Aran Sei

காப்புரிமை வேண்டாம்; மக்களைக் காப்பாற்றினால் போதும்

Vacinnation

ஆக்ஸ்ஃபம் (Oxfam) அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், வரும் மாதங்களில் உற்பத்தி செய்ய இருக்கும் கொரோனா தடுப்பூசியில் பாதிக்கும் மேல், பணக்கார நாடுகள் முன்கூட்டியே வாங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் வெறும் 13% மட்டுமே கொண்டிருக்கும் பணக்கார நாடுகள், உற்பத்தி செய்யப்பட உள்ள கொரோனா தடுப்பூசிகளில் 51 சதவிகிதத்தை முன்னணி நிறுவனங்களிடமிருந்து சொந்தமாக்கிக் கொண்டுள்ளதாக ஆக்ஸ்ஃபம் அமைப்பு எச்சரித்துள்ளது.

மூன்றாம் கட்ட பரிசோதனயில் இருக்கும் முதன்மையான 5 தடுப்பு மருந்துகளுக்காக, மருந்து நிறுவனங்கள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் உலக நாடுகளோடு மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தினை ஆக்ஸ்ஃபம் அமைப்பு பகுப்பாய்வு செய்துள்ளது.

ஐந்து தடுப்பூசிகளின் சோதனையும் வெற்றி அடைந்தாலும் (சாத்தியங்கள் மிக அரிது) கூட, 2022-ம் ஆண்டு வரையில் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு (61%) தடுப்பூசி கிடைக்காது என அதில் குறிப்பிட்டுள்ளது.

மாடர்னா (Moderna) நிறுவனம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியின் மொத்த உற்பத்தியையும் முன்கூட்டியே பணக்கார நாடுகளுக்கு விற்றதில் இதுவரை 248 கோடி டாலர்கள் பெற்றிருப்பதா கூறியுள்ளது. அமெரிக்காவில் ஒரு டோஸ் 12 முதல் 16 டாலருக்கும், பிற நாடுகளில் 35 டாலருக்கும் விற்பனை செய்துள்ளது.

தேவைப்படும் எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் மக்களுக்கான தடுப்பு மருந்தை கொண்டு வர வேண்டும் என ஆக்ஸ்ஃபம் உட்பட உலக நாடுகளின் பல அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உற்பத்தியாளர்களும் மருந்து நிறுவனங்களும், தடுப்பு மருந்தின் உற்பத்தியை அதிகரித்து, காப்புரிமை இல்லாமல் தடுப்பூசி குறித்த தகவல்கள் மற்றும் ஆய்வுகளை பகிர்ந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.

ஆக்ஸ்ஃபம் அமைப்பின் இடைக்கால நிர்வாக இயக்குனர் செமா வெரா, ”மருந்து நிறுவனங்கள் தங்களின் லாபத்தையும், ஏகபோகத்தையும் பாதுகாப்பதை அரசுகள் அனுமதித்தால் தொற்றுப்பரவல், அதனால் நிகழும் துயரங்கள் மற்றும் பொருளாதார இழப்பு நீடிக்கும்.” எனக் கூறியுள்ளார்.

”உலக மக்களுக்கு தேவைப்படும் தடுப்பு மருந்து மொத்தத்யையும் எந்த தனிப்பட்ட நிறுவனத்தாலும் உற்பத்தி செய்ய முடியாது. அதனால் தான், மக்களின் பாதுக்காப்புக்காக, காப்புரிமை எதுவும் இல்லாமல் தடுப்பு மருந்து குறித்த ஆய்வுகளை பொதுமைப்படுத்த வலியுறுத்துகிறோம். நமது தேவை மக்களுக்கான தடுப்பு மருந்து, லாபத்துகானது இல்லை.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் ஒரு நபருக்கு ஐந்து டோஸ் வரையில் வாங்கியிருப்பதாகவும், வங்கதேசத்தில் ஒன்பது நபர்களில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை தடுப்பு மருந்து பெற முடிந்திருப்பதாகவும் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் செப்டம்பர் 4-ம் தேதி கொரோனா தொற்று குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார்.

அதில் அவர், “சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி பற்றிய நல்ல செய்தி கிடைக்கும் என நம்புகிறோம். சிறந்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதனை நாம் திறம்பட பயன்படுத்துவது அவசியம். தடுப்பூசியின் உற்பத்தி அதிகரிக்கையில், அது எல்லா மக்களுக்கும் எளிதில் கிடைக்கும்படி இருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

“தொடக்கத்தில், கொரோனாவை தடுக்க முன்னணியில் போராடும் பணியாளர்களுக்கும், நோய்த்தொற்றால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மற்றும் வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும்.” என்று கூறினார்.

மேலும், “சில நாடுகளில் உள்ள எல்லா மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கச் செய்வது என்று இல்லாமல், எல்லா நாடுகளிலும் சிலருக்கேனும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். இது தார்மீக மற்றும் சுகாதர தேவை மட்டுமன்றி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேவையும் கூட.” எனக் கூறினார்.

”பிணைக்கப்பட்டுள்ள நம் உலகத்தில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காவிட்டால், கொரோனா தொற்று அதிகரித்து, உலக பொருளாதாரம் மீள்வதில் தாமதம் ஏற்படும்.” என்றார்.

தொடர்ந்து, ”கொரோனா தடுப்பூசியை பொது உரிமையாக கொள்வது உலக நாடுகள் ஒவ்வொன்றுக்குமே நன்மை பயக்கும். தடுப்பூசிக்கு நாடுகள் தனிப்பட்ட முறையில் உரிமை கோரினால் கொரோனா தொற்றுப்பரவல் நீடிக்குமே அன்றி குறையாது” எனவும் டெட்ரோஸ் அதானம் கூறியிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்