Aran Sei

டிக்டாக்கிற்கு பதில் இனி ‘யூட்யூப் ஷார்ட்ஸ்’. கூகுளின் புதிய அறிமுகம்

டிக்டாக் மீதான தடையை பயன்படுத்தி, கூகிள் நிறுவனம், யூட்யூப் ஷார்ட்ஸ் எனும் சிறிய காணொளி பதிவேற்றத்திற்கான, புதிய செயலியை இந்தியாவில் வெளியிட உள்ளது.

இந்த செயலி டிக்டாக்கின் மிகவும் பிரபலமான பல அம்சங்களைப் பிரதிபலிக்கும். இதில் 15 வினாடி காணொளிகளை உருவாக்கி பதிவேற்றலாம். உரிமம் பெற்ற இசை மற்றும் பலவற்றைச் சேர்க்கலாம்.

“இந்த காணொளிகளுக்கான இசை மியூசிக் பிக்கர் அம்சத்தின் மூலம் கிடைக்கும். இதில், தற்போது 1 லட்ச பாடல்கள் உள்ளன. மேலும், பல பாடல்களை இந்த பட்டியலில் இணைக்க, இசைக் கலைஞர்கள், லேபிள்கள் மற்றும் வெளியீட்டாளர்களுடன் பணியாற்றிவருகிறோம்” என்று யூட்யூப் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் கூறியுள்ளது.

யூட்யூப் ஷார்ட்ஸ் முழுமையான ஒரு தனிப்பட்ட செயலியாக இருக்காது. இந்திய பயனாளிகளுக்கு, முக்கிய யூடியூப் செயலியுடன் இணைக்கப்படவிருக்கும் இந்த சேவை, “கிரியேட் – உருவாக்கு” பட்டனை கொண்டு தோன்றும்.

ஃபேஸ்புக் நிறுவனம் டிக்டாக்கை போன்ற “ரீல்ஸ்” அம்சத்தை இன்ஸ்டாகிராமில் இணைத்ததற்கு பிறகு, கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஷார்ட்ஸை போன்று ரீல்சுக்கும் தனிப்பட்ட செயலி இல்லாத நிலையில், ரீல்ஸ் இன்ஸ்டாகிராம் செயலியில் பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்டாக்கின் “பார் யூ – உங்களுக்காக” அம்சத்தை நகலாக்க, இரண்டு அமெரிக்க நிறுவனங்களும், இதுவரை முயற்சிக்கவில்லை. மாறாக, பயனாளிகளை வென்றெடுக்க தங்களின் சொந்த அம்சங்களை நம்பியுள்ளார்கள்.

இந்தியாவில், இமயமலையின் லடாக் பிராந்தியத்தில் ஏற்பட்ட எல்லை மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை மாதம் டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. டிக்டாக் சீன நிறுவனத்தின் செயலி என்பதால், புவிசார் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த போட்டி உருவாகி உள்ளது.

தடைக்கு முன்னரே, இந்தியாவில் டிக்டாக் ஒரு நிலையற்ற தன்மையில் தான் இருந்தது. டிக்டாக்கை பொறுத்தவரை இந்தியா, 1.20 கோடி பயனர்களைக் கொண்ட மிகப்பெரிய வெளிநாட்டு சந்தையாக இருந்தது. எனினும், இது இளைஞர்களுக்கு மோசமான வகையில் வழிகாட்டுகிறது எனும் அச்சத்தினாலும், மக்கள் ஆபத்தான சண்டை காட்சிகளை மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார்கள் எனும் அச்சத்தினாலும் இந்த செயலி பல தடைகளை சந்தித்துள்ளது.

யூட்யூப் ஷார்ட்ஸ்-ல் வரும் வாரங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மேலும் பல அம்சங்களை இணைக்க உள்ளதாக யூட்யூப் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்