Aran Sei

ப்ளாஸ்டிக் உண்ணும் என்சைம்கள் – குப்பைகளுக்கு இனி குட்பை

Credits: Knowledge Insead

உலகம் முழுவதும் தினம்தினம் பெருகிக்கொண்டே இருக்கும் ப்ளாஸ்டிக் குப்பைகளை எப்படி அகற்றுவது என்பதற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.

ப்ளாஸ்டிக்-ஐ ஆறு மடங்கு விரைவாக மக்கச் செய்யக் கூடிய வகையிலான என்சைம் ‘காக்டெயில்கள்’ ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜான் மக் கீஹன், க்ரெக் பெக்காம் ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளார்கள்.

பிஇடி-ஏஸ் (PETase) என்ற ப்ளாஸ்டிக்கை அழிக்கக்கூடிய என்சைமிலிருந்து இந்த வகை என்சைம் காக்டெயில்கள் (ஒன்றுக்கும் மேற்பட்ட என்சைம்களின் கலவை) உருவாக்கப்பட்டுள்ளன.

பிஇடி-ஏஸ், ப்ளாஸ்டிக் பாட்டில்களில் காணப்படும் இடியோனெல்லா சகயென்சிஸ் என்ற ஒருவகை பாக்டீரியாவின் என்சைமுடன் சேர்க்கப்பட்டபோது விரைவாக ப்ளாஸ்டிக்கை அழிக்க முடிந்திருக்கிறது.

பாலி எதிலின் டெரிஃப்தலேட் என்ற பிஇடி-யினை அதன் மூலக்கூறுகள் வரை உடைப்பதால், எண்ணற்ற முறைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு ப்ளாஸ்டிக் மாசுபாட்டினை குறைக்க இந்த என்சைம்கள் வழிவகை செய்துள்ளன.

மக்குவதற்கு நூறு ஆண்டுகள் வரை எடுத்துக்கொள்ளும் கடினமான வகை ப்ளாஸ்டிக்கையும் இந்த என்சைம்கள் சில தினங்களிலேயே மக்கச் செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

Credits: Phys.org

Science Daily என்ற அறிவியல் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், பேராசிரியர் ஜான் “இயற்கையாக இருக்கும் என்சைம்களை விட இந்த காக்டெயில் என்சைம் மூன்று மடங்கு அதிகமாக செயல்பட்டது, மேலும் பல புதியவகை மேம்பாடுகளுக்கு வழிவகுத்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

டன் கணக்கில் குவிந்து வரும் ப்ளாஸ்டிக் குப்பைகளை விரைந்து மக்கச் செய்வதற்கு இந்த கண்டுபிடிப்பு பெரிய வகையில் உதவும் என்றும் ஜான் தெரிவித்துள்ளார்.

இந்த என்சைம் காக்டெயிலை விட பன்மடங்கு விரைவாக ப்ளாஸ்டிக்கை மக்கச் செய்யும் என்சைம்களை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

பேராசிரியர் ஜான் மக் கீஹன் தி கார்டியன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டு, சக்திவாய்ந்த என்சைமகளை உருவாக்கினால், ஓரிரு ஆண்டுகளிலேயே ப்ளாஸ்டிக் குப்பைகளுக்கு சிறந்த தீர்வு காண முடியும்” என்று கூறியிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்