Aran Sei

கோவில்பட்டியில் 28 மயில்கள் மரணம் – காரணம் என்ன?

Credits: hindutamil.in

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விளைநிலங்களில் நேற்று 28 மயில்கள் இறந்து கிடந்ததுள்ளன. இறப்புக்கான காரணம் குறித்து வனச்சரகர் சிவராம் தலைமையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இளையரசனேந்தல் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மக்காச்சோளம் பயிரிடப்பட்ட விளை நிலங்களில் 28 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளன. மயில்களின் உடல் மீது இளையரசனேந்தல் கால்நடை மருத்துவர் கனிமொழி பிரேத பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து கோவில்பட்டி வனச்சரகர் சிவராமிடம் பேசியபோது, “கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பணியாற்றி வருகிறேன். இதுபோல அதிகமான எண்ணிக்கையில் மயில்கள் இறந்து கிடப்பது இதுவே முதல்முறை. கடந்த ஆண்டு மலையடிவாரத்தில் 4 மயில்கள் தண்ணீர் இல்லாமல் வெப்பத்தினால் இறந்து கிடந்தன.” என்று கூறினார்.

“இங்குள்ளவை பெரும்பாலும் விவசாய நிலங்கள். பயிர்களுக்கு பூச்சி வராமல் இருக்க விதைகளில் பூச்சிமருந்து கலக்கப்படுகிறது. இந்த விதைகளை சாப்பிட்டதால் மயில்கள் இறந்திருக்கலாம். அல்லது சிறு கற்களை உட்கொண்டதால் அஜீரணத்தில் இறந்திருக்கலாம். போஸ்ட் மார்டம் முடிந்தால் தெரிய வரும்.” எனக் கூறினார்.

மேலும், “மயில்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்த 28 மயில்களின் இறப்பு குறித்து வனவிலங்கு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்” என்றும் வனச்சரகர் சிவராம் கூறியிருந்தார்.

சூழலியல் செயற்பாட்டாளர், எழுத்தாளர் பாமயனிடம் இது குறித்து பேசிய போது, “விவசாய நிலங்களை அதிகப்படுத்த, பொதுக் காடுகள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் பட்டா நிலங்களாக மாற்றப்பட்டு, காட்டு விலங்குகளின் வசிப்பிடமான புதர்க்காடுகள் குறைந்துள்ளது. இதனால் மயில்கள் வசிக்க இடமின்றி தோட்டங்கள், வயல்களை நோக்கி நகர்ந்து விதை பயிர்களைத் தின்கின்றன” என்று கூறினார்.

“எண்டோசல்ஃபான் உட்பட உலக அளவில் தடை செய்யப்பட்டுள்ள பல பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியச் சந்தையில் எளிதில் கிடைப்பதுடன், பயன்பாட்டிலும் இருந்தும வருகின்றன. அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்பட்ட விதைகளை சாப்பிட்டு மயில்கள் இறந்திருக்க வாய்ப்பு அதிகம். மற்றபடி உணவை அரைத்துச் செரிப்பதற்காக மட்டுமே மயில்கள் சிறு கற்களை உண்ணும்.” என்று தெரிவித்தார்.

மேலும் “புதர்க்காடுகள் குறைந்துவரும் நிலையில், மயில்களின் முட்டையை சாப்பிடக் கூடிய நரிகள் மற்றும் காட்டுப்பூனைகளின் எண்ணிக்கை பெரும் அளவில் குறைந்துள்ளது. இதன் காரணமாக மயில்களின் எண்ணிகையைக் கட்டுப்படுத்த முடிவதில்லை.” எனக் கூறினார்.

”அதிக எண்ணிக்கையில் வனவிலங்குகள் இறப்பதற்கு மனிதர்கள் மட்டுமே காரணம். மயில்களைத் தொல்லையாக கருதி அதை ஒழிக்க வேண்டி சிலர் நஞ்சு கலந்த விதைகளைத் தூவியிருக்கவும் வாய்ப்பு உள்ளது” எனவும் பாமயன் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்