Aran Sei

டெல்லி கலவரம் – பயம் பாதுகாப்பின்மை காரணமாக பள்ளியை விட்டு மரசாக்களில் சேரும் மாணவர்கள்

டகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 2020 ல் நடந்த, இஸ்லாமியர்களுக்கெதிரான கலவரம் குறித்த அச்சம் இஸ்லாமிய மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இன்னமும் அகலாத நிலையில், அஸ்ஸாமில் ஆளும் பாஜக அரசு, ஏறத்தாழ 600 மதராசாக்களை (இஸ்லாமிய பள்ளிகள்) மூடும் பரிந்துரைக்கு கடந்த மாதம் ஒப்புதல் கொடுத்துள்ளதால், நல்ல கல்விக்கு தங்களுக்கிருக்கும் கடைசி வாய்ப்புக்கும் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக டெல்லி முஸ்லீம்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.

குடியுரிமை திருத்த சட்டம் (நேரடியாகவே முஸ்லீம்களுக்கெதிரானது), அதற்கெதிராக நடந்த போராட்டங்களையொட்டி நடந்த கலவரங்கள் என, கடந்த ஒரு வருடமாக நடக்கும் நிகழ்வுகளால் இஸ்லாமியர்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். கலவரங்கள் குறித்த விசாரணையில் டெல்லி காவல்துறையின் அணுகுமுறை வேறு பாரபட்சமாக இருக்கும் நிலையில், கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகளும் மூடப்பட்டதால் வடகிழக்கு டெல்லியை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் பாதுகாப்பு கருதி அரசு/தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, மசூதிகளிலும், மதராசாக்களிலும் சேர்ந்து வருகின்றனர்.

கராவல் நகரைச் சேர்ந்த 15 வயது மொகம்மது தலிப், அரசு நடுநிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுத இருந்தவர். ஆனால் அவரது பள்ளியும் பயிற்சி நிலையமும், இந்துக்கள் அதிகமிருக்கும் பகுதியில் இருப்பதால், அவர் தற்போது பள்ளியிலிருந்து வெளியேறி மதராசாவில் சேர்ந்துள்ளார்.

கலவரத்தின் போது ராம பக்தர்கள் (உலகை காக்கும் விஷ்ணுவின் அவதாரமான ராமரை வணங்குபவர்கள்) தலிப்பின் வீட்டில் கல்லெறிந்ததில், அவரது இடது காலில் கடும் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளதோடு அவரது குடும்ப உறுப்பினர்களும் காயமடைந்துள்ளனர்.

மங்கலான ஒளியில் தகர கொட்டகையில் நடக்கும் மதராசாவில், தற்போது வகுப்புகள் தொடர்ந்து நடக்கின்றன. ஜோரிபூரை சேர்ந்த மொகம்மது சாருக், தன்வீட்டு மொட்டை மாடியிலிருந்து கண்ட கலவரக்காட்சிகளின் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

“இனி நான் மதராசாவுக்கு மட்டுமே செல்வேன், இந்து மாணவர்களை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது” என்றவர், அவரது முன்னாள் பள்ளியில் பெரும்பான்மையாக இந்து மாணவர்கள் இருந்ததையும், அந்த பள்ளி இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அமைந்திருந்ததையும் நினைவுகூர்கிறார்.

அவரது இந்து நண்பன், கலவரங்களுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட போதும், அவர்களது நட்பு பழையபடி தொடர்வது சந்தேகமே என்கிறார். ஏனென்றால் இந்து கோவில்களும், காவிக்கொடியும், மந்திரங்களும் அவர் மறக்க நினைக்கும் நிகழ்வுகளை அவருக்கு திரும்பத் திரும்ப நினைவூட்டுகின்றன. தனக்கு இஸ்லாத்தில் பெரிதாக ஆர்வம் இல்லாதபோதும், இஸ்லாமியர்கள் திட்டமிட்டு தாக்கப்படுவதால், முன்னெப்போதையும் விட தற்போது கூடுதலாக இஸ்லாமியராக உணர்வதாக தெரிவிக்கிறார்.

‘இங்குள்ள மாணவர்கள் எங்களைப் போன்றவர்கள்’

11 வயதான அப்துல் ரெஹ்மான், கராவல் நகரிலிருந்த பள்ளியிலிருந்து வெளியேறியவர். அவர் திரும்பவும் அந்த பள்ளிக்கு செல்வதை விரும்பவில்லை, இஸ்லாமிய மாணவர்களுடன் படிப்பதையே விரும்புகிறார். முகமூடி அணிந்த நபர்கள் வீடுகளுக்கு தீயிட்டதையும், கல்லெறிந்ததையும் கண்டு அச்சமுற்று பல மாதங்கள் வெளியே விளையாடக்கூட செல்லாமல் இருந்ததை நினைவுகூர்கிறார்.

அப்துல் ரெஹ்மானின் தந்தை ஹாஜி மொஹம்மத் இலியாஸ் “கோவில்களிலிருந்து ஜெய் ஸ்ரீராம் ஒலி கேட்டாலே குழந்தைகள் பயப்படுகின்றனர். இந்த கலவரங்கள் இந்து வேறு முஸ்லீம்கள் வேறு என்ற வேற்றுமையை குழந்தைகளுக்கு கூட உணர்த்தியிருக்கிறது” என்கிறார்.

மதராசாவில் இஸ்லாமிய பாடங்களுடன் சேர்த்து ஆங்கிலம், கணக்கு மற்றும் இந்தி பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் மதராசாவுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றொர்களுக்கு, கல்வியை விடவும் பாதுகாப்பு தான் முக்கிய காரணமாக இருக்கிறது என, மதராசாவின் தலைவர் மௌலானா மொகம்மது அக்பர் தெரிவிக்கிறார்.

கலவரங்களில் மதராசாவும் தாக்கப்பட்டு சில வாரங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது. தற்போது வழக்கமாக பயின்ற மாணவர்களும், வேறு பள்ளிகளிலிருந்து மாற்றலாகி வந்த புதிய மாணவர்களும் இங்கு பயில்கின்றனர்.

ஷிவ் விகாரின் எஸ்.இ.எஸ் பள்ளியில் பயின்ற 13 வயது சிறுமி அலியா சைஃபி, தனது தந்தையின் மிதிவண்டி பழுது நீக்கும் கடை, கலவரக்காரர்களால் எரிக்கப்பட்டதால் தொடர்ந்து பள்ளி செல்ல தனது குடும்பத்தினரிடம் பணமில்லை என்கிறார்.

“நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் போது அவர்கள் ஏன் எங்கள் கடையை எரித்தார்கள்” என்று கேட்கும் சைஃபி, வாள் மற்றும் பெட்ரோல் குண்டுகளுடன் பலர் தன் தந்தையின் கடையை தாக்கியதை மிரட்சியுடன் நினைவு கூர்கிறார்.

சைஃபியின் சக மாணவியான 14 வயது சிம்ரன், ஹனிஃப் ஷெர்பூரிலிருந்த அரசுப்பள்ளியிலிருந்து இங்கு வந்தவர். கலவரத்தை பற்றி நினைத்தால் அவருக்கு பற்றி எரிந்த தெருக்களும், வலி மிகுந்த கூக்குரல்களுமே நினைவிலாடுகின்றன. இங்கு உடன் படிப்பவர்கள் அவரைப் போன்றவர்கள் என்பதால் முந்தைய பள்ளியை விட இங்கு பாதுகாப்பாக உணர்வதாக தெரிவிக்கிறார்.

“இந்து மந்திரங்கள் எங்கள் குழந்தைகளை அச்சம் கொள்ளச் செய்கின்றன”

கலவரத்தின் போது லால் பாகில் இருக்கும் தய்யாபா மசூதி எரியூட்டப்பட்டு கடும் சேதமுற்றது. கலவரக்காரர்கள் உள்ளேயிருந்த குரான் பிரதிகளைக் கூட எரித்தனர். இப்போது மறுக்கட்டமைப்பு முடிந்து மீண்டும் பழையபடி மசூதி இயங்கும் நிலையில், இந்த மதராசாவில், கலவரத்திற்கு முன்பிருந்ததை விடவும் அதிக மாணவர்கள் சேர்ந்திருப்பதாகவும், கடந்தாண்டிலிருந்து குரான் கற்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் மசூதியின் இமாம் அப்துல் காலித் காஸ்மி தெரிவிக்கிறார்.

13 வயதான ரெஹான், கராவல் நகரின் பகவதி நினைவு பள்ளியிலிருந்து இங்கு சேர்ந்து குரான் பாடங்களை முறையாக பயிலத் தொடங்கியிருக்கிறார். அவரது வீட்டுக்கு கலவரக்காரர்கள் தீயிட்டதை பார்த்ததிலிருந்து ரெஹானின் நடவடிக்கையில் அதிக மாற்றமிருப்பதாக அவரது தாத்தா கூறுகிறார்.

மேலும் “அந்த நிகழ்வுக்கு பிறகு ரெஹான் மிகவும் பதற்றமாக மாறிவிட்டான். வீதியில் எங்காவது இந்து மந்திரங்கள் கேட்டால் உடனடியாக பதற்றத்தில் கதவுகளை மூடிவிடுகிறான்” என்கிறார்.

கராவல் நகரின் அரசுப்பள்ளியிலிருந்து வெளியேறியிருக்கும் 9 வயதான மொகம்மது உஸ்மான், சக மாணவர்கள் தன்னை முல்லா என கிண்டல் செய்ததால் பள்ளிக்கு செல்வதை எப்போதும் வெறுத்ததாக தெரிவிக்கிறார். (முல்லா உண்மையில் நன்கு கற்றறிந்த இஸ்லாமிய அறிஞர். ஆனால் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தும் நோக்கில் இந்த பெயர் பயன்படுத்தப்படுகிறது).

கலவரத்திற்கு பிறகு தனது அடையாளம் இன்னும் சிக்கலுக்குள்ளாகியுள்ளதை நினைத்து கவலைப்படும் உஸ்மான் “முல்லா, முல்லா” என்று கத்திக்கொண்டே கலவரக்காரர்கள் தனது வீட்டை தீயிட்டு எரித்ததை நினைவுகூர்கிறார்.

கலவரத்திற்கு பிறகும் பழைய பள்ளியிலேயே தொடர்ந்திருந்தால், பழைய நண்பர்கள் இன்னமும் கூடுதலாக தன்னை கிண்டல் செய்திருக்கக்கூடும் என்று நினைக்கும் உஸ்மான், தான் ஒரு முஸ்லீம் என அடையாளப்படுத்திக்கொள்ளவே அச்சமாக இருப்பதாக தெரிவிக்கிறார்.

மதராசாவில் சேர்ந்திருக்கும் பெரும்பாலான மாணவர்கள், இந்து மாணவர்கள் மீதான அச்சம் காரணமாக பழைய பள்ளிகளிலிருந்து வெளியேறினாலும், ஒரு சிலரின் வீடுகள், கடைகள் எரியூட்டப்பட்டதால் தொடர்ந்து படிக்க பணமின்றி வெளியேறியிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களுக்கான சமூகப் பாதுகாப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், நவீன கல்வியை நாடும் இஸ்லாமியர்கள் கூட, இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகளால் மதராசாவை நாட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர் என்பது கவலை தரும் செய்தி.

(www.thewire.in இணையதளத்தில், தருஷி அஸ்வானி எழுதியுள்ள சிறப்புச் செய்தியின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்