Aran Sei

புவி வெப்பமயமாதல் – CO2 உமிழ்வுகளை குறைப்பதற்கான ஒப்பந்தத்தின் நிலை என்ன?

Image credit : nasa.gov

ந்தியாவின் கரியமில வாயு (CO2) உமிழ்வுகளின் சதவீதம் உலக சராசரியை விட வேகமாக அதிகரித்துள்ளன என்ற தி ஹிந்து வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.

சீனாவும் அமெரிக்காவும் தமது கரியமில வாயு உமிழ்வுகளை குறைத்துள்ளன. ஆனால், அளவு ரீதியாக பார்க்கும் போது அந்த நாடுகளின் உமிழ்வுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் உமிழ்வு மிகக் குறைவாகவே உள்ளது.

2011-15 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 2016-19 காலப்பகுதியில் கரியமில வாயு உமிழ்வுகள்

  •  உலக அளவில் சராசரியாக 0.7% மட்டுமே அதிகரித்தன
  • சீனாவில் 0.4% அதிகரித்தன
  • அமெரிக்காவில் 0.7% குறைந்தன

இந்த கால கட்டத்தில் சீனா 1000 கோடி டன் அளவிலும், அமெரிக்கா 541 கோடி டன் அளவிலும், இந்தியா 265 டன் அளவிலும் கரியமில வாயுவை உமிழ்ந்துள்ளன என்று நேச்சர் பருவநிலை மாற்றம் இதழில் வெளியான கட்டுரை தெரிவிக்கிறது.

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்கா- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாழ்த்து கூறி வரவேற்ப்பு

“இந்தியாவின் உமிழ்வுகளின் சதவீத அதிகரிப்பை, பல்வேறு நாடுகளின் வளர்ச்சிப் பாதையின் பின்னணியில் பார்க்க வேண்டும்” என்று எரிசக்தி வளங்கள் கழகத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் அஜய் மாதுர் கூறியுள்ளார். “நமது குறைப்புகள் முதன்மையாக மின்உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் திறன் அதிகரிப்பின் மூலமாக பெறப்பட்டவை” என்று கூறியுள்ள அவர், “அடுத்த மதிப்பீட்டில் நாம் மேம்பட்ட முடிவுகளை காட்ட முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

உலக அளவில், 64 நாடுகள் தமது உமிழ்வுகளை குறைத்துள்ளதாகவும், 150 நாடுகளில் அவை அதிகரித்திருப்பதாகவும் பிரிட்டனின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக் கழகம், அமெரிக்காவின் ஸ்டேன்ஃபர்ட் பல்கலைக் கழகம், உலக கரியமில திட்டம் ஆகியவை நடத்திய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

2020-ல் கொரோனா பரவலை தடுப்பதற்கான முழு அடைப்புகளின் காரணமாக உலக அளவில் உமிழ்வுகள் 9.7% குறைந்தன, இந்தியாவில் 9.6% குறைந்தன. உலக அளவில் 2019 அளவிலிருந்து 2.9 டன் கரியமில வாயு உமிழ்வு குறைந்திருக்கிறது. ஆனால், முழு அடைப்புகள் கரியமில வாயு உமிழ்வுகளை குறைப்பதற்கான,  நீடித்த அல்லது விரும்பத்தக்க வழி இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தொழில்புரட்சிக்குப் பிறகு, மனித நடவடிக்கைகளின் காரணமாக உமிழப்பட்ட கரியமில வாயு போன்ற பசுமை இல்ல வாயுக்களின் விளைவாக பூமி 1 டிகிரி வெப்பமடைந்திருக்கிறது.

பூமியின் காற்று மண்டலத்தினுள் கரியமில வாயு போன்றவை அதிகரிக்கும் போது, அவை சூரிய ஒளியை அதிகமாக தக்க வைத்து, பூமியின் மேற்பரப்பை வெப்பமடையச் செய்கின்றன. இதனால், பூமியின் பருவநிலைகளும், காலநிலைகளும் மாற்றமடைகின்றன என்று பருவநிலை மாற்றம் பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றங்களின் காரணமாக, பாலைவனங்கள் விரிவடைவது, வெப்ப அலைகள், காட்டுத் தீகள் அதிகரிப்பது, மேலும் தீவிரமான புயல்கள், கடும் குளிர் அல்லது கடும் வெப்ப காலநிலை ஆகியவை ஏற்படுகின்றன.

2015 பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ், 21-ம் நூற்றாண்டின் இறுதிக்குள் பூமியின் வெப்பநிலை 0.5-1 டிகிரியை விட அதிகமாக உயராமல் இருக்கும் வகையில் கரியமில வாயு உமிழ்வுகளை குறைக்க வேண்டும் என்று உலக நாடுகள் ஏற்றுக் கொண்டிருந்தன.

இந்த ஒப்பந்தம், 2015-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி, 196 உலக நாடுகளின் பிரதிநிதிகள் ஒத்த கருத்துடன் ஏற்றுக் கொண்டதாகும். இப்போது அந்த ஒப்பந்தத்தில் 191 நாடுகள் பங்கேற்றுளனன. அமெரிக்கா, சென்ற ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது, இந்த ஆண்டு ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு, மீண்டும் சேர விருப்பம் தெரிவித்து பிப்ரவரி 19-ம் தேதி மீண்டும் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளது.

உத்தர்காண்ட் பனிப்பாறை உடைப்பு பேரழிவு – பருவநிலை மாற்றம் காரணம்

இந்த ஆண்டு இறுதியில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கவுள்ள ஐக்கிய நாடுகள் பருவநிலை உச்சிமாநாட்டில் உலக நாடுகள் ஒன்று கூடி, இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தையும், தொடர்ந்து செல்ல வேண்டிய பாதையையும் விவாதிக்கவுள்ளன.

“பாரிஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு கரியமில வாயு உமிழ்வுகளை குறைப்பதற்கான நாடுகளின் முயற்சிகள் பலன் தரத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், அவை இன்னும் போதுமான அளவில் இல்லை. இன்னும் நிறைய நாடுகளில் அளவுக்கு அதிகமாக அவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன” என்று மேற்சொன்ன ஆராய்ச்சியின் தலைமை ஆராய்ச்சியாளரான ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த “சுற்றுச் சூழல் அறிவில்களின் கல்லூரி”யின், ராயல் சொசைட்டி பேராசிரியர் கோரின் ல கெர கூறியுள்ளார்.

பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கை நிறைவேற்றுவதற்கு, 2020-களில் ஆண்டு தோறும் 100 முதல் 200 கோடி டன் அளவுக்கு கரியமில வாயு உமிழ்வுகள் குறைக்கப்பட வேண்டியுள்ளது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்