Aran Sei

12 ஆண்டு கால தேடல்: கண்டறியப்படுமா டைனோசர் முட்டைகள்?

Image Credits: Political Manch

ஜார்கண்டின் சாஹிப்கஞ்ச் மாவட்டத்தில் சுமார் 1500-2000 லட்சம் ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்ட புதைபடிவ இலைகளைப் புவியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சனிக்கிழமை, தில்காரி பகுதியில் உள்ள துத்கோல் மலையில் 20 செமீ நீளமும் 5 செமீ அகலமும் உள்ள பிலோஃபைலம் வகையைச் சேர்ந்த இந்தப் புதைபடிவ இலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இங்கு மேலும் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருவதாக முன்னணி புவியியலாளரும் சாஹிப்கஞ்ச் பி.ஜி கல்லூரியின் உதவி பேராசிரியருமான ரஞ்சித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் திட்டத்தின் கீழ் லக்னோவின் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த அகழ்வாராய்ச்சி நடத்தப்படுகிறது.

“இத்தகைய இலைகள் தாவரவகை டைனோசர்களால் நுகரப்பட்டன. ஜூராசிக் காலம் முதல் கிரெட்டேசியஸ் காலம் வரையிலான சிறிய புதைபடிவங்கள் முன்னரே இப்பகுதியில் காணப்பட்டன. மேலும் அகழ்வாராய்ச்சி நடத்தினால் டைனோசர் முட்டைகளின் புதைப்படிவை கூடக் காணக்கூடும்,” என்று ரஞ்சித் குமார் நேற்று பிடிஐயிடம் கூறியுள்ளார்.

“நானும் எனது குழுவும் கடந்த 12 ஆண்டுகளாக இப்பகுதியில் பணியாற்றி வருகிறோம், ஆனால் இதற்கு முன்னர் இது போன்ற முக்கிய புதைபடிவங்களை நாங்கள் கண்டதில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னதாக சாஹிப்கஞ்சில் உள்ள மகாராஜ்பூர், தர்பஹாத், கர்மி பகாத் மற்றும் பஹர்வா பகுதிகளிலும் அதற்கு அருகில் உள்ள பக்கூர் மாவட்டத்தின் சோனாஜரி ஆகிய இடங்களிலும் பல புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

“இந்தப் பகுதியில் மேலும் பல புதைப்படிவங்களை கண்டறியும் வாய்ப்புகள் உள்ளது,” என்றும் ரஞ்சித் குமார் சிங் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்