Aran Sei

சூப்பர் ஹீரோவான கம்போடியா நாட்டு எலி

மிழர்களுக்கு ராம நாராயணன் எடுத்த படங்கள் பற்றியும், தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்களை பற்றியும் தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யானை, நாய், குரங்கு, பாம்பு எல்லாம் சாதா சேட்டைகள் மட்டுமல்ல. அவர்களின் படங்களில் மனிதர்களே செய்ய முடியாத சாதனைகளை கூட செய்திருக்கின்றன. ஆனால் அதிகபட்சம் அவைகள் ஹீரோவையும் ஹீரோயினையும் காப்பாற்றும். ஆனால் கம்போடியா நாட்டு எலி ஒன்று பல்லாயிரம் மக்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..

மாகவா என்று பெயரிடப்பட்ட ஆப்ரிக்க வகையை சேர்ந்த ஐந்து வயது எலிதான் இந்த சூப்பர் ஹீரோ கதையில் நாயகன். 80-களிலும் 90-களிலும் வியட்னாம் உள்நாட்டு போரில் 50 லட்சத்திற்கும் அதிகமான கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.  வியட்நாம் போரில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்களால் வீசப்பட்ட வெடிக்கப்படாத குண்டுகள் இன்னும் வியட்நாமின் பல பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன என்று கூறப்படுகிறது. கம்போடியாவில், 1979 முதல் இதுவரை 64 ஆயிரம் பேர் இந்த கண்ணி வெடிகளாலும், வெடிக்கப்படாத குண்டுகளாலும் இறந்துள்ளனர்.

மாகவா கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்கப்படாத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது. மேலும் 15 லட்சம் சதுர அடி நிலத்தை முழுதாக சோதனை செய்ய உதவி இருக்கிறது.

இதை கவுரவிக்கும் விதமாக பீப்பிள்ஸ் டிஸ்பன்சர் ஆப் சிக் அனிமல்ஸ் என்ற பிரிட்டிஷ் தொண்டு நிறுவனம் மாகவாவுக்கு தங்க பதக்கத்தை வழங்கியிருக்கிறது.

இது குறித்து தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஜான், “ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்கும் மக்கள் சேவையில், மாகவா நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்கிறது. மாகவா ஒவ்வொரு முறை கன்னி வெடிகளை கண்டுபிடிக்கும் பொழுதும், உள்ளூர் மக்களின் உயிரை காப்பாற்றுகிறது.” என்கிறார்.

மேலும் “மாகவாவின் அர்ப்பணிப்பிற்கும், திறனிற்கும், தைரியத்திற்கும் இதை விட பெரிய அங்கீகாரங்களைப் பெறும்” என்றார்.

வெடிகள் கண்டுபிடிப்பு சோதனையில் மனிதர்களை விட மாகவா வேகமா செயல்படுகிறது. டென்னிஸ் கோர்ட் அளவுள்ள ஒரு நிலத்தை மாகவாவால் 30 நிமிடத்தில் நேரத்தில் சோதனையிட முடியும். ஆனால் மெட்டல் டிடக்டர் கருவியின் உதவியுடன் ஒரு மனிதனால் இதே அளவு நிலத்தை சோதனையிட நான்கு நாட்கள் ஆகும் என்கிறார்கள். சோதனையின் போது ஏதாவது வெடிகள் கண்டுபிடித்தால், மாகவா சிக்னல் கொடுக்கிறது.

என்னதான் வேலையில் துடிப்பாக இருந்தாலும், சோதனை குழுவிற்கு செல்ல பிள்ளையாக இருக்கிறது. சோதனைகள் இல்லாத நேரத்தில் வாழைப்பழங்கள், தர்பூசணி, வேர்க்கடலை சாப்பிடுவதிலும் சுழலும் சக்கரத்தில் விளையாடுவதிலும் ஆர்வம் செலுத்துகிறது என்கிறார்கள் குழுவினர்.

கூடுதல் தகவலாக, பெல்ஜியத்தை சேர்ந்த அபோபோ நிறுவனம் ‘ஹிரோ ராட்’ என்ற பெயரில் தெற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில், கன்னி வெடிகளை சோதனை செய்ய எலிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது. அதில் முதல் ரான்க் பெற்று வெளி வந்திருக்கிறார் மாகவா எலி.

திறமையிலும் சுட்டித்தனத்திலும் எல்லோரையும் கவர்ந்துள்ள மாகவா, இனி சூப்பர் ஹீரோ படங்களில் வரலாம். குழந்தைகளுக்கு ஆதர்ச நாயகனாகலாம். மாகவா குழந்தைகளின் பென்சில், ரப்பர், ஜாமண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை நிரப்பலாம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்