Aran Sei

நிலவில் 4G செல்போன் நெட்வொர்க் – நோக்கியா, நாசா திட்டம்

Image credit : NASA

நிலவில் தன்னுடைய முதல் 4G செல் நெட்வொர்க்கை அமைக்க இருப்பதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளதாக சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.

பூமியில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே உள்ள போட்டி மிகவும் தீவிரமடைந்துள்ள நிலையில் செல்போன் நெட்வொர்க் உபகரணங்களைத் தயாரிக்கும் நோக்கியா நிறுவனம் திங்களன்று ஒரு புதிய சந்தையில் கால் பதித்துள்ளது. நிலவில் முதல் செல்லுலார் நெட்வொர்க் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை வென்றுள்ளது.

2030-க்குள் மனிதர்களின் நீண்ட கால இருப்பைத் தக்க வைப்பதற்கு அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசாவின் திட்டத்தின் ஒரு பகுதியாக சந்திர மண்டலத்தின் மேற்பரப்பில் “அதி கச்சிதமான குறைந்த சக்தியுடன் கூடிய, வலுப்படுத்தப்பட்ட வயர்லெஸ் 4G நெட்வொர்க்கை அமைக்க உபகரண உற்பத்தியாளரான பெல் லேப்ஸ்  நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பெல் லேப்ஸ் இப்போது பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியாவால் நிர்வகிக்கப்படுகிறது.

நாசா தனது நிலா பயணத் திட்டமான ஆர்டெமிசின் கீழ், நடைமுறைப் பயன்பாட்டுக்கு முந்தைய நிலையில் உள்ள (“டிப்பிங் பாயிண்ட்“) தொழிற்நுட்பங்களை வளர்ப்பதற்கு 14 நிறுவனங்களுக்கு மொத்தம் $37 கோடி (சுமார் ரூ.2775 கோடி) வழங்குவதாக அறிவித்துள்ளது. இதில் ரோபாட்டிக்ஸ் மற்றும் சந்திரனில் வாழத் தேவையான வளங்களை அறுவடை செய்தற்கான வழிமுறைகள் ஆக்சிஜன் மற்றும் எரிசக்தி ஆதாரங்கள் முதலியவை அடங்கும்.

நிதியின் பெரும்பகுதி க்ரெயொஜெனிக் (ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எஞ்சின்) உந்துவிசைகளை ஆராய்ச்சி செய்யும் நிறுவனங்களுக்குச் சென்றுள்ளது. இந்த உறைந்த திரவங்கள் விண்கலங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்த உகந்தவை ஆகும்.

அவற்றில் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு நட்சத்திரக் கப்பல் மூலம் வாகனத் தொட்டிகளுக்கு இடையில் பத்து மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை மாற்றுவதற்கான முறையைச் செய்து பார்ப்பதற்கு $5.32 கோடி (சுமார் ரூ.399 கோடி) பெற்றுள்ளது என நாசா அறிவித்துள்ளது.

நாசாவானது நோக்கியாவின் அமெரிக்கத் துணை நிறுவனமான பெல் லேப்ஸ்க்கு வழங்கிய $1.41 கோடி (சுமார் ரூ.105 கோடி) ஒப்பந்தம் நாசாவின் ஆர்டமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தின் படி நிலவிற்கு 2024-க்குள் முதலில் ஒரு பெண்ணையும் அடுத்து ஒரு ஆணையும் அனுப்புவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் விண்வெளி வீரர்கள் விரிவான சோதனைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்வது சாத்தியமாகும். மேலும் இது செவ்வாய் கிரகத்திற்கான முதல் மனிதப் பயணத்தை மேற்கொள்வதற்கு உதவியாக அமையும் என நாசா எதிர்பார்க்கிறது.

நோக்கியாவின் நெட்வொர்க் உபகரணங்கள் 2022-ன் பிற்பகுதியில் உள்ளுணர்வு இயந்திரங்களால் கட்டப்பட்ட லுனார் ஹாப்பர் (நிலா வாகனம்) எனும் இயந்திரத்தைப் பயன்படுத்தி சந்திரனின் மேற்பரப்பின் தொலைவில் அமைக்கப்படும் என்று நோக்கியா அறிவித்துள்ளது.

இந்த நெட்வொர்க்கானது விண்வெளியில் நிறுவப்பட்ட பின்பு அதுவே சுய கட்டமைப்பு செய்து கொள்ளும். மேலும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள வயர்லெஸ் தொழில் நுட்பத்தால் முக்கியக் கட்டளைகள் மற்றும் கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள், ரோவர்களின் (விண்வெளி வாகனம்) தொலைக் கட்டுப்பாடு, நிகழ்நேர வழிசெலுத்தல் மற்றும் உயர்தர வீடியோ ஸ்ட்ரீமிங் ஆகியவற்றை மேற்கொள்ள முடியும் என்று தன் அறிக்கையில் நோக்கியா நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 4G நெட்வொர்க்கை அதிவேக 5G நெட்வொர்க்காகப் புதுப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்