தேசிய சைபர் கிரைம் புகாரளிக்கும் போர்டலில் www.cybercrime.gov.in வந்துள்ள புகார்களின் மீது விரைந்து முதல் தகவல் அறிக்கையைப் (எஃப ஐ ஆர்) பதிவு செய்யுமாறு உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளது. உள்துறை அமைச்சகத்திடம் இருக்கும் தரவுகளின் அடிப்படையில் மொத்தமாக இருக்கின்ற புகார்களில் வெறும் 2.5 சதவீதம் புகார்களின் மீது மட்டும்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும், இந்தப் போர்ட்டலின் மூலம் இணையதளத்தில் இருக்கும் சட்டவிரோதமான கருத்துகளைக் (comments) களையெடுப்பதற்கு ”சைபர் கிரைம் தன்னார்வலர்களை” உருவாக்க இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறர்க்கு உதவி செய்யும் நபர்களை சைபர் கிரைம் தன்னார்வலராகப் பதிவு செய்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறது உள்துறை அமைச்சகம். இதன் மூலம் இணையத்தில் சட்டவிரோதமான கருத்துகளைப் பரப்புபவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர்கள் இணையத்தில் பதிவிட்ட கருத்துகளையும் முடக்க முடியும் என்றும் கூறியுள்ளது.
மேலும் சட்டவிரோதக் கருத்துகள் என்று சிலவற்றை அடையாளப்படுத்துகிறது அமைச்சகம். அவை இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரான கருத்துகள்; இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பிற்கு எதிரான கருத்துகள்; அரசின் பாதுகாப்பிற்கு எதிரான கருத்துகள்; வெளி நாடுகளுடனான நட்பு உறவிற்கு எதிரான கருத்து; பொது ஒழுங்கைத் தொந்தரவு செய்வதை நோக்கமாகக் கொண்ட கருத்து; மத நல்லிணக்கத்திற்கு எதிரான கருத்து மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வக்கிரம் கொண்டுள்ள கருத்துகள் எனக் குறிப்பிட்டுள்ளது.
இதில் தன்னார்வலராகச் சேர விரும்பும் நபர்கள் தங்கள் பெயர், முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது உள்துறை அமைச்சகம்.
இந்தத் தேசிய சைபர் கிரைம் புகாரளிக்கும் போர்டல் தொடங்கப்பட்டதில் இருந்து ஏறக்குறைய இரண்டு லட்சம் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் வெறும் 5000 புகார்களின் மீதுதான் எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளப்பட்டதாக தரவுகள் கூறியுள்ளன.
ஒரு மூத்த அரசியல் அதிகாரி இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்தும் தினம் ஆயிரத்திற்கும் அதிகமான புகார்கள் வந்தாலும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, ஜுலை மாதம் 30,000 புகார்கள் அளிக்கப்பட்டுள்ள போதும் வெறும் 273 எஃப்ஐஆரே பதிவு செய்யப்பட்டுள்ளன.
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் முதலில் தொடங்கப்பட்ட போர்டலில் குழந்தைகளின் ஆபாசப் படங்கள், பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள் ஆகிய குற்றங்களுக்கு மட்டுமே புகாரளிக்க முடியும். அதை மேம்படுத்தி ஆகஸ்ட் 30, 2019 அன்று தொடங்கப்பட்ட இந்த போர்டல் அனைத்து விதமான சைபர் குற்றங்களுக்கும் புகாரளிக்க ஒரு பொதுவான தளமாக மாற்றப்பட்டது.
குழந்தைகளின் ஆபாசப்படங்கள், பாலியல் வன்புணர்வு மற்றும் கூட்டுப் பாலியல் வன்புணர்வு ஆகிய குற்றங்களுக்கு எதிராக ஜனவரி முதல் செப்டம்பர் வரை 13,244 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் தரவுகள் கூறியுள்ளன.
கடந்த பிப்ரவரி 4-ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி ராஜ்ய சபாவில் ஆகஸ்ட் 30, 2019 முதல் ஜனவரி 30, 2020 வரை 33,152 சைபர் குற்றங்கள் புகாரளிக்கப்பட்டதாகவும் அதில் வெறும் 790 குற்றங்களுக்குத்தான் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
2018 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டு 63.5 சதவீதம் சைபர் குற்றம் அதிகரித்துவிட்டதாக தேசியக் குற்ற ஆவணப் பதிப்பகம் கூறியுள்ளது.
2018 – 27, 248 சைபர்குற்றங்கள்
2019 – 44,546 சைபர்குற்றங்கள் (மோசடி-26,891, பாலியல் தொந்தரவு-2,266, அவதூறு-1874)
சைபர் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் புகாரளிப்பதற்கு ஏதுவாக உதவி எண்ணை (155260) அறிமுகப்படுத்தியிருக்கிறது டெல்லி அரசு. மேலும் சைபர் கிரைம் இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.
புகாரைப் பெற்றதும் நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி, இந்த விஷயத்தைச் சரிபார்த்த பின்னர் இணைய மோசடியில் ஈடுபட்ட பணத்தைத் தடுப்பதற்காகச் சம்பந்தப்பட்ட வங்கியில் பேசி அந்தப் பணத்தை முடக்குவார். பின்பு “இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் பணத்தை மீட்டெடுப்பதிலும் சைபர் குற்றவாளிகளை அடையாளம் காணவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு உதவும்” என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.