, விண்வெளி வீரர்களின் விண்வெளி சாகசங்கள் அரசியல் லாபத்திற்காக எவ்வாறு திரிக்கப்படுகின்றன என்பதை சித்தரித்திருக்கிறார்.

“ஒளிரும் நிலவு நடவடிக்கை” 1969 அப்பல்லோ 11 பயணத்துடன் முடிவடைகிறது. ஆனால் அப்பல்லோ விண்கலத்தின் கடைசி பயணம் 1975-ல் நடைபெற்றது. அது அமெரிக்க-சோவியத் கூட்டு திட்டமான அப்பல்லோ- சோயுஸ் ஆக இருந்தது. இது பிற எல்லா திட்டங்களையும் விட மிகவும் அரசியல் ரீதியாக, வெளிப்படையாக, ஊக்குவிக்கப்பட்ட புவிசார் அரசியலுக்கான உறவாடலுக்கான செயல்பாடாக இருந்திருக்கலாம்.

எனினும் இது சுற்றுவட்டப் பாதையில் விண்கல இணைவுக்கும் மீட்புக்குமான தொழில்நுட்பத்துக்கான முறையான சோதனையாக விளங்கியதுடன், எதிர்காலத்தில் விண்வெளியில் அமெரிக்க- சோவியத் ஒத்துழைப்பிற்கு அடித்தளமிடவும் செய்துள்ளது.

இப்போது அப்பல்லோவின் சாதனைகள் நிலவுக்கு மீண்டும் செல்வதற்கு வழிவகுத்துள்ளன. அப்பல்லோ அரசியலிலிருந்து பிறந்திருக்கலாம். இந்த 21 ம் நூற்றாண்டிலும் தொடர்ந்து அரசியல், அறிவியல் மற்றும் கலாச்சார பலன்களைக் கூட கொடுத்து வருகிறது. சிலசமயங்களில் பரப்புரை கூட நேர்மறையானதாக இருக்கலாம்.

– மார்க் வோல்வர்டன்

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்