Aran Sei

நிலாவில் மண் அள்ளி, பூமியில் விற்பனை செய்ய நாசா திட்டம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, நிலாவில் இருந்து மண்ணை அள்ளி வந்து ஆராய்ச்சி செய்ய தனியார் நிறுவனங்களை நாடியுள்ளது. இதற்கு முன்பே ஆராய்ச்சிக்காக நிலவுக்கு செல்லும் விண்கலங்களை தனியாரிடம் வாங்க முடிவு செய்திருந்தது. இதை அடுத்து, இப்போது நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணை அள்ளி வர தனியார் நிறுவனங்களை நாடியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 10-ஆம் தேதி, செக்யூர் வேல்ட் ஃபவுண்டேஷன் நடத்திய ஆன்லைன் கலந்துரையாடலில், நாசா நிர்வாகிகளில் ஒருவரான ஜிம் ப்ரைடன் ஸ்டைன் கூறும் பொழுது, “நிலவில் இருந்தும் மண்ணை அள்ள முடியும். அதை பூமியில் விற்பனைக்கும் கொண்டு வர முடியும் என்பதை நிரூபித்துக்காட்டவே இந்த திட்டத்தை செயல்படுத்தவுள்ளோம்” என்றார்.

நாசாவிற்கு 2024-ஆம் ஆண்டிற்குள் 1.8 அவுன்ஸ் முதல் 18 அவுன்ஸ் வரையான நிலவு மண் தேவைப்படுகிறது. அதாவது 50 கிராம் முதல் அரை கிலோ நிலவு மண். இதற்கு ஒவ்வொரு முறையும் 15000 டாலர் முதல் 25000 டாலர் வரை அந்நிறுவனங்களுக்கு தர நாசா முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நிறுவனம் கையளித்திடும் போது 10 சதவீத பணத்தையும், விண்கலம் செலுத்தப்படும் போது 10 சதவீத பணமும் தரப்படும். நிலவில் இருந்து எடுக்கப்பட்ட மண் முழுதாக நாசாவிடம் ஒப்படைக்கும் பொழுது, மீத 80 சதவீத பணம் அந்த நிறுவனங்களுக்கு தரப்படும் என்ற நாசா தெரிவித்துள்ளது.

நன்றி : Space.com

”எங்கள் திட்டங்கள் எவ்வித தடைகளும் இன்றி, நடந்தால், நிலவின் மண் வளம் இங்கே வந்து சேரும்” என்று ப்ரைடன் ஸ்டைன் கூறுகிறார்.

நிலவின் வளங்களை பிரித்தெடுத்து ஆராயும் முறையை தொடங்குவதும், அதன் வளங்களை விற்பனைக்கு கொண்டுவருவதும் இதன் நோக்கமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ”இந்நிறுவனங்கள் 18 அவுன்ஸ் நிலவு மண்ணைதான் எடுக்க வேண்டும் என்ற நிபந்தனை இல்லை. அவர்கள் அதற்கு அதிகமாகவும் எடுக்கலாம். அதை நாசா அல்லாத ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யலாம்” என்று ப்ரைடன் கூறுகிறார்.

மேலும் “அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் எல்லா நாட்டு நிறுவனங்களுக்கும், எந்த தனி நபருக்கும் இதை விற்பனை செய்யலாம். இதன் மூலம் நிலவு ஆராய்ச்சியை ஒரு வணிகமாக்க முயல்கிறோம்” என்கிறார் ப்ரைடன் ஸ்டைன்.

நிலவின் வளங்களை ஆராய்ச்சி செய்யும் எங்கள் திட்டத்தின் மூலம் நிலவில் மனிதர்கள் உயிர்வாழ்வதற்கான நிரந்திரமான சூழலை உருவாக்க முடியும் என்று நம்புவதாகவும், இந்த திட்டத்தின் வெற்றி, 2030-ஆம் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்திற்கு சுற்றுலா விண்கலங்களை அனுப்பும் முயற்சிக்கு அடித்தளமாக இருக்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்