தமிழ்நாடு வலிமையான சூழலியல் சட்டங்களை நிறைவேற்றி, மத்திய சட்டங்களை விடவும் சூழலியலுக்குத் தகுந்த மேற்பார்வையை கொண்டுவரப்படவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கூட்டாக ஒன்றிணைந்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
பேராசிரியர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், திரைக்கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் தமிழகத்தை மையமாக கொண்டு செயல்படும் சூழலியல் அமைப்பான பூவுலகின் நண்பர்கள் மற்றும் ஸ்டெரிலைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் உள்ளிட்ட அமைப்புகளைச் சார்ந்த 67 பேர் கூட்டாக இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
அந்தக் கடிதத்தில், ”உங்களுக்கும் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்கள். திராவிட, சமூக நீதிக் கொள்கைகள் மத பெரும்பான்மை அரசியல், சாதி அரசியல் மற்றும் மொழி வெறியை தோற்கடித்திருப்பதில் குறிப்பாக மகிழ்ச்சிக் கொள்கிறோம். கூட்டாட்சி கொள்கைகளை முன்னிறுத்தி மாநிலத்தின் உரிமைகளை மீட்டெடுக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், நாட்டில் வலிமையான சுற்றுச்சூழல் சட்டங்களைக் கொண்டுவந்து வளர்ச்சித் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டிய நேரத்தில், EIA மற்றும் கடற்கரை மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பானை போன்ற சட்டங்கள் அளிக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் மேலும் குறைப்பதில் மத்திய அரசு பரபரப்பாக செயல்பட்டு வருவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
உச்சம் தொடும் மாடுகளின் மீதான கரிசனம்: மாடுகளுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் – யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
சுற்றுச்சூழல் சீரழிவினால் ஏழை மக்கள், வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களை அளவுக்கதிகமாக பாதிக்கப்படும் நிலையில் குறிப்பாக, கீழ்க்கண்டவற்றை உறுதிப்படுத்துமாறும் அவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.அவை பின்வருமாறு ;
a) வேதாந்தா காப்பர் ஆலை திறக்கப்படக் கூடாது. அந்தக் கம்பெனி மற்றும் அதன் இயக்குனர்கள்மீது அவர்களின் சுற்றுசூழல் குற்றங்களுக்குக் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட வேண்டும்.
b) சுற்றுச்சூழலை சீரழிக்கும் சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை திட்டம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், கன்னியாகுமரி சர்வதேச கொள்கலன் முனையம், சித்தூர்-தச்சூர் 6-வழி சாலை திட்டம் மற்றும் கூடன்குளத்தில் அமைக்கப்படவிருக்கும் கூடுதலான நான்கு அணு உலைகள் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.
c) வேடந்தாங்கல் சரணாலயத்தின் எல்லைக் குறைப்பு மற்றும் பழவேற்காடு சரணாலயத்தில் பாதுகாப்புக்குட்பட்ட இடைப்பகுதியை குறைப்பதற்கு முந்தைய அரசின் கோரிக்கைகளைத் திரும்பப்பெற வேண்டும்.
மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்
d) இந்துஸ்தான் யூனிலெவரின் பாதரச கழிவுகள் கொண்ட கொடைக்கானல் தொழிற்சாலைப் பகுதி சர்வதேச தரநிலைகளை பின்பற்றித் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
e) மரபணு மாற்று விதைகளை அனுமதிக்காதீர்
f) நிலத்தடி நீரின் வணிகரீதியான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகளை உள்ளடக்கிய விரிவான நிலத்தடி நீர் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்.
g) பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் நகர மக்களைச் சூழலியல் மற்றும் வாழ்வாதார பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய தூர பகுதிகளுக்கு வெளியேற்றுவதற்கு எதிராகவும், நகர ஏழை மக்களின் பொருளாதார எதிர்பார்ப்புகளுக்கு முக்கியத்துவம் தந்து, சமத்துவமாக சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளைச் சரிசெய்வதற்காகவும் விரிவான கொள்கைகளைக் கொண்டுவர வேண்டும்.
h) CRZ மற்றும் EIA அறிவிப்புகளின் லட்சியங்களை வலிமைப்படுத்தி அடைவதற்கு மாநில அளவில் சட்டங்களை நிறைவேற்றுதல்.
அறிவியலாளர்களின் குரலுக்கு செவிசாய்க்காத அவலம் – உண்மையை மறைத்ததா மத்திய அரசு?
i) தங்கள் அதிகார வரம்பிற்குள் நடக்கும் சூழலியல் சீரழிக்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்து, அவற்றுக்கு எதிராக செயல்பட பஞ்சாயத்து மற்றும் வார்டு அளவிலான கமிட்டிகளை வலிமைப்படுத்தி அவற்றின் திறனை மேம்படுத்த வேண்டும்.
j) சீரழிந்த நிலம் மற்றும் நீர்நிலைகளை சரிசெய்யவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை பேரிடர்களை கணித்து எதிர்க்கொள்ளவும், அதிகம் நீர் பயன்படுத்தாத, ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்கவும் மாநில அளவில் திட்டங்கள் செயல்படுத்துதல்.
k) டெல்டாவில் ஹைட்ரோகார்பன் சுரண்டலுக்கு எதிரான உறுதிமொழியை வலிமைப்படுத்துதல். அனைத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் அனைத்து ஹைட்ரோகார்பன் நடவடிக்கைகளையும் உள்ளடக்குதல், சுத்திகரிப்பு மற்றும் செயலாக்கம் உட்பட.
l) தமிழகத்தின் ஆறுகளுக்கு நீராதாரமாக இருக்கும் கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளின் சிறப்பு சூழலுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் அதே நேரத்தில், அப்பகுதி மக்களின் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மாவட்ட ரீதியான பாதுகாப்பு மற்றும் பொருளாதார திட்டங்கள் மக்கள் பங்கேற்போடு உருவாக்கப்பட வேண்டும்.
m) புவி வெப்பமடைதலுக்கு காரணமாக இருக்கும் உள்ளூர் பகுதிகளின் காற்று, நீர் மற்றும் நிலத்தை மாசுபடுத்தும் புதிய நிலக்கறி அனல் மின் திட்டங்களைக் கைவிட்டு, மாநிலத்தின் ஆற்றல் தேவைகளுக்குப் பரவலாக்கப்பட்ட சிறிய அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களைப் பின் தொடர வேண்டும்.
உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்கள் தொடர்பாக பொது ஆலோசனை வழங்கவும், சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பங்கேற்பதை வலுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்துத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.