Aran Sei

கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் பாதிக்கப்பட்ட பெண்

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனைச் சார்ந்த மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை நடைபெற்றுவந்தது. பரிசோதனையின்போது தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒரு தன்னார்வலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. ஆகையால், அஸ்ட்ராஜெனெகா தடுப்பு மருந்து சோதனையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

இதே தடுப்பு மருந்தைச் சோதிக்கும் இந்திய நிறுவனமா சீரம் இன்ஸ்டிட்யூட் (SII) இப்போதும் சோதனையைத் தொடர்வதால், இந்திய மருத்துவ ஒழுங்கமைப்பு நிர்வாகி (DCGI) இந்த சோதனையைத் தொடர்வதற்கான காரணத்தைக் கேட்டு அந்த நிறுவனத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் (SII), நாங்கள் விதிகளைப் பின்பற்றுகிறோம், இருப்பினும், சோதனையை நிறுத்தக்கோரி இதுவரை எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார்கள். தடுப்பு மருந்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முயல்வதாகக் கூறி அஸ்ட்ராஜெனெகா, பெரிய அளவிலான சோதனைகள் நடைபெறும்போது இதுபோன்று சில சம்பவங்கள் நடக்கும் என்றும் கூறியுள்ளது.

பார்ச்சுனர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து இதற்கு முன் கொரோனா சிகிச்சைக்காக பரிசோதிக்கப்பட்டுவந்த மருந்துகளில் உலக அளவில் முன்னிலை வகித்தது. ஆரம்பத்தில் இந்த உடல்நிலை குறைவைப் பற்றிய விவரங்கள் வெளிவராத நிலையில், பாதிக்கப்பட்டவர் ஒரு பெண் என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சோரியோட் முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அவருக்கு “டிரான்ஸ்வர்ஸ் மயிலிடிஸ் என்று அழைக்கப்படும் ஒரு அரிய, தீவிரமான, முதுகெலும்பு அழற்சி கோளாறுடன் தொடர்புடைய, நரம்பியல் நோய்க்கான அறிகுறிகள் இருந்தன” என்று ஸ்டேட்நியூஸ் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

அவருக்கு இந்த நோய் இருப்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றும், அந்த பெண் குணமடைந்து வருகிறார் என்றும், விரைவில் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறலாம் என்றும் சோரியோட் கூறியுள்ளார்.

இதற்கிடையில், “ஸ்புட்னிக்-வி” எனும் தடுப்பு மருந்தை, இறுதிக்கட்ட சோதனைகளை நடத்தி பயன்படுத்த, ரஷ்யா அளித்துள்ள வாய்ப்பை, இந்திய நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்