Aran Sei

மரபணு கத்தரிக்கோலுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

ரபணு செல்களைத் துண்டித்து மீண்டும் சேர்ப்பது குறித்த கண்டுபிடிப்புக்காக இந்தாண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு, இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து வழங்கப்பட உள்ளது.

இந்தாண்டு வேதியலுக்கான நோபல் பரிசு குறித்து பரிசுக்குழுவினர் கூறுகையில், ”இம்மானுவேல் சார்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகியோருக்கு, இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. மரபணு செல்களைத் துண்டித்து மீண்டும் சேர்ப்பது குறித்த கண்டுபிடிப்புக்காகப் பரிசு வழங்கப்பட உள்ளது. இவர்களின் கண்டுபிடிப்புதான் புற்றுநோய் சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது” என்று தெரிவித்தனர்.

இவர்களின் கண்டுபிடிப்பான மரபணு கத்தரிக்கோல் ( CRISPR/Cas9 ) முறையானது மூலக்கூறு ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய அறிவியலில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. மரபணுப் பொருளில் துல்லியமான கீறல்களைச் செய்யப் பயன்படும் ‘ மரபணு கத்தரிக்கோல்’ என்ற ஒரு மூலக்கூறு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதன் மூலம் மரபணுவைக் கட்டுப்படுத்தி, எந்த மரபணு மூலக்கூறையும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட இடத்தில் வெட்ட முடியும்.

இந்த மரபணு கத்தரிக்கோல் முறையைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் விலங்குகள், தாவரங்கள் மற்றும் நுண்ணுயிரிகளின் மரபணுவை மிகச் சரியான துல்லியத்துடன் மாற்றலாம்.

நன்றி : twitter.com/NobelPrize

இந்தக் கண்டுபிடிப்பு தாவர இனப்பெருக்கம் செய்வதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் புது வகையான புற்றுநோய் சிகிச்சைகளுக்குப் பங்களிப்பு செய்வதுடன், பரம்பரை நோய்களைக் குணப்படுத்தும் கனவையும் நனவாக்கக்கூடியதாக இருக்கிறது.

இம்மானுவேல் சார்பென்டியர் 1968-ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் ஜூவிசி-சுர்-ஓர்கே நகரில் பிறந்தார். ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில் உள்ள நோய்க்கிருமி அறிவியல் துறைக்கான மேக்ஸ் பிளாங்க் பிரிவின் இயக்குநராக உள்ளார்.

இம்மானுவேல் சார்பென்டியர் (நன்றி : twitter.com/NobelPrize)

இப்பரிசு குறித்து இம்மானுவேல் சார்பென்டியர் கூறும் போது, ”அறிவியல் துறையில் சாதிக்க விரும்பும் இளம் பெண்களுக்கு இந்தப் பரிசு ஓர் ஊக்கத்தைக் கொடுக்கும், அவர்கள் செய்யும் ஆராய்ச்சியின் மூலம் அறிவியலில் பெண்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அவர்களுக்குக் காண்பிப்பது எனது விருப்பம்.” என்றார்.

ஜெனிபர் டவுட்னா 1964-ம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன், டி.சி-யில் பிறந்தார். அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் எச்.எச்.எம்.ஐ நிறுவனத்தில் புலனாய்வாளராகவும் உள்ளார்.

ஜெனிபர் டவுட்னா (நன்றி : twitter.com/NobelPrize)

இதுவரை இந்த ஆண்டிற்கான இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக இலக்கியம், அமைதி மற்றும் மருத்துவத்துக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்படும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்