Aran Sei

“மீண்டும் ஒரு தெர்மாகோல் சாதனை” – மீனவத் தொழிலாளர் சங்கம்

தனுஷ்கோடியில் வீசும் மணல் புயலைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தால் ஆன தடுப்புவேலிகளை அமைத்துள்ளனர். கான்கிரீட் தடுப்புகளே கடல் காற்றின் சீற்றத்தைத் தடுக்க முடியாதநிலையில் மரத்தடுப்பு மூலம் மணல் புயலைக் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலினால்  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள துறைமுக நகரமான தனுஷ்கோடி உருக்குலைந்து போனது. இராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் சாலைகள் கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஆங்காங்கே, நகரும் மணல் குன்றுகளும் உருவாகின. இதனால் இந்திய அரசால், மனிதர்கள் வாழத் தகுதியற்ற பகுதியாக தனுஷ்கோடி அறிவிக்கப்பட்டது. மீன்பிடித் தொழிலை நம்பியிருந்த சில நூறு மீனவர்கள் மட்டும் அங்கேயே அடிப்படை வசதிகளின்றி வசித்து வந்தனர். மேலும், புயலால் அழிந்து போன கட்டடங்களைக் காண சுற்றுலாப் பயணிகளும், இறந்தவர்களுக்கு திதி போன்ற பூசைகள் நடத்த பொது மக்களும் வந்து செல்கின்றனர்.

இப்பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் தொடங்கி டிசம்பர் மாதம் வரை சூறாவளிக் காற்று வீசுவது வழக்கம். இந்தக் காற்றின் வேகத்தினால் கடற்கரையோரம் உள்ள மணல் குன்றுகள் சாலைகளில் குவிந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தின. இதைத் தடுக்க சாலையின் இருபுறங்களிலும் சவுக்கு மரங்கள் நடப்பட்டன. அவற்றையும் மீறி சாலையை நோக்கி மணல் குன்றுகள் நகர்ந்தன. இதனால் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டன. அந்தத் தடுப்புச் சுவரையும் தாண்டி மணல் சாலைக்கு வரும் நிலையும் நீடித்தது.

நன்றி : Trip Advisor

இந்நிலையில் மணல் குன்றுகள் நகர்வதைத் தடுக்க, 100 மீட்டர் நீளத்துக்கு ஐந்தடி உயரத்தில் மூன்றடுக்கு மரக்கட்டைகளால் ஆன தடுப்புகளைக் கொண்டு சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகள் ரூ.10 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தனுஷ்கோடி பகுதியில் வீசும்  மணல் புயலுக்கு இடைவெளியின்றிக் கட்டப்பட்டுள்ள காங்கிரீட் தடுப்புச் சுவர்களே ஈடுகொடுக்க முடியாத நிலையில், இடைவெளி கொண்ட மரக்கட்டைவேலிகளால் எப்படி மணல் பரவலைத் தடுக்கும் எனத் தெரியாமல் மீனவர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு மீனவத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சி.ஆர்.செந்திலுடன் அரண்செய் பேசிய போது, “தனுஷ்கோடியில் இந்தியப் பெருங்கடலில்  இருந்து வரும் காற்று மிகக்கடுமையாக இருக்கும். ஆடி மாதங்களில் இங்கு, அரபு பாலை வனங்களில் வரும் மணல் புயல் போல வரும்.

இந்தியாவில் ஆமைகள் வந்து முட்டை இடுவதற்கான அற்புதமான இடம் தனுஷ்கோடி. அரிச்சல்முனையிலிருந்து (தீவின் இலங்கைப் பகுதிக்கு அருகில் உள்ள எல்லை) சவுக்குக் காடுகள் வழியாகப் பாம்பன் வரைக்கும் உள்ள தென்கடற்கரை மணலில் ஆமைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும். ஒரு ஆமை எந்தக் கடற்கரையில் இடப்பட்ட முட்டையில் இருந்து வெளிவந்ததோ, அங்குதான் அது முட்டை இடும். அரசு மணல் வருகையைத் தடுப்பதற்காக அங்கு பாறைக் கற்களைப் போட்டு, அதன் வருகையையே தடுக்கிறது. இது கடற்சூழலியலையே  மொத்தமாகப் பாதித்து வருகிறது. இதற்குப் பல லட்சகளிலும் கோடிகளிலும் பணம்  ஒதுக்கப்படுகின்றன. இந்த மரக்கட்டை தடுப்பு நடவடிக்கை, வைகை அணையில் தெர்மாகோல் போட்டு நீர் ஆவியாவதைத்  தடுத்த சாதனையைத்தான் ஞாபகப்படுத்துகிறது” என்றார்.

தனுஷ்கோடியில் தற்போது சாலைகள் போடப்பட்டுள்ளன. அடுத்து ரயில் பாதை அமைப்பதற்கான திட்டம் முதற்கட்ட பணியில் உள்ளது. இந்த வளர்ச்சிகள் குறித்துக் கேட்ட போது, “தனுஷ்கோடி முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக மீனவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு, காஷ்மீரைப் போல முழுக்க முழுக்க டிஃபென்ஸ் துறைக்கும், காவல்துறைக்குமான தனிப்பட்ட பகுதியாக அரசு மாறிவருகிறது .

பல காலங்களாக நடந்தும், ட்ரக்குகளிலும் சென்று வந்தபோது அந்த மக்களுக்குச் சுதந்திரம் இருந்தது. சாலை, ரயில், மின்சாரம் போன்ற வளர்ச்சிகள் வந்த பின் அந்தச் சுதந்திரம் இல்லை. இந்த வளர்ச்சி பூர்வீகக் குடிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பே, ராணுவத் தளமாக மாற்றப்போவதாகச் சொல்லி ஊரைக் காலி செய்யச் சொன்னார்கள். இதுதான் அவர்களின் திட்டம்” என்றார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்