Aran Sei

கொரோனா தடுப்பு மருந்து – மீண்டும் சாதிக்கும் கியூபா

Image Credits: Times Now

கியூபா இந்த ஆண்டுக்குள் தனது சொந்த தடுப்பூசி மூலம் கியூப மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் தடுப்பூசி தென் அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்து ஆகும் என்று  யூரோநியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

2021-ன் மிக முன்னேறிய கட்டத்தில் இருக்கும் சோபெரானா 2 தடுப்பூசியை 10 கோடி முறைக்கான அளவில் தயார் செய்ய முடியும் என கியூபா  கூறுகிறது. கியூபாவின் மக்கள் தொகை சுமார் 1.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

“எல்லாம் சரியாக நடந்தால், இந்த ஆண்டு கியூப மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்” என்று கியூபாவின் ஃபின்லே தடுப்பூசி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் விசென்ட் வெரெஸ் கூறினார்.

அதன் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது, 19,122 தொற்றுகளும் 180 இறப்புகளும், என தொற்றுநோயால் சற்று குறைவாகவே கியூபா பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் தொடங்கவிருக்கும் சோபெரானா 2 இரண்டாம் கட்ட சோதனை 900 தன்னார்வலர்களை உள்ளடக்கியது, அது வெற்றிகரமாக நடைபெற்றால் மார்ச் மாதத்தில் 1.5 லட்சம் தன்னார்வலர்களுடன் மூன்றாம் கட்ட சோதனை தொடங்கும்.

இந்த ஆண்டின் முதல் பாதியில் தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்குவதே இதன் நோக்கம் என்றும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அவர்கள் விருப்பப்பட்டால் தடுப்பூசி போடப்படும் என்றும் டாக்டர் வெரெஸ் கூறியள்ளார்.

தென் அமெரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் உள்ள நாடுகளில் மருந்தக சோதனை கட்டத்தினுள் நுழைந்துள்ள  தடுப்பூசி கியூபாவுடையது மட்டுமே என உலக சுகாதார அமைப்பின் (WHO) உள்ளூர் பிரதிநிதி ஜோஸ் மோயா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவரது நம்பிக்கைக்கான காரணம் என்னவென்றால், “கியூபா தனது சொந்த தடுப்பூசிகளை தயாரிப்பதில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டது. அதன் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் கிட்டத்தட்ட 80% தடுப்பூசிகள் கியூபாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.”

1962 முதல் அமெரிக்கா விதித்த தடைகளின் காரணமாக, கியூபா பெரும்பாலும் அதன் சொந்தத் தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. “1980-களின் முற்பகுதியிலிருந்தே, இது உயிரி தொழிநுட்பங்களை சார்ந்து செயல்படத் தொடங்கியது. குறிப்பாக, மெனிங்கோ காக்கஸ் பி-க்கு எதிரான முதல் தடுப்பூசியைக் இதன் மூலம் கண்டுபிடித்தது,” என்று லொசேன் பல்கலைக்கழகத்தின் சுகாதார மானுடவியல் ஆராய்ச்சியாளரான நில்ஸ் கிராபர் கூறுகிறார்.

தென் அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு கியூபாவின் மருத்துவ சேவைகள் அனுப்பப்படுவதை மேற்கோள் காட்டி, “உள்நாட்டு தேசிய சுகாதார முறையை மேம்படுத்துவதும் மருத்துவ சேவைகளை ஏற்றுமதி செய்வதும் கியூபாவின் நோக்கமாக இருந்தது” என அவர் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்