Aran Sei

இயற்பியலுக்கான நோபல் பரிசு: வியப்பூட்டும் கருந்துளை கண்டுபிடிப்புகள்

Credits: The Nobel Prize - Twitter

ந்த ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெண் ஆராய்ச்சியாளர் உட்பட மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கருந்துளை குறித்த கண்டுபிடிப்புக்காக பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ரோஜர் பென்ரோஸ், பால்வெளி மண்டலத்தின் மையத்தில் உள்ள பருப்பொருள் பற்றிய கண்டுபிடிப்புக்காக அமெரிக்கர் ஆண்ட்ரியா கெஸ் மற்றும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ரெய்ன்ஹார்ட் கென்ஜெல் ஆகியோருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

 

தனித்துவமான கணித முறைகளைப் பயன்படுத்தி ரோஜர் பென்ரோஸ், கருந்துளைகள் சார்பு கோட்பாட்டின் நேரடி விளைவு என்பதை நிறுவினார். அவற்றுள் நுழையும் எல்லாவற்றையும் பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மை வாய்ந்த இந்தக் கருந்துளைகள் இருப்பதாக ஐன்ஸ்டீன் கூட நம்பவில்லை.

Credits: The Nobel Prize - Twitter

1965-ம் ஆண்டு ரோஜர் பென்ரோஸ், கருந்துளைகள் உருவாக முடியும் என்பதை நிரூபித்து, இயற்கையின் விதிகள் அனைத்தும் செயலற்றுப் போகச் செய்யும் தன்மை கருந்துளையில் இருப்பதாகவும் ரோஜர் விளக்கியிருந்தார்.

ஐன்ஸ்டீனைத் தொடர்ந்து சார்பியல் கோட்பாட்டுக்கான முக்கியமான பங்களிப்பாக இந்தக் கண்டுபிடிப்பு இன்றளவும் கருதப்படுகிறது.

ஆண்ட்ரியா கெஸ் மற்றும் ரெய்ன்ஹார்ட் கென்ஜெல் 1990-கள் முதலே பால்வெளி மையத்தில் உள்ள சஜிட்டேரியஸ்-ஏ என்ற பகுதியை ஆராய்ந்து வந்துள்ளார்கள்.

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கிக் கருவி பயன்படுத்திப் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்ட பிறகே அடர் மேகங்கள், துகள்களைக் கடந்து பால்வெளியை அவர்களால் காண முடிந்துள்ளது.

நீண்ட கால ஆய்வுக்குத் தேவையான தொழில் நுட்பங்களையும், தனித்துவமான கருவிகளையும் வடிவமைத்துள்ளார்கள். ஆண்ட்ரியா, கென்ஜெல் ஆய்வு முடிவுகள், பால்வெளி மையத்தில் பெரும் கருந்துளை இருப்பதற்கான உறுதியான ஆதாரங்களை அளித்துள்ளன.

இயற்பியலுக்கான நோபல் பரிசு குழுத் தலைவர் டேவிட் ஹவிலேண்ட், “இந்தக் கண்டுபிடிப்புகள் சிறிய மற்றும் பருப்பொருட்களின் ஆய்வில் முன்னோடியாக இருக்கிறது. இந்தப் பொருட்கள் குறித்து பல கேள்விகளுக்கு மேற்கொண்டு ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு பேரண்டம் குறித்த ஆய்வுக்காக ஜேம்ஸ் பீபில்ஸ், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கோள்கள் பற்றிய ஆய்வுக்காக மிஷெல் மேயர், டிடியர் கியுலஸ் ஆகியோருக்கு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

1921-ம் ஆண்டு, ஒளிமின் விளைவு குறித்த கண்டுபிடிப்புக்காக ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-க்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்