Aran Sei

வெள்ளி கோளில் உயிரினங்கள்? புதிய ஆய்வு முடிவுகள்

Image Credits: NASA

வெள்ளி கோளின் மேகங்களின் உயரத்தில், உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் திங்கள் (செப்டம்பர் 14, 2020) அன்று அறிவித்துள்ளனர்.

சிலி மற்றும் ஹவாயை மையமாகக் கொண்ட தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி, வானியலாளர்கள் வெள்ளி கோளின் மேகங்களில் பாஸ்பீன் என்ற வேதிப் பொருளின் அடையாளத்தைக் கண்டறிந்தார்கள். பூமியை பொறுத்தவரை பாஸ்பீன் வேதிப்பொருள் உயிரினங்களுடன் மட்டுமே தொடர்புடைய ஒரு நச்சுவாயுவாகும்.

பல கோணங்களில் பல சாத்தியங்களை ஆராய்ந்த பின்னர் பாஸ்பீன் அடையாளம் உயிர் இருப்பைத் தவிர வேறு எந்த அர்த்தத்தையும் தரவில்லை என்று வானியலாளர்கள் கூறுகின்றனர்.

“ஒன்று உயிரினங்கள் இருக்கவேண்டும் அல்லது பாறை மிகுந்த கிரகங்களில் நாம் எதிர்பார்த்திராத வேதியியல் செயல்முறைகள் நடந்திருக்க வேண்டும்” என்று இந்த ஆய்வின் துணை ஆய்வாளரும் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் (எம்.ஐ.டி) ஆராய்ச்சி விஞ்ஞானியுமான ஜானுஸ் பெட்கோவ்ஸ்கி கூறியுள்ளார்.

இந்த ஆய்வின் மற்றொரு இணை ஆய்வாளரும் எம்.ஐ.டியின் கோள் விஞ்ஞானியுமான சாரா சீஜர் “எரிமலைகள், மின்னல் தாக்குதல்கள், சிறிய விண்கற்கள் வளிமண்டலத்தில் விழுவது போன்ற எதுவும் எங்கள் குழு கண்டறிந்திருக்கும் அளவிலான பாஸ்பீனை வெளியிடாது. ஆகையால் உயிர் இருப்பது மட்டும் தான் இதற்குச் சரியான விளக்கமாக இருக்கக்கூடும்” என்று கூறியுள்ளார்.

பாஸ்பீன் வேதிப்பொருள் ஒற்றை செல் நுண்ணுயிரிகளிலிருந்து வெளியாகி இருக்கும் என்று கருதப்படுகிறது. மிகச்சிறிய அளவிலான இந்த நுண்ணுயிரிகள் வெள்ளிக் கோளின் வெப்பமான நிலப்பரப்புக்கு மேல் மிதந்து கொண்டிருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அங்கு அவை நீர் மற்றும் சூரிய ஒளியை பெறுவது எளிதாக இருந்தாலும், உயர் அளவிலான அமிலத்தன்மையைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

“உண்மையில் இந்த சோதனை ஒரு ஆர்வத்தினால் செய்யப்பட்டது. மேகங்களில் உயிரினங்கள் நிரம்பியிருப்பது போன்ற தீவிரமான சாத்தியங்களை நிராகரித்து விட முடியும் என்று நினைத்தேன். வெள்ளி கோளின் அலைக்கற்றையில், பாஸ்பீனின் முதல் அடையாளங்கள் கிடைத்தபோது, அது ஒரு அதிர்ச்சியாக இருந்தது! ” என்று வேல்ஸில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இந்த ஆய்வின் மூத்த ஆய்வாளருமான ஜேன் கிரேவ்ஸ் கூறியுள்ளார்.

எந்த விதமான உயிரினமும் வாழ்வதற்கு மிகவும் கடினமான சூழலை வெள்ளி கொண்டுள்ளது. 900 டிகிரி ஃபாரன்ஹைட் வெப்பநிலையில் உள்ள அதன் நிலப்பரப்பில் எந்த உயிரினமும் வாழ்வது சாத்தியமில்லை. நிலப்பரப்புக்கு 30 மைல் உயரத்தில் வெள்ளி கோளின் காற்று மண்டலத்தில் 30 டிகிரி முதல் 200 டிகிரி பாரன்ஹைட் வரையிலான வெப்பநிலையில் உள்ள மிகக் குறுகிய மிதவெப்ப மண்டல பகுதியில்தான் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று விஞ்ஞானிகள் ஊகித்து வந்தனர்.

இந்த மேக அடுக்கில்தான் ஆய்வாளர்கள் குழு பாஸ்பீன் அடையாளங்களை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அங்கு உயிர் இருப்பது நிச்சயம் சாத்தியம்தான், ஆனால் அதை நிரூபிக்க இன்னும் நிறைய ஆதாரங்கள் தேவை. வெள்ளிக் கோளின் காற்று மண்டலத்தில் பாஸ்பீன் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் தேவை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

(இந்த ஆய்வறிக்கை பிரிட்டிஷ் ஆராய்ச்சி இதழான நேச்சர் அஸ்ட்ரானமியில் வெளியாகியுள்ளது)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்