Aran Sei

சென்னை மக்களுக்கு ஆபத்து – ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை மாநகராட்சியின் குப்பை எரிஉலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைக்  கைவிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் மயிலாப்பூர், அம்பத்தூர், பள்ளிக்கரணை, கொடுங்கையூர், சாத்தாங்காடு, அயனாவரம் ஆகிய 6 இடங்களிலும் புறநகரில் தாம்பரத்தில் இரு இடங்கள், சிட்லப்பாக்கத்தில் ஓரிடம் என மொத்தம் 9 இடங்களில் குப்பை எரிஉலைகளை அமைக்கும்  திட்டம் மனித நலனுக்கு எதிரானது என்று ராமதாஸ் கண்டித்துள்ளார்.

பொருளாதாரத் தோல்வி

சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் அமைக்கப்படவுள்ள 9 எரிஉலைகளிலும் தலா 100 டன்கள் வீதம் தினமும் 900 டன்கள் குப்பைகள் எரித்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதன் பொருளாதார வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது, ”குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் என்ற புரட்சிகரமான தலைப்புடன் இத்திட்டம் முன்வைக்கப்படும் போதிலும், இத்திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் மிக மிகக் குறைவு ஆகும். அதேநேரத்தில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் அளவிட முடியாததாகும். பொருளாதார அடிப்படையிலும் இது தோல்வித் திட்டமாகும்.” என்று உறுதிப்பட கூறுகிறார்.

ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட படம்

வெளியாகும் நச்சுகள்

இத்திட்டத்தால் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சீரழிவுகள் ஏற்படும் என்று எச்சரிப்பதுடன், எரிஉலைகளில் எரிக்கப்படும் குப்பைகளிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு, பாதரசம், கரியமில வாயு உள்ளிட்ட வாயுக்களும், காற்றில் மிதக்கும் நச்சுத் துகள்கள், ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் ஆகியவையும் வெளியாகும் என்று அதன் பட்டியலை வரிசைப்படுத்துகிறார் ராமதாஸ்.

மேலும் இவற்றில் பெரும்பான்மையான வேதிப்பொருட்கள் நச்சுத்தன்மை கொண்டவை என்றும், காற்றில் அழையாமல் நிலைத்திருக்கும் இவை மனித உடலுக்குள் சென்றாலும் கூட அழியாமல் நிலைத்திருக்கும் என்று கூறியுள்ளார்.

உருவாகும் நோய்

”இத்தகைய ஆபத்தான வேதிப்பொருட்களால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு, தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரையும் குப்பை எரிஉலைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கும்.” என்று எச்சரித்து, ”போபால் நகரில் விஷவாயுக் கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் சென்னையில் எரிஉலைகளால் படிப்படியாக ஏற்படும்.” என்று போபால் விஷவாயு தாக்குதல் சம்பவத்தை இத்தோடு இணைக்கிறார்.

மின்சார உற்பத்தி

இவ்வளவு மோசமான ஆபத்துகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடிய எரிஉலைகளில் இருந்து குறிப்பிடத்தக்க அளவில் மின்சாரமாவது உற்பத்தி செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பி, அதற்கு “இல்லை என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும்.” என்று விடையளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, குப்பை மேலாண்மை தொடர்பான மத்திய அரசின் விதிகளுக்கு இந்தத் திட்டம் எதிரானது என்றும், சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது தொழில்நுட்ப அடிப்படையில் சாத்தியமற்றது என்றும், அதனால் குப்பை எரிஉலை திட்டம் நிச்சயமாக தோல்வியடைந்து பெரும் பொருளாதார இழப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

பள்ளிக்கரனை (நன்றி : New Indian Express)

அனல்மின் நிலையமும் எரிஉலைகளும்

புவி வெப்பமயமாதலுக்கான முக்கியக் காரணங்களில் ஒன்று குப்பையை எரிப்பது என்று கூறியுள்ளார். மேலும், ”அனல் மின்னுற்பத்தி நிலையங்களால்தான் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அனல் மின்நிலையங்களை விட மோசமான பாதிப்புகளை எரிஉலைகள் ஏற்படுத்துகின்றன. நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு பாதரசம், 6 மடங்கு சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்களை எரிஉலை மின்னுற்பத்தி நிலையங்கள் வெளியிடுகின்றன.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எந்த நன்மையும் செய்யாத, காற்று மாசு, உடல்நலக் கேடு, புவிவெப்பமயமாதலுக்குக் காரணமான வாயுக்களை வெளியேற்றுதல், பொருளாதார இழப்பு எனப் பல கேடுகளுக்கு வழிவகுக்கும் குப்பை எரிஉலைகளை சென்னையில் அமைப்பது தற்கொலைக்குச் சமமான முடிவு என்கிறார். எனவே, இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்றும், அத்துடன், மத்திய அரசின் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 உள்ளிட்ட குப்பை மேலாண்மைக்கான விதிகளை முழுமையாகப் பின்பற்றி குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, “பூஜ்ய குப்பை எனப்படும் குப்பையில்லா மாநகர கோட்பாட்டை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்