Aran Sei

நிறம் மாறும் பூக்கள்: கால நிலை மாற்றம் காரணமா?

Credits: Smithsonian

காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப பூக்கள் நிறம் மாறி வருவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

புவியின் பருவநிலை மாற்றம் காரணமாக மிருகங்கள் மற்றும் தாவரங்கள் பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. பூக்களும் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை என்பதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் வியப்பூட்டுகின்றன.

கடந்த 75 ஆண்டுகளாக ஓசோன் படலத்தின் சிதைவுகள் காரணமாகப் பூக்களின் நிறம் மாற்றம் குறித்து கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ள ஆய்வு Current Biology என்ற இதழில் வெளிவந்துள்ளது.

credits:Current biology

கிளெம்சன் பல்கலைக்கழக உயிரியல் துறையைச் சேர்ந்த மாத்தியூ கோஸ்கி, விர்ஜினியா பல்கலைக்கழகத்தில் இருந்து ட்ரூ மக்குயின், பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக்கத்தைச் சேர்ந்த டையா லின் ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.

பூக்களின் நிற மாற்றம் அதன் இதழ்களில் உள்ள புற ஊதா நிறமிகளின் செயல்பாட்டில் ஏற்படுத்தி வந்துள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Techquila தளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஆய்வு குறித்து மாத்தியூ கூறியுள்ளதாவது;

”மனிதர்கள் கண்ணுக்குத் தெரியாத புற ஊதா நிறமிகள் பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோடு, அவற்றை வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கின்றன.

credits:Phys Org

மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் போல, புற ஊதா கதிர்கள் பூக்களின் மகரந்தத்தையும் பாதிக்கிறன்றன. மலர் இதழ்களில் புற ஊதா கதிர்களை உறிஞ்சக்கூடிய நிறமிகள் அதிக அளவில் இருந்தால், பாதிப்பு குறைவாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

கடலில் இருந்து உயர் மட்டத்தில் மற்றும் நிலநடுக்கோட்டுக்கு அருகில் வளரக்கூடிய தாவரங்களின் பூக்களில் அதிகப்படியான புற ஊதா நிறமிகள் இருப்பதையும் ஆய்வுக்கு முன் இந்தக் குழுவினர் கண்டறிந்துள்ளார்கள். இதுவே இந்த ஆய்வுக்கு வழிவகுத்துள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பெறப்பட்ட 42 பல்வேறு இனங்களைச் சேர்ந்த 1,238 பூக்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை 1941 முதல் 2017-ம் ஆண்டு வரையில் சேகரித்துப் பராமரிக்கப்பட்டு வந்த பூக்கள்.

1941-ம் ஆண்டு முதல் பூக்களில் உள்ள நிறமிகள் ஆண்டுக்கு 2% என்ற வகையில் அதிகரித்து வந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத் தாவரவியலாளர் சார்லஸ் டேவிஸ், ஆய்வின் முடிவுகள் ஆச்சர்யமளிப்பதாக இருந்தாலும் மிகவும் அர்த்தப்படும் வகையில் உள்ளதாக கூறியிருக்கிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்