Aran Sei

பதஞ்சலி நிறுவனமே தயாரித்த கொரோனில் ஆய்வுக் கட்டுரை – அறிவியல் நம்பகத்தன்மை அற்றது

Image credit : thewire.in

கொரோனா தொற்றுக்கு “ஆதாரங்கள் அடிப்படையிலான முதல் மருந்து” என்று கூறப்பட்ட கொரோனில் எனும் ஆயுர்வேத மருந்தை முன்னெடுப்பதன் காரணமாக யோக குரு பாபா ராம்தேவும், பதஞ்சலி ஆயுர்வேத் என்ற அவரது வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள் (FMCG) நிறுவனமும் அண்மையில் செய்திகளில் இடம் பெறுகின்றனர்.

ஆனால் இந்தக் கூற்றில் உள்ள ஐயப்பாட்டையும் மீறி, 2021 பிப்ரவரியில் ஃபைட்டோ மெடிசின் (Phytomedicene) என்ற ஆய்விதழில் வெளியான ஒரு அறிவியல் ஆய்வுக் கட்டுரையின் அடிப்படையில் கொரோனில் மருந்தின் விற்பனைக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரையின் தடுமாற்றமிக்க கூற்றுக்களையும் அவற்றுக்கும் கொரோனில் முறையாக பரிசோதிக்கப்பட்டது என்றும் அது செயல்திறன் மிக்கது என்றும் கூறும் பதஞ்சலியின் முடிவுக்கும் இடையேயான முரணையும் தி வயரில் வெளியான முந்தைய கட்டுரை ஒன்று விவாதித்துள்ளது.  ஆனால், இன்னொரு சிறு ஆதாரம் உள்ளது, அந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டதையே தகுதி நீக்கம் செய்து விடலாம்.

அந்த அறிவியல் ஆய்வுக் கட்டுரையின் “போட்டி நலன்கள் பற்றிய அறிவிப்பு” பகுதியில்,

“சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வு தொடர்பாக, கட்டுரையை எழுதியவர்களுக்கு எந்த நலன்களின் முரண்பாடும் இல்லை. மருந்துகளை உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் உள்ள திவ்யா பார்மஸி  கொடுத்துள்ளது.  திவ்யா யோகா மந்திர் அறக்கட்டளையின் கீழ் திவ்யா பார்மஸி இயங்குகிறது. இந்த அறக்கட்டளையின் கௌரவ அறங்காவலராக ஆச்சார்யா பாலகிருஷ்ணா உள்ளார். மருந்துகளை வழங்கும் திவ்யா பார்மஸி இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த ஒரு மருந்தக பரிசோதனைகளின் எந்த ஒரு அம்சத்திலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. மருந்தக சோதனைகள் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நடைபெற்றன.”

என்று கட்டுரையை எழுதியவர்கள் கூறியுள்ளனர்.

இங்கே ஒரு பெரிய வழு உள்ளது. அதனைப் புரிந்து கொள்ள வேறு ஒரு திசையில் சுருக்கமாக செல்வோம்.

செலிப்ரக்ஸ் என்பது  ஐபுப்ரூபன், நப்ராக்சன்  ஆகியவை உள்ளிட்ட ஊக்கி இல்லா ’அழற்சி’ மருந்துகளின் (NSAIDs) விரிவான வகைகளில் ஒன்று. ஊக்கி இல்லா அழற்சி மருந்துகள் பொதுவாக கீல்வாதத்திற்கு சிகிச்சை அளிக்க பயன்படுகின்றன.

செலிப்ரக்ஸ் 1990 களில் தயாரிக்கப்பட்டது. அது ஊக்கி இல்லா அழற்சி மருந்துகளின் புதிய தலைமுறையாகக் கருதப்பட்டது. எனவே அதே வகையைச் சேர்ந்த பழைய மருந்துகளின்  மேம்பட்ட வடிவமாக சந்தைப்படுத்தப்பட்டது.

செலிப்ரக்ஸை புதிய மருந்துகளுடன் ஒப்பிடுவதற்காக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ‘செலிகோக்சிப் நீண்ட கால கீல்வாத பாதுகாப்பு ஆய்வின்’ (CLASS) முடிவுகள், 2000-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க மருத்துவ சங்க ஆய்விதழில் (JAMA) வெளியிடப்பட்டன. இந்த ஆய்வறிக்கையைத் தயாரித்த 16 பேரில், ஆறு பேர் செலிப்ரக்ஸ் உற்பத்தியாளர்களான ஃபார்மாஸியாவில் பணி புரிபவர்கள்,  மீதமுள்ள பத்து  பேர் ஊதியம் பெறும் ஆலோசகர்கள்.

இந்த ஆய்வு ‘ஆறு மாதங்களில்’  இரு வகையான சிகிச்சை எடுத்து கொண்ட நோயாளிகளை ஒப்பிட்டது. கிடைத்த தரவுகளின் அடிப்படையில், செலிப்ரக்ஸின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களுக்கு  குறைவான புண்கள் (ulcer) தோன்றின என்றும், பழைய ஊக்கி அல்லாத ஆழற்சி மருந்துகளால் ஏற்பட்டதை விட அதிக அளவில் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றை அனுபவிக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.

அமெரிக்க மருத்துவ சங்க ஆய்விதழின் ஆசிரியர்களில் ஒருவரான மைக்கேல் உல்ஃப் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டதோடு, இந்த மருந்தின் வெற்றிகளைப் புகழ்ந்து ஒரு தலையங்கத்தை எழுதுமளவு அதனால் ஈர்க்கப்பட்டார்.

இருப்பினும், 2001-ல் மைக்கேல் உல்ஃப் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்தின், கீல்வாதப் பிரிவுக்கான  ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட போது தற்செயலாக மீண்டும் அந்த ஆய்வறிக்கையை பரிசீலனை செய்யும் வாய்ப்பைப் பெற்றார். ஆய்வு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட ஆறு மாதங்களை விட அதிகமாக, ஒரு ஆண்டாக ஆய்வு நடந்தது என்பதை அவர் கண்டார். மேலும் தரவுகளை  மறுஆய்வு செய்த போது அது மாறுபட்ட முடிவுகளுக்கு இட்டுச் சென்றதைக் கண்டார்.

ஏனெனில் முதலில் செய்யப்பட்ட பகுப்பாய்வு நன்கு சலித்தெடுக்கப்பட்ட தரவு தொகுப்புகளைக் கொண்டு செய்யப்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. செலிப்ரக்ஸ்  முந்தைய மருந்துகளை விட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான நிகழ்வுகளை உருவாக்கியது.

அதைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட்டில் வெளியான கட்டுரையில், “என் சீற்றத்துக்கு அளவில்லை. நான் [அதனை ஆதரித்து] தலையங்கம் எழுதினேன். முட்டாளாகத் தோற்றமளித்திருக்கிறேன். ஆனால், அந்தக் கட்டுரையில் தரப்பட்ட தரவுகள் மட்டுமே  என்னிடம் இருந்தன,” என்று உல்ஃப் கூறியிருந்தார்.

ஒவ்வொரு ஆய்வுக் கட்டுரையிலும் அதை எழுதியவர்களுக்கு நலன்களின் முரண்பாடு ஏதேனும் இருந்தால் அதை வெளிப்படையாக தெரிவிக்கச் அறிவிக்கச் செய்வதன் மூலம், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முடியும்.

வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் அறிவியல் பணிகளின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கச் செய்யவும் பத்திரிகை ஆசிரியர்கள் குழு ஒன்று ஒன்றிணைது, 2010-ம் ஆண்டில் பன்னாட்டு மருத்துவ ஆய்விதழ் ஆசிரியர்கள் கமிட்டியை (ICMJE) உருவாக்கியது.  ஆய்வு கட்டுரையாளருக்கும், அவரது ஆய்வுப் பொருளுக்குஉம் இடையிலான பல்வேறு நலன்களை முழுவதுமாக வெளிப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை பத்திரிகை ஆசிரியர்கள் குழு வெளியிட்டது.

பெரிதும் மதிக்கப்படும் “புதிய இங்கிலாந்து மருத்துவ ஆய்விதழ்”, “தி லேன்செட்”, அமெரிக்க மருத்துவ சங்க ஆய்விதழ் ஆகியவை இதில் கையெழுத்திட்டதுடன், தமது ஆசிரியர்கள் இதனைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.

ஃபைட்டோமெடிசின் இதழும் ஆசிரியர்களுக்கான தங்களது வழிகாட்டுதல்களின் ஒரு பகுதியாக இந்த வழிகாட்டுதல்களையும்  பரிந்துரைத்துள்ளது.

இந்தக் குழுவின் (ICMJE) வழிகாட்டுதல்கள்படி: “ஒரு முதன்மை நலன் (நோயாளிகளின் உடல்நலம் அல்லது ஆய்வின் செல்லுபடித்தன்மை போன்றவை) தொடர்பான ஒரு தொழில்முறை முடிவு, இரண்டாம் நிலை நலன்களால் (நிதி ஆதாரம் போன்றவை) பாதிக்கப்படும்போது முரண்பட்ட நலன்களுக்கும், ஒரு சார்பான முடிவுகளுக்கும் சாத்தியம் தோன்றுகிறது. உண்மையான நலன்களின் முரண்பாடுகளைப் போலவே, நலன்களின் முரண்பாடு என்ற உணர்வும்  முக்கியமானது.”

ஆனால் இந்த வழிகாட்டுதலை மீறி, கொரோனில் ஆய்வுக் கட்டுரையின் (மருந்தை அதன் பெயரைக் குறிப்பிட்டு வெளிப்படையாக பேசுகிறது) இணை ஆசிரியராக பட்டியலிடப்பட்டுள்ள ஆச்சார்யா பாலகிருஷ்ணா, மருந்துகளை தயாரித்து விற்பனை செய்யும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக (ட்விட்டரில் உள்ள அவரது சுய விவரத்திலும் இந்த விபரம் காணப்படுகிறது)  அவருடைய பங்களிப்பு என்ன என்பதை வெளிப்படுத்தத் தவறி விட்டார்.

இதைக் குறிப்பிட வேண்டும் என்பதே அவருக்குத் தெரியாதா? அல்லது நலன்களின் முரணை அது வெளிப்படுத்துகிறது என்பது அவருக்குத் தெரியாதா?

ஃபைட்டோமெடிசின் இந்த ஆய்வுக் கட்டுரையை பிப்ரவரியில் இணைய தளத்தில் வெளியிட்டது என்கிறது இந்தியா டுடே. ஆனால் மருந்தின் 25 லட்சம் அலகுகளை பதஞ்சலி ஏற்கனவே விற்பனை செய்த பிறகு, 2020 நவம்பர் 21 அன்றுதான் இந்த ஆய்வுக் கட்டுரை ஆய்விதழுக்குத் தரப்பட்டுள்ளது. அதாவது ஆய்வுக்கு முன்னரே விற்பனை நடந்துள்ளது.

அத்துடன், ஆய்வுக் கட்டுரையின்  ‘ஆசிரியர் பங்களிப்பு’  பகுதி பாலகிருஷ்னா நிதி அளிப்பதிலும், வளங்களை நிர்வகிப்பதிதிலும், ஆய்வுக் கட்டுரையை மதிப்பாய்வு செய்வதிலும், திருத்துவதிலும் ஈடுபட்டார் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது. இந்த இடத்திலும் ஆசிரியர்கள் நலன்களின் முரண்பாட்டை வெளிப்படுத்தத் தவறி விட்டனர்.

எனவே “சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வுப் பொருளுடன் கட்டுரை ஆசிரியர்களுக்கு எந்த நலன்களின் முரண்பாடும் இல்லை” என்ற வரிகள் அபத்தமானவை.

இந்தப் பிரச்சினை இந்தக் கட்டுரைக்கு மட்டுமே தனித்துவமானது அல்ல. 2020, பிப்ரவரி 28 ல்  ஃபைட்டோமெடிசின் ப்ளஸ் இதழின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் கட்டுரையில், இதே ஆசிரியர்கள் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் டின் தலைவராக பாலகிருஷ்ணா வின் நிலை என்ன என்பதை அறிவிக்கக் தவறிவிட்டனர்.

இந்த அறிவிப்புகள் சார்புநிலை அல்லது தரவுகளை தவறாக கையாளுப் அபாயம் இல்லை என்பதை உறுதி செய்ய வெளிப்படையாக உதவுவதில்லைதான், ஆனால் கட்டுரையின் உண்மைத் தன்மையும், எச்சரிக்கையுடன் படித்து, புரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் அவை நிச்சயமாக சுட்டுகின்றன.

இந்த மீறல்களுடன் கூடுதலாக, ‌ஆசிரியர்கள் தங்கள் ஆய்வின் மூலத் தரவுகளை பொது ஆய்வுக்குக் கிடைக்கச் செய்யவில்லை. எனவே, மைக்கேல் உல்ஃப் முன்பு  செலிப்ரக்ஸ் தொடர்பாக செய்தது போல அதனை மறு பகுப்பாய்வு செய்ய வழி இல்லை. அதனால் அதே முடிவுகள்தான் கிடைக்கின்றனவா என சரிபார்க்க முடியவில்லை.

ஃபைட்டோமெடிசினின் ஆசிரியர்களும், விமர்சகர்களும் இந்தச் சிக்கல்களை தெரிந்து கொள்ளத் தவறியது அவர்களுடைய நம்பகத்தன்மையை சேதப்படுத்துகிறது, இந்தப் பத்திரிகையுடன் தொடர்புடைய அனைத்து அறிவியல் பணிகளின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறது. (இந்திய அரசாங்கமும் இவற்றை கவனிக்கத் தவறியது விவாதத்திற்குக் கூடத் தகுதியற்றதாக இருக்கலாம்)

தங்கள் நிதி ஆதாய முரண்பாடுகளை வெளிப்படுத்தத் தவறிய ஆசிரியர்களின், வெளியிடப்பட்டக் கட்டுரைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்வது என்ற ஆய்விதழ்களின் நீண்ட ஆரோக்கியமான பாரம்பரியம் ஒன்று உள்ளது.

கோராமலே தரப்பட வேண்டிய முக்கிய மற்றும் போட்டியிடும் நலன்களின் முரண்களை வெளிப்படுத்தத் தவறியதன் அடிப்படையில், அறிவியலின் நன்மைக்காகவும், அதன் நம்பகத்தன்மைக்காகவும் ஃபைட்டோமெடிசினில் வெளியான கொரோனில் ஆய்வுக் கட்டுரை ( அதன் தற்போதைய வடிவத்தில்) திரும்பப்பெறப்பட வேண்டும்.

www.thewire.in இணைய தளத்தில் தரம் வீர் தாட்வாவேடி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்