Aran Sei

`இனி நிதி இல்லை’ – சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அடுத்த திட்டம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், சுற்றுச்சூழல்-வனவிலங்கு-வனம் சம்பந்தப்பட்ட முதன்மையான ஐந்து நிறுவனங்களின் செயற்பாடுகளில் இருந்தும் நிதியளிப்பதில் இருந்தும் விலக உள்ளதாக ‘டைஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய நிதித்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள இத்திட்டத்தில் டெகராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனம், போபாலில் உள்ள இந்திய வன வேளாண்மை நிறுவனம், பெங்களூருவில் உள்ள இந்திய ஒட்டுப்பலகைத் தொழில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னையில் உள்ள சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி மையம் போன்ற நிறுவனங்கள் இதனால் பாதிப்படையும்.

டெகராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனமும் போபாலில் உள்ள இந்திய வன வேளாண்மை நிறுவனமும் 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அங்கு பயிற்சி, ஆராய்ச்சி படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் நடத்தப்படுகின்றன.

அக்டோபர் 9-ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆஷு டோஷ் ஜிண்டல் வெளியிட்ட அறிவிப்பில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் கீழ் இயங்கும் 16 தன்னாட்சி நிறுவனங்களைப் பரிசீலித்த பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டதாக ’டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

”இந்தத் திட்டம் பொது நிதிச் சட்டம் 2017, 229-வது விதியின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கமே, தன்னாட்சி நிறுவனங்களுக்கு ஆக்கப்பூர்மாகவும் சுதந்திரமாகவும் செயல்பட தேவையான ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் பரிந்துரைப்பதே ஆகும். மேலும் ஒதுக்கப்படும் நிதியை ஆக்கப்பூர்வமாகச் செலவிட உதவும்.” என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் டி.வி.சோமநாதன், ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ தளத்திற்குப் பேட்டியளித்துள்ளார்.

இந்தப் பரிந்துரைகளின் படி, படிப்படியாக மூன்று ஆண்டுகளில் மத்திய அரசு அந்நிறுவனங்களில் இருந்து வெளியேறும். ஆண்டுக்கு 25 சதவீத நிதியைக் குறைத்துக்கொண்டே வரும்.

மேலும், இந்திய வனவிலங்கு நிறுவனமும் இந்திய வன வேளாண்மை நிறுவனமும் தன்னாட்சி நிறுவனங்களாகவோ இல்லை சுயாதீனப் பல்கலைக்கழகங்களாகவோ மாற்றப்படலாம். சென்னையில் உள்ள சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் அகமதாபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் கல்வி மையம் இணைக்கப்படலாம். இரண்டுக்கும் ஏற்கனவே கடந்த மூன்றாண்டுகளாக மத்திய அரசின் நிதி நிறுத்தப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்  கீழ் இயங்கும், கோயம்புத்தூர் பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலீம் அலி மையம், அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்று பரிந்துரை குறிப்பிடுகிறது.

மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசியப் பல்லுயிர் ஆணையம் ஆகியவை அரசாங்கத்தின் கீழ் தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால் அவையும் ’சுயநிதி’ ஆக மாற ஊக்குவிக்கப்படும் என்று ‘தி வயர்’ செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்