Aran Sei

டவுன்லோடில் சாதனை செய்த ஆரோக்கிய சேதுவின் பயன் தான் என்ன?!  

ணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், குடியிருப்பு வளாகங்கள் எல்லாம் இந்தச் செயலியை   (ஆரோக்ய சேது) கட்டாயமாக்கியிருக்கின்றன. தகவல் தனியுரிமை பிரச்சினை ஒரு பக்கம் இருக்கட்டும், உண்மையில் இது கொரோனாவை கட்டுப்படுத்த உதவியதா?

ஜூலை மாதம், ராதா பேடி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் நடத்தும் ஆசிரியராக தன்னுடைய வேலையை தொடர்ந்த போது, மத்திய மும்பையில் ஒரு குடியிருப்பு வளாக நிர்வாகம் அவரை வாயிலில் தடுத்து நிறுத்தியது. அவருடைய தொலைபேசியில் ஆரோக்கிய சேது செயலி இருந்தால் மட்டுமே அவருக்கு உள்ளே செல்ல அனுமதி கொடுக்கப்படும் என அங்கிருந்த கட்டிட காவலர் சொல்லியிருக்கிறார்.

கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை தொடர்பு தடமறிதலுக்காக  ( contact-tracing ) கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசால் இந்தச் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தச் செயலி அப்போது, கட்டாயமான ஒன்றாக இல்லை என்பதாலும், தகவல் தனியுரிமை குறித்த சர்ச்சைகளில் மாட்டி இருந்ததாலும், ராதா பேடி இதை நிறுவிக் கொள்ளவில்லை.

ராதா பேடியின் மாணவரின் அப்பா குடியிருப்பு வளாக நிர்வாக உறுப்பினர்களோடு பேசிய பிறகு தான் பேடி உள்ளே அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், மறுபடியும் அக்டோபரில் மறுபடியும் ஒரு இடத்தில் இப்படி தடுத்து நிறுத்தப்பட்டார். இதைச் சமாளிக்க அவருடைய மாணவருடைய குடும்பம் வேறு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது. “பெற்றோர்கள் என்னை கேட்டுக்கு வெளியே சந்தித்து, பாதுகாவலரிடம் தங்கள் தொலைபேசியில் இருக்கும் செயலியை காண்பித்துவிட்டு என்னை உள்ளை அழைத்துச் செல்வார்கள்” என்கிறார்.

இந்தத் திட்டம் இதுவரை நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது, என்றாலும், இந்த சம்பவங்கள் ஏற்படுத்திய அதிருப்தியை ராதா பேடியால் கடக்கமுடியவில்லை.

“இந்த ஆரோக்கிய சேது ஆப் அவசியமே இல்லாததாக தான் தெரிகிறது. இதை சமாளிக்க நம்மால் ஒரு வழியை கண்டுபிடிக்க முடியும் என்றால், இந்த ஆப்பின் பயன் என்ன? ஸ்மார்ட் தொலைபேசி  இல்லாத ஆட்கள் என்ன செய்வார்கள்? அவர்களை கட்டிடத்திற்குள் போக விடாமல் நிறுத்தி வைப்பார்களா?” எனக் கேட்கிறார்.

கொரோனா கண்காணிப்பு – ‘ஆரோக்ய சேதுவை உருவாக்கியது யார்?’

ஆரோக்கிய சேதுவின் பயன் தான் என்ன?

ஆரோக்கிய சேது அல்லது ஹெல்த் ப்ரிட்ஜ் செயலியின் (Health Bridge app) பயன் கொரோனாவை கட்டுப்படுத்த ‘சமூக தொடர்வழி தடமறிதல்’ (‘கம்யூனிட்டி ட்ரிவன் காண்டாக்ட் ட்ரேசிங்) என்று அதனுடைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது ஜிபிஎஸ்ஸையும், ப்ளூடூத்தையும் பயன்படுத்தி, அருகில் இருக்கும் மற்ற ஆரோக்கிய சேது டவுன்லோடு செய்யப்பட்ட தொலைபேசிகளை இனம் கண்டு, அந்த பகுதியில் இருக்கும்  கொரோனா நோய்த்தொற்று பாதித்த நபர்கள் குறித்து எச்சரிக்கை அளிக்கிறது.

மேலும், கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கும் நபர்கள் தங்களுடைய அறிகுறிகளை பொறுத்து சுயமாக பரிசோதித்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

ஆரோக்கிய சேது வழியே சேகரிக்கப்படும் தகவல், ஐஐடி மெட்ராஸால் வடிவமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்தால் செயல்படும் ஒருங்கிணைந்த பகுப்பாய்வு அமைப்பு ( IT-enabled Integrated Hotspot Analysis System – ITIHAS) எனும் தளத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இது உள்ளூரில் எங்கிருந்து கொரோனா பரவுகிறது என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவும்.  இந்தியாவின் சில மாநிலங்கள் வேறு தொடர்பு தடமறியும் செயலிகளை பரவலாக அறிமுகப்படுத்தியிருக்கின்றன. ஆனால், இந்தியாவின் ஒரே மையப்படுத்தப்பட்ட செயலியாக ஆரோக்கிய சேது 16 கோடி முறை நிறுவப்பட்டிருக்கிறது. ஒரு தொடர்பு தடமறியும் செயலி இவ்வளவு முறை நிறுவப்படுவது இதுவே முதல் முறை.

எனில், இந்த செயலி எந்த அளவு உபயோகமானதாக இருந்தது ? இந்தியா முழுக்க 86 லட்சம் கொரோனா நோய்த் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சமூக பரவல் இருப்பதாக சுகாதார அமைச்சர் ஏற்றுக் கொண்டிருக்கிறார் எனும் போது இந்தச் செயலிக்கு உண்மையிலேயே மதிப்பு இருக்கிறதா?

சுகாதார மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தொடக்கத்தில் இருந்தே ஆரோக்கிய சேது ஆப் பெரிய அளவில் கொரோனாவை கட்டுப்படுத்தாது என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

இதற்கு மத்தியில், இந்தச் செயலி தவறாக பயன்படுத்தப்படுவது குறித்த அச்சம் எழுந்திருக்கிறது. அதாவது, ஒரு தொடர்பு தடமறியும் செயலியாக தொடங்கிய ஒன்று, இப்போது மக்கள் குடியிருப்பு வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற பொது இடங்களுக்கு செல்வதை கட்டுப்படுத்தும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

தகவல் உரிமை ஆர்வலர்கள், இந்தியா ஒரு சர்ச்சைக்குரிய, மையப்படுத்தப்பட்ட தேசிய சுகாதார தரவு தொகுப்பை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருப்பதனால், இந்த செயலி வழியே எடுக்கப்பட்ட  பயனர்களின் சுகாதார விபரங்களின் தனியுரிமை குறித்து கவலைப்படுகின்றனர்.

டிஜிட்டல் தொடர்பு தடமறிதலின் சிக்கல்கள் !

ஒரு தொடர்பு தடமறியும் செயலியின் தரம், அது நோய்த்தொற்று தொடங்கிய கால கட்டங்களில் எவ்வளவு பரவலாக பயன்படுத்தப்பட்டது என்பதை சார்ந்தே இருக்கிறது.

“ பக்கத்தில் கொரோனா தொற்றிய ஆட்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை வைத்து ஒரு தனி நபரின் பயணத்திற்கு வழிகாட்டுவது தான் இந்த செயலியின் நோக்கம் என்றால், இது வேலை செய்ய மொத்த உலகையும் அறிந்திருக்க வேண்டும்” என்கிறார் டில்லியின் இந்திய மனித குடியிருப்பு கழகத்தில் மூத்த ஆய்வாளராக இருக்கும் கௌதம் பான்.

இந்தியா போன்றதோரு நாட்டில் இது சாத்தியமே இல்லாதது : ஸ்மார்ட்தொலைபேசிகள் இல்லாத கோடிக்கணக்கான குறைந்த வருமானமுடைய மக்கள் தொடக்கத்திலேயே இந்த தொடர்பு தடமறியும் திட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

ஸ்மார்ட்தொலைபேசி  வைத்திருக்கும் பட்சத்திலும் கூட, ஒரு தனி நபரின் நடத்தையை இந்த செயலி வழிநடத்தாது. “ நடமாடிக் கொண்டிருக்கும் நபர்களில் பெரும்பாலானோர், அன்றாட தேவைக்காக, அவசிய வேலைக்காக மட்டுமே பயணித்துக் கொண்டிருக்கிறனர்” என்கிறார் பான்.

வளர்ந்து வரும் கொரோனா ஹாட்ஸ்பாட்களை கண்டுபிடிப்பது தான் இந்த தொடர்பு தடமறிதலின் நோக்கம் என்றால், அதை ஒரு செயலியை வைத்து செய்ய முடியாது. “எந்த டிஜிட்டல் தொடர்பு தடமறிதலும் , அதன் கூடவே நேரடியாக களத்தில் தொடர்பு தடமறிதலைச் செய்யவில்லை என்றால் ஒரு பலனும் இருக்காது” என்கிறார் இணையம் மற்றும் ஜனநாயக மையத்தில் மூத்த கொள்கை அலுவலராக இருக்கும் பல்லவி பேடி.

இந்தியாவில், அதுவும் பெரும் நகரங்களில், அதிகாரிகள் நேரடியாக களத்தில் தொடர்பு தடமறிதலைதொடர்ச்சியாக செய்யவில்லை. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில், நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போன போது, பெரும்பாலான மாநிலங்கள் தொடர்பு தடமறிதலை கைவிட்டுவிட்டன.

அமிருத்சரை சேர்ந்த ஒரு அரசு சுகாதார நிபுணர், ஆரோக்கிய சேது செயலி மற்றும் பஞ்சாப்பின் மாநில அளவிலான கோவா செயலி, கொரானா தாக்கிய மக்களை கண்காணிப்பதில் பெரியளவு உதவி எதுவும் செய்யவில்லை என scroll.in இடம் தெரிவித்திருக்கிறார். “ மக்களுக்கு இந்த சுய பரிசோதனையை எப்படி செய்வதென்று புரியவில்லை. சிலர் எல்லா அறிகுறிகளையும் தேர்வு செய்கிறார்கள், தொலைபேசியில் அழைத்துக் கேட்டால், எந்த அறிகுறியும் இல்லை, தவறாக அழுத்திவிட்டதாக சொல்கிறார்கள்” என்கிறார்.

களத்தில் தொடர்பு தடமறிவதில் மேலும் ஒரு பிரச்சினையாக இருப்பது, கொரோனா நோய்த் தொற்று எனும் அடையாளத்தோடு வரும் களங்கம். “நிறைய நேரங்களில் ஒரு வீதி முழுக்க ஆட்கள் சுகாதார ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பு தெரிவிப்பார்கள், பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள், சுகாதார ஊழியர்களை வீதிக்கு உள்ளேயே விடமாட்டார்கள்” என்றும் சொல்கிறார் அமிருத்ஸரின் சுகாதார நிபுணர்.

‘இந்த ஆப் எதற்கென்று புரியவில்லை’

மிகுந்த உற்சாகத்தோடு ஆரோக்கிய சேது ஆப்பை நிறுவிய பலருக்கும் கூட, இப்போது இது முக்கியமான ஒன்றாக தெரியவில்லை.

டில்லியில் இருக்கும் 57 வயதான கேவி சுரேஷிற்கு , முதன் முதலாக தன்னுடைய பகுதியில் இருக்கும் கொரோனா நோய்த்தொற்று குறித்து இந்தச் செயலி எச்சரிக்கை அளித்தபோது, அது உதவிகரமான விஷயமாக இருந்தது. ஆனால், கொரோனா நோய்த்தொற்றிய நபரின் சரியான இடத்தை இந்தச் செயலி சொல்லாததால், தன் வீட்டிற்கு வந்த எலக்ட்ரீசியன் தான் அந்த கொரோனா நோய்த்தொற்றிய நபராக இருக்கக் கூடும் என சுரேஷ் நினைத்தார்.

சில பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகே, தன்னுடைய குடியிருப்புக்கு மேலே இருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தது. “எனக்கு யாரென்றே தெரியவில்லை, ஏனென்றால், அப்போது ஒவ்வொரு கட்டிடத்திற்கு வெளியிலும் வழக்கமாக கொரோனா நோய்த்தொற்றுகள் குறித்து அறிவிப்பு பலகைகளை வைப்பதை என்னுடைய குடியிருப்பு வளாகம் நிறுத்திவிட்டது” எனும் சுரேஷ ஒரு ஓய்வுபெற்ற தொலைதொடர்பு பணியாளர்.

அந்தச் சமயத்தில், அவருடைய ஆரோக்கிய சேது செயலியில்,  “அதீத எச்சரிக்கை” தகவல்கள் வந்து கொண்டிருந்தது மட்டுமில்லாமல், உள்ளூர் அதிகாரிகள் தினசரி தொலைபேசியில் அழைத்து அவரை ஆப்பில் அறிகுறிகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் சொல்லியிருக்கின்றனர்.

செப்டம்பர் மாதம், மறுபடியும் ஆப் அவரை கொரோனா அபாயம் குறித்து எச்சரிக்க தொடங்கிவிட்டது. ஆனால், இந்த முறை, அது அவ்வளவு பயனுள்ளதாக இருக்கவில்லை. “ என்னுடைய மனைவிக்கு சில பரிசோதனைகள் செய்ய மருத்துவமனைக்கு போய்விட்டு வந்த போது எனக்கு ஆப்பில் இருந்து தகவல் வந்தது. மருத்துவமனையில் எங்கு வேண்டுமானாலும் ஒரு கொரோனா நோயாளி தொலைபேசியோடு சென்றிருக்கலாம். அதை என்னுடைய தொலைபேசியை தடமறிந்து விட்டது”.

இந்த முறை அவரை யாரும் அழைத்து பரிசோதனைகள் செய்து கொள்ளும்படி கேட்கவில்லை, அவருக்கும் தான் தனிமைப்படுத்தப்பட வேண்டுமா என்று தெரியவில்லை.

ஷரீஃப் ராக்னேக்கர், டில்லியை சேர்ந்த முன்னாள் ஊடகவியலாளர்,  ஏப்ரல் மாதம் ஆரோக்கிய சேது அறிமுகப்படுத்தப்பட்ட போது, தன்னுடைய மொத்த காலனியோடு சேர்த்து அந்தச் செயலியை டவுன்லோடு செய்தார்.

“தொடக்கத்தில், 500 மீட்டர் சுற்றளவில் எவ்வளவு கொரோனா நோய்த்தொற்றுகள்  இருக்கின்றன என்பதை பார்க்க எல்லோருக்கும் சுவாரசியமாகவே இருந்தது. ஆனால், ஒரு கட்டத்திற்கு பிறகு, இந்த ஆப் எதற்கென்றே புரியவில்லை. ஏனென்றால், இப்போது எல்லா இடங்களிலும் நோய்த்தொற்றுகள் இருக்கின்றன. மேலும், இந்த ஆப் ஒவ்வொரு நோய்த்தொற்றின் சரியான இடத்தையும் நமக்கு தருவதில்லை” என்கிறார்.

இதனால், எப்படி ஒரு அவசியமில்லாத செயலி பல நிறுவனங்களால் கட்டாயமான ஒன்றாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதை நினைத்து ராக்னேக்கர் குழம்பியிருப்பதாக சொல்கிறார். “ என்னுடைய நண்பர்கள் சிலர் குர்காவுன் மாலிற்கு சென்ற போது, அவர்கள் ஃபோனில் ஆரோக்கிய சேது ஆப் இல்லாததால் அவர்களை உள்ளே விடவில்லை.

ஆனால், அவர்கள் அதை டவுன்லோட் செய்த பிறகு, அவர்களை அதில் லாகின் செய்யவோ, வேறு தரவுகளை அதில் பதிவு செய்யவோ யாரும் கேட்கவில்லை, அப்படியே உள்ளே செல்ல அனுமதித்து விட்டார்கள்” என்று சொல்கிறார்.

பொறுப்பு துறத்தல்

ஆரோக்கிய சேதுவை கட்டாயமான செயலியாக்கியது தொடக்கத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்தது. முதலில் விமானம் மற்றும் ரயில் பயணத்திற்கும், கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பவர்களுக்கும் மட்டுமே கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அவர்கள் அலுவலகத்தில் நுழையும் ஆரோக்கிய சேது ஆப் கட்டாயமாக இருந்தது.

இதற்கு குடிமக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு உண்டானது. தொடர்பு தடமறியும் செயலிகள் பெரும்பாலான நாடுகளில் கட்டாயமானதாக இல்லை. ஆனால், இந்தியாவிலோ இந்திய அரசு ஆரோக்கிய சேது செயலியின் மென்பொருள் மூல நிரலை பொதுவெளியில் வெளியிடாமல், கட்டாயமாக்கியிருக்கிறது. இந்த சோர்ஸ் கோட் ஒரு செயலியின் அடிப்படை அமைப்பை உட்கொண்டிருக்கும், இதை வைத்து யார் வேண்டுமானாலும் அதை இயக்கத்தை சோதித்து பார்க்க முடியும்.

பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் வரத் தொடங்கியதும், மே மாதத்தில், மத்திய அரசு ஆரோக்கிய சேது செயலியின் மூல நிரலை வெளியிட்டது. மேலும், இந்த செயலி விமான, ரயில் பயணங்களுக்கோ, வேலையிடங்களுக்கோ கட்டாயமானதில்லை என்று அறிவித்தது. இந்த அறிக்கை, ஆரோக்கிய சேதுவை கட்டாயமாக்க நினைக்கும் ஆர்வக் கோளாறு நிறுவனங்களை எல்லாம் தடுத்து நிறுத்தவில்லை.

இந்தியாவிற்கென தகவல் பாதுகாப்பு சட்டம் என ஒன்று இல்லாததால், இந்த ஆப்பின் மூல நிரலை வெளியிட்டதால் மட்டுமே பயனர்களின் தகவல் தனியுரிமை சிக்கல்களை எல்லாம் சரி செய்துவிட்டதாக கருத்தில் கொள்ள முடியாது.

கடந்த மே மாதம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட ஆரோக்கிய சேது தகவல் பயன்படுத்தல் மற்றும் அறிவு பகிர்தல் வழிமுறை (Aarogya Setu Data Access and Knowledge Sharing Protocol) எனும் ஆவணத்தில், இந்த ஆப் தொடர்புகளையும், இடங்களையும், பயனர்களிடம் இருந்து சுய பரிசோதனை தரவுகளையும் மட்டுமே சேகரிப்பதாக தெரிவித்திருந்தது. இந்த தகவல்கள் தேசிய தகவல் மையத்தில் 180 நாட்கள் பாதுகாக்கப்பட்ட பிறகு முற்றிலுமாக அழிக்கப்படும் எனவும் அமைச்சகம் அறிவித்தது.

மேலும், இந்தத் தரவுகள், பயனர்களின் பெயரை வெளியிடாமல், மத்திய, மாநில அரசுகளிடமும், பேரிடர் மேலாண்மை அமைப்புகளிடமும், பிற சுகாதார அமைப்புகளிடமும், உள்ளூர் அதிகாரிகளிடமும் பகிரப்படலாம் என வழிமுறை ஆவணத்தில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், தேசிய தகவல் மையம், ஆரோக்கிய சேதுவின் தரவுகள் எந்தெந்த அமைப்புகளிடம்  “அவசிய காரணத்திற்காக” பகிரப்பட்டன என ஒரு பட்டியலை பரமாரிக்கும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

தகவல், மேலாண்மை மற்றும் இணையம் தொடர்பான ஆய்வுகளில் இயங்கிவரும் ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கோடலி, “ ஒரு வழிமுறை ஆவணம் என்பது விதிமுறைகள் அல்ல” என்கிறார். மேலும், ஒரு பயனரின் மொபைல் எண்ணை மாநில, மாவட்ட அரசுகளிடம் தகவல் கண்காணிப்பிற்காக கொடுக்கும் போதே, அந்த தகவல் பெயர் குறிப்பிடாமல் வெளியிடப்பட்ட தகவல் அல்ல என்பது தெரிகிறது. “பயனர்களின் தரவுகள் தேசிய தகவல் மையத்தின் கணினியில் இருந்து வெளியேறிவிட்டால், ஒரு மாநில அரசு அதை காவல்துறையிடம் பகிர்ந்ததா, உளவுத்துறையிடம் பகிர்ந்ததா என்பதை எல்லாம் சொல்ல ஒரு வழியும் இல்லை”

கடந்த அக்டோபர் மாதம், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மனு ஒன்றுக்கு பதிலளித்த தேசிய தகவல் மையம், ஆரோக்கிய சேது ஆப்பை யார் வடிவமைத்தார்கள் என மையத்திற்கு தெரியாது என்று சொல்லியிருக்கிறது. இதனால், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உடனடியாக இந்த செயலி “அரசும் தனியாரும்” இணைந்து வடிவமைத்தது என்றதுடன், ஏற்கனவே பொதுவெளியில் இருந்த நிபுணர்களின் பெயரையும் மறுபடி அறிவித்தது.

மே மாதம், மத்திய அரசு, இந்தச் செயலியை வடிவமைக்க பங்களித்தவர்கள் என எழுபதிற்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்களை அரசு மற்றும் தனியார் துறையில் இருந்து வெளியிட்டிருந்தது. “ ஆனால், இந்த தனி நபர்கள் எப்படி இணைந்து இந்த செயலியை வடிவமைத்தார்கள் என எந்தத் தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை, ஏதோ தன்னார்வலர்கள் பலர் ஒன்று சேர்ந்து இந்த செயலியை வடிவமைத்தது போன்ற ஒரு பிம்பத்தை தான் இது உருவாக்குகிறது” என்கிறார் கோடலி. இதனால், இந்த செயலிக்கான பொறுப்பு யாரிடமும் இல்லை.

தேசிய தகவல் மையம் , மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , நிதி ஆயோக் நிர்வாகங்களில் இருக்கும் மூத்த அதிகாரிகளுக்கு ஆரோக்கிய சேது செயலின் தகவல் தனியுரிமை சிக்கல்கள் மற்றும் செயலியின் பயன் குறித்து scroll.in மெயில் அனுப்பியிருக்கிறது. பதில் வரும் பட்சத்தில், அவை தளத்தில் வெளியிடப்படும்.

தாக்கூர் ஃபேமிலி ஃபவுண்டேஷன் அளித்த கிராண்டின் ஆதரவோடு இந்த கட்டுரை இயற்றப்பட்டிருக்கிறது. தாக்கூர் ஃபேமிலி ஃபவுண்டேஷன் கட்டுரையின் எந்த பகுதியையும் மாற்றவோ, கட்டுப்படுத்தவோ இல்லை.

நன்றி – scroll.in

மொழியாக்கம் செய்யப்பட்டது

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்