Aran Sei

`ஈஷா விழாக்களை தடை செய்ய வேண்டும்’ –  வழக்கறிஞர் எம்.வெற்றிச்செல்வன்

ஷா யோக மையம் நடத்தும் மகாசிவராத்திரி போன்ற பெரிய விழாக்களை வெள்ளியங்கிரி போன்ற சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மலைத்தொடர் பகுதிகளில் நடத்துவது கவலை அளிக்கும்படியாக உள்ளது என்று தேசிய பசுமைத் தீர்பாயம் நேற்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற விழாக்களுக்கான அனுமதியை ஒழுங்குபடுத்துவதற்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து விரிவான செயல்திட்ட வரைவு கேட்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் எம்.வெற்றிச்செல்வன் தேசிய பசுமைத் தீர்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில், “மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் இரண்டு லட்சம் பக்தர்கள் ஈஷா மையத்திற்கு வருகிறார்கள். அதிகமான செயற்கை விளக்கு வெளிச்சத்தாலும், வாகனங்கள் போன்றவற்றின் ஒளிகளாலும் யானை போன்ற வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. ஈஷா யோக மையத்தில் திடக்கழிவுகள் சரியான முறையில் அகற்றப்படுவதில்லை” என்று உள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் ஈஷா சிவராத்திரி விழாவில் ஏற்படும் ஒலியின் அளவு அரசால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.

நேற்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நீதிபதி கே.ராதாகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சாய்பால் தஸ்குப்தாவையும் கொண்ட அமர்வு அளித்த உத்தரவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அதிகாரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சூழலியல் பொறியாளர் மூவரும் கோவை ஈஷா யோகா மையத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகளும் மாசு கட்டுபாட்டு விதிகளும் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து, இம்மாத இறுதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

மேலும், “விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இந்த ஒலி அளவு தீங்கு விளைவிக்கும். மேலும் அங்கு அளவுக்கு அதிகமாக மக்காத குப்பைகள் உருவாகிறது. அதை எப்படி அகற்றுகிறார்கள் என்று தெரியவில்லை” என்று அமர்வு கூறியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈஷா ஆலோசகர் இ.ஓம்பிரகாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். யோகா மையத்தில் சட்ட விதிகள் மதிக்கப்படுகிறது என்றும் விழாக்களில் ஒலி அளவு அனுமதிக்கப்பட்ட அளவே உள்ளதாகவும் அதனால் தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து இவ்வழக்கின் மனுதாரரான வழக்கறிஞர் எம்.வெற்றிச்செல்வனிடம்  அரண்செய் பேசிய போது, “வனப் பகுதிகளில் இரவில் மட்டும் வெளியே வந்து வேட்டையாடக் கூடிய விலங்குகள் நிறைய உள்ளன. அவற்றுக்கு இருட்டு மிகத் தேவையான ஒன்று.

இது போன்ற விழாக்களில் பயன்படுத்தப்படும் பெரிய விளக்குகளால் அந்த விலங்குகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. இந்த ஒளி மாசு இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படாமல் உள்ளது. இது போன்ற பெரிய விழாக்களில் ஏற்படும் அதிகப் படியான குப்பைகளால் மண் மாசுபடுகிறது.

முதலில் இவை எல்லாவற்றையும் முறையாகக் கண்காணிக்க நமக்குச் சரியான செயல் திட்டம் உள்ளதா? இரண்டாவது சட்டத்திற்குப் புறம்பான கட்டடத்தில் இது போன்ற பெரிய விழாக்கள் நடத்த நாம் அனுமதிக்கலாமா? ஆனால் தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது? இது போன்ற விழாக்களை உடனே தடை செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்