Aran Sei

இன்று மாலை – வியாழன், சனி கோள்கள் ஒன்றாகத் தோன்றும் அரிய காட்சி

Image Credit : npr.org

மது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள்களான வியாழனும், சனியும் இன்று இரவு மிக நெருங்கி தோன்றுகின்றன. இதை “மகத்தான ஒன்றிணைவு” என்று வானியலாளர்கள் அழைக்கின்றனர்.

நமது சூரிய மண்டலத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனுக்கும் தமக்கும் இடையேயான ஈர்ப்பு விசை காரணமாக, சூரியனை வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு கால அளவுகளில் அவை சுற்றி வருகின்றன.

(1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட புளூட்டோ, ஒன்பதாவது கோள் என்று கருதப்பட்டது. 1990-களுக்குப் பிறகு புளூட்டோவைப் போன்ற அளவுடைய பல சிறு கோள்கள், புளூட்டோ இருக்கும் அதே கய்ப்பர் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. எனவே, 2006-ம் ஆண்டு கோள் என்பதன் வரையறையை மாற்றியமைத்த சர்வதேச வானியலாளர்கள் சங்கம், புளூட்டோவை சிறு கோள் என்று வரையறுத்தது)

  • நமது பூமி சுமார் 365 நாட்களுக்கு ஒரு முறை சூரியனைச் சுற்றி வருவதையும் அதை ஒரு ஆண்டு என்று நாம் அழைப்பதையும் நாம் அறிவோம். நமது பூமி சூரியனிலிருந்து 14.7 கோடி கிமீ தொலைவில் உள்ளது.
  • சூரியனிலிருந்து 76.3 கோடி கிமீ தொலைவில் உள்ள வியாழன் கோள், நமது கணக்குப்படி 12 ஆண்டுகளை விடக் குறைவான நேரத்தில் சூரியனை ஒரு முறை சுற்றி வருகிறது.
  • அதே நேரம், சூரியனிலிருந்து 149.1 கோடி கிமீ தொலைவில் உள்ள சனி, சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கு நமது கணக்குப்படி 29 ஆண்டுகளுக்கும் அதிகமாகிறது.

(ஒரு கோள் சூரியனிலிருந்து எவ்வளவு அதிக தொலைவில் உள்ளதோ, அதன் சுற்றி வரும் காலமும் அவ்வளவு அதிகமாக உள்ளது).

எனவே, சனியும், வியாழனும் 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை வானத்தில் இணைவது போல, பூமியில் வாழும் நமக்குத் தெரிகிறது. ஆனால், அவற்றுக்கு இடையேயான தூரம் சுமார் 60 கோடி கிலோமீட்டருக்கும் அதிகமாகும்.

இவ்வாறு அவை இணைவது போலத் தோன்றும் நாட்களில், சரியான நேரத்தில் வானத்தைப் பார்த்தால், இந்த இரண்டு கோள்களும் முழுநிலவின் அளவில் ஐந்தில் ஒரு பங்கு தூரம் மட்டுமே பிரிக்கப்பட்டிருக்கும்.

இதை தொலைநோக்கிகள் மூலமாகவோ, வெறுங்கண்ணிலோ கூட பார்க்க முடியும் என்று npr.org தளம் தெரிவிக்கிறது. இவ்வளவு நெருக்கத்தில் இரண்டு கோள்களும் ஒன்றையொன்று தொடுவது போலவும், அல்லது வானத்தில் பிரகாசமான ஒற்றை விண்மீன் போலவும் தோன்றலாம்

(நினைவிருக்கட்டும் – இரண்டு கோள்களும் ஒன்றிலிருந்து ஒன்று 60 கோடி கிலோமீட்டருக்கும் அதிமான தொலைவில் உள்ளன).

Image Credit : https://news.rice.edu
வானத்தில் வியாழன் (Jupiter), சனி (Saturn) ஆகியவற்றைக் காட்டும் வரைபடம் Image Credit : https://news.rice.edu

இது போன்ற ஒன்றிணைவு தோற்றம் கடைசியாக 2000 ஆண்டு மே மாதம் நடைபெற்றது. ஆனால், அவை வானத்தில் இருந்த இடத்தின் காரணமாக, சாதாரணமாக பார்க்க முடியாதபடி, அவற்றின் இணைவுற்ற தோற்றம், சூரியனின் ஒளியால் மறைக்கப்பட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் தொலைநோக்கியகம், வியாழனும் சனியும் இவ்வளவு நெருக்கமாகத் தோன்றியது, கடைசியாக ஜூலை 1623-ல் நிகழ்ந்தது என்றும், ஆனால் அதையும் தெளிவாக பார்க்க முடியாதபடி இருந்தது என்றும் தெரிவித்துள்ளது.

ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வானவியலாளர் பேட்ரிக் ஹார்டிகன், “மார்ச் 4, 1226 அன்று அதிகாலையில் சூரிய உதயத்துக்கு முன்பு, இதே போன்று தெளிவாக வானத்தில் பார்க்க முடிந்த, நெருக்கமான ஒருங்கிணைவு தோற்றம் நிகழ்ந்தது” என்று சென்ற மாதம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

“சூரியன் மறைந்த பிறகு, ஒரு மணி நேரத்துக்குள், தென்மேற்கு திசையில் கீழ்வானத்தில் பார்க்கவும். டிசம்பர் 21-ம் தேதி அன்று, இரண்டு மாபெரும் கோள்களும் பத்தில் ஒரு டிகிரி கோண அளவுக்கு நெருக்கமாக தோன்றும்” என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இந்த மாதத் தொடக்கத்தில் விளக்கமளித்துள்ளது.

Image Credit : NASA
Image Credit : NASA

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தியில்

“வியாழன், சனி கிரகங்கள் ஒன்றிணைந்து தோன்றும் காட்சி கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது. இன்று 21.12.2020 அந்த அரிய காட்சியை வெறும் கண்களால் காணலாம்.

சூரியன் மறைந்ததும் தென்மேற்கு வானில் சந்திரனுக்கும் சூரியன் மறைந்த இடத்துக்கும் இடையில் வியாழனும் சனியும் இணைந்து பிரகாசமாக தோன்றுவதைக் காணத் தவறாதீர்கள்.

வானத்து நிகழ்ச்சி ஒவ்வொன்றும் நம்முள் ஏற்படுத்தும் கிளர்ச்சியை நாம் சொல்லில் வடிக்க முடியாது. கண்டு அனுபவிக்க வேண்டும். ஒத்த சிந்தனை உடையவர்களுடன் கூட்டாக காண்பது கூடுதல் இன்பத்தை அளிக்கும்.

இன்று மாலை மயங்கியதும் அனைவரின் கண்களும் தெற்கு வானை நோக்கட்டும்!”

என்று கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்